நெற்றிக்கண்! 5 - ஜோதிர்லதா கிரிஜா

ஒன்றரைக் கிலோ கத்தரிக்காய்களையும் அரிந்துவிட்டுத் திருதிருவென்று அசடுதட்டிப் போய் விழித்துக் கொண்டிருந்த மருமகள் தாமரையைக் கேலியாய்ப் பார்த்தாள் மாமியார்க்காரி சொர்ணம்.
நெற்றிக்கண்! 5 - ஜோதிர்லதா கிரிஜா

ஒன்றரைக் கிலோ கத்தரிக்காய்களையும் அரிந்துவிட்டுத் திருதிருவென்று அசடுதட்டிப் போய் விழித்துக் கொண்டிருந்த மருமகள் தாமரையைக் கேலியாய்ப் பார்த்தாள் மாமியார்க்காரி சொர்ணம். சொர்ணத்தைப் பொல்லாதவள் என்று சொல்ல முடியாது. சராசரிப் பெண்பிள்ளை.  தன் அம்மாவாகவே இருந்தாலும் அதே கேள்வியைத்தான் தன்னைக் கேட்டிருந்திருப்பாள் என்று அந்த நேரத்தில் தாமரைக்கும் நியாயமான நினைப்பு வந்தது.
"சாரி, அத்தை! ஏதோ ஞாபகம்''... 
"அதைத் தான் நானும் சொன்னேன்... புருசன் வீட்டுக்கு வந்து ஆறு மாசந்தானே ஆகுது? அதுக்குள்ள பொறந்த வீட்டு ஞாபகம் வந்திடிச்சா?'' 
தாமரை பதில் சொல்லாமல் தான் அரிந்திருந்த காய்களில் பாதிக்கு மேல் எடுத்து ஓரமாக வைத்தபின், அடுப்பில் ஓர் ஏனத்தை ஏற்றிவிட்டு முகம் சிவந்தவளாய்த் தன் சமையல் வேலையைத் தொடர்ந்தாள்.
தாமரைக்குச் சமைத்துப் பழக்கமே கிடையாது. எனினும் அவள் கல்லூரியை விட்டு நின்ற மறு நாளிலிருந்தே அவளுக்கு அவள் அம்மா முன்யோசனையுடன் எளிய சமையல் முறை
களையும், சில முக்கியமான பதார்த்தங்களின் செய்
முறையையும் சொல்லிக்கொடுக்கத் தொடங்கிவிட்டாள்.  அது இப்போது தாமரைக்குக் கைகொடுத்தது. "பணக்கார வீட்டுப் பொண்ணானதுனால ஒரு காப்பி கூடப் போடத் தெரியல்லே' என்று அவள் மாமியார் குறை சொல்லித் தோள்பட்டையில் "ணங்'கென்று தன் முகவாயை இடித்துக்கொள்ளும் வாய்ப்பை அவள் அம்மாவின் முன்ஜாக்கிரதை தட்டிப் பறித்துவிட்டது.
"இன்னைக்கு நான் வழக்கத்தை விடவும் ஒரு அரை மணி போல முன்னதாக் கௌம்பணும், தாமரை! சமையல் முடிஞ்சிடும் இல்லே?'' என்று கேட்டவாறு தலையைத் துவட்டிக்கொண்டு வந்து நின்ற கணவனை அவள் ஏறிட்டாள்.
"ஆயிடும்ங்க. கத்திரிக்காய்க் கறி வதங்கிட்டு இருக்கு. சாம்பாரும் ரசமும் ஆயிடிச்சு. அடுப்பைப் பெரிசா எரியவிட்டாத் தீந்துது''... 
"தீந்துது' இல்லே.  கிளறிக்கிட்டே இருக்கல்லேன்னா, "தீய்ந்து'டும்'' ...  என்று சொன்ன மகனை சொர்ணம் பெருமையாய்ப் பார்த்தாள்.
தாமரைக்கும் சிரிப்பு வந்தது. அவள் புன்னகையுடன் கை யெடுக்காமல் கறியைக் கிளறலானாள்.
"வடிவேலுவுக்குச் சமையல்கட்டு சமாசாரம் அத்துபடியாக்கும்! சின்ன வயசிலேர்ந்தே சமையக்கட்டே கதின்னு என்னைச் சுத்திச் சுத்தி வந்துக்கிட்டு இருந்தவனாச்சே! அதான் ஒண்ணொண்ணும் அவன் மனசில பதிஞ்சு போயிருக்குது!'' 
"இப்ப உன்னைச் சுத்திச் சுத்தி வந்துக்கிட்டு இருக்கான்' என்று தன் மாமியார் ஆற்றாமையுடன் தன் மனத்துள் பொருமிக்கொண்டிருக்கிறாள் போலும் என்று தாமரை நினைத்துச் சிரித்துக்கொண்டாள்.
வடிவேலுவும் சிரித்துக்கொண்டே தன் அலுவலைப் பார்க்க அவ்விடம் விட்டு அகன்றான்....மேஜை மீது பதார்த்தங்களைப் பரப்பி வைத்த பின், "என்னங்க! நீங்க சாப்பிட வரலாம்!' என்று அவள் குரல் கொடுத்ததும், அதற்கென்றே காத்துக்கொண்டிருந்த வடிவேலு விரைந்து வந்து தட்டத்தின் முன் அமர்ந்துகொண்டான்.
முதலில், கத்தரிக்காய்க்கறியின் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக்கொண்டான். பின்னர், "உன்னோட  அத்தை எங்கே?''  என்றான்.
"குளிக்கப் போயிருக்காங்க,  என்று அவள் சொன்னதும், கத்தரிக்காய்ப் பொரியல் பிரமாதம்''... என்றவன் "துவாலையை மறந்து விட்டதாய்ச் சொல்லிக் கொண்டு திடீரென்று சொர்ணம் அங்கே பிரசன்னம் ஆனதும்,  என்ன இருந்தாலும் எங்கம்மா பண்ற பொரியல் மாதிரி இல்லே''!  என்று சொல்லிவிட்டு, சொர்ணத்துக்குத் தெரியாமல் கண் சிமிட்டினான்.
தாமரைக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டாள். வடிவேலு அவ்வப்போது இப்படி இரட்டை வேஷம் போடுவது அவளுக்கு அவ்வளவாக ரசிக்கவில்லை யாயினும்,  "மனைவிக்கும் அம்மாவுக்கும் இடையில் சிக்கிக்கொள்ளும் ஆண்களுக்கு வேறு வழி கிடையாது' என்பதைப் புரிந்து கொண்டவளாதலால், அதை அவள் பாராட்டாமல் இருந்தாள்.
வடிவேலு நல்லவனாக இருந்தது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. தன்னைப் போலவே, அவனுக்கும் காதல் தொடர்புள்ள ஒரு கடந்த காலம் இருக்குமோ என்று அவள் தனக்குள் எப்போதாகிலும் நினைத்துக்கொள்ளுவது உண்டு. ஆனால் அவனது சிரிப்பு, கலகலப்பு, குறும்புப் பேச்சுகள் ஆகியவை அப்படி எதுவும் இருக்காது என்று அவளை நினைக்க வைத்தன. தனக்கு மட்டும்தான் அப்படி ஒரு கடந்த காலம் உள்ளதோ என்னும் கேள்வி அவ்வப்போது அவளை அலைக்கழிப்பதுண்டு. அது தெரிய வந்தால் வடிவேலுவுக்கு எப்படி இருக்கும், அதை அவன் எப்படி எடுத்துக்கொள்ளுவான் என்பதைப் பற்றி அவளால் எதுவும் ஊகிக்க முடியவில்லை.
அவளைப் பொறுத்த வரையில் தாலிகட்டிய கணவனுக்கு உண்மையாக இருக்க வெண்டும், அவனிடமிருந்து எதையும் மறைக்கக்கூடாது என்பதே அவளது எண்ணமாக இருந்தது. ஆனால், திருமணம் என்பது ஆனபிறகு அதைப் பற்றி அவனிடம் கூறுவது அசட்டுத்தனம் என்று நினைத்தாள். கூறுவதுதான் நியாயமெனில், திருமணம் ஆவதற்கு முன்பே அதை அவனுக்குச் சொல்லியிருந்திருக்க வேண்டும் என்கிற நினைப்பும் அவளுக்கு வந்தது. "இப்படியாக எனக்கு ஒரு கடந்த காலம் இருக்கிறது. நான் விரும்பியவனை மணந்து கொள்ள என் வீட்டில் சம்மதம் கிடைக்காததால், நான் உங்களை மணந்துகொள்ளச் சம்மதித்திருக்கிறேன். அதில் உங்களுக்கு மறுப்பு உண்டா' என்பதை அவரைச் சந்தித்துச் சொல்லி யிருந்திருக்க வேண்டும். தாலியைக் கழுத்தில் வாங்கிக்கொண்ட பிறகு அதைப் பற்றிப் பேசுவதில் அர்த்தமே இல்லை...' 
"ஏய்! தாமரை! என்ன அப்படி ஒரு யோசனை? ரசம் ஊத்துன்னு சொன்னது காதில விழல்லியா?''  என்று வடிவேலு எதிரே உட்கார்ந்துகொண்டிருந்த அவள் கையில் தட்டிய பிறகுதான் அவள் தன் தலையை உசுப்பிக்கொண்டு, "சாரிங்க!''  என்று கூறியபின் ரசத்தை ஊற்றினாள்.
சோற்றைப் பிசைந்துகொண்டே, "அம்மா-அப்பா நெனப்பு வந்திடிச்சாக்கும்! வேணுமின்னா, போய் ஒரு வாரம் இருந்துட்டு வாயேன்''  என்று அவன் சொன்னதும் அவள் அவனை மரியாதையுடன் ஏறிட்டாள். 
குடும்ப வாழ்க்கையைத் தொடங்கி ஆறே மாதங்கள் முடிந்துள்ள நிலையில் தன்னைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பிவைக்கத் தயாராக இருந்த அவன் அவளது மதிப்பில் உயர்ந்தான்.
"ஆனா, ஒரு வாரத்துல திரும்பிடணும்...''  என்று அவன் சிரித்தான். வடிவேலு மிகவும்  கண்ணியமானவன். கொச்சையாக எதுவும் பேசவே மாட்டான். அவள் தலையைக் குனிந்துகொண்டாள்.    
"அம்மாகிட்ட  நானே சொல்லிடறேன். சாயந்தரம் தயாரா யிரு. நானே பைக்ல கொண்டுட்டுப் போய் விடறேன்''. 
"சரிங்க. ரொம்ப தேங்க்ஸ்''. 
"அம்மாவீட்டுக்குப் போய் ஒரு வாரம் இருந்துட்டு வரேன்னு நீயா சொல்ல மாட்டியா? நான் கேக்கணுமா?'' 
கூடத்திலிருந்த தொலைபேசி அப்போது மணியடிக்கத் தொடங்கியது. அவள் சிரித்துக்கொண்டு எழுந்தாள்.
தொலைபேசியின் மறுமுனையில் இருந்தவர் அவள் அப்பாதான். 
"'சொல்லுங்கப்பா!''
"எப்பிடிம்மா இருக்கே? ''
சமையற்கட்டை ஒட்டிப் போடப்பட்டிருந்த சாப்பாட்டு மேஜையிலிருந்து கூடம் மிகவும் தள்ளி யிருந்ததாலும், வடிவேலு எழுந்து கை
கழுவச் சென்றிருந்ததாலும், தாமரை எரிச்சலாய், "'நான் எப்பிடி இருந்தா என்னப்பா?''  என்று குரலை அடக்கிக்கொண்டு ஆத்திரமாய் வினவினாள்.
"அங்க பக்கத்துல யாரும் இல்லியா? மருமகப்பிள்ளை ஆபீசுக்குக் கௌம்பிப் போயாச்சா?'' 
"யாரும் பக்கத்துல இல்லே. உங்க மருமகப்பிள்ளை இருக்காரு.  ஆனா, சாப்பிட்டுட்டுக் கை கழுவப் போயிருக்காரு.  அத்தை குளிச்சுக்கிட்டு இருக்காங்க''. 
"ஜாக்கிரதைம்மா. அவங்க காதுல எதாச்சும் விழுந்து வைக்கப் போகுது. அப்பால உனக்குத்தான் தொல்லை!'' 
"பெத்த பொண்ணு மேல அந்தக் கரிசனமாச்சும் இருக்கே...''  என்ற அவள், அவரு இதோ வந்துக்கிட்டே இருக்காருப்பா!''  என்ற பின், 
"ஃபோன்ல யாரு?''  என்று கேட்டுக்கொண்டு வந்த வடிவேலுவிடம், "எங்கப்பாதான் பேசுறாரு...  அப்பா! உங்க மருமகப்பிள்ளை வந்தாச்சு.  ரெண்டொரு நிமிஷத்துல பேச்சை முடிச்சுக்குங்க.  அவருக்கு ஆஃபீசுக்கு லேட்டாயிடும்''  என்றவாறு ஒலிவாங்கியை வடிவேலுவிடம் நீட்டினாள்.
வடிவேலு, "மாமா! எப்பிடி இருக்கீங்க?...''  என்று விசாரித்தான்.
"நல்லாருக்கோம், மாப்பிளே.  நீங்கல்லாம் எப்பிடி இருக்கீங்க?'' 
"நாங்க எல்லாரும் சவுக்கியம். இன்னைக்கு சாயந்தரம் நான் தாமரையைக் கூட்டிக்கிட்டு வறேன்.  தாமரையோட அம்மாகிட்ட சொல்லி நல்ல சமையலாப் பண்ணச் சொல்லுங்க.  ராத்திரி அங்கதான் எங்களுக்குச் சாப்பாடு!'' 
"நல்ல சமையலா! அவ என்னைக்கு நல்ல சமையலாப் பண்ணிப் போட்டிருக்குறா?...'' 
"இங்க தாமரை பண்ற சமையல்லேருந்தே அது புரியுது.  அது சரி, அவங்க அங்க உங்க பக்கத்துல இல்லியாக்கும்!'' 
"நான் வெளியிலேர்ந்து பேசுறேன்''. 
"அதானே பாத்தேன்!'' 
"'விளையாட்டுப் பேச்சு இருக்கட்டும், மாப்பிளே! உங்க அத்தை கிட்ட ஃபோன் போட்டுச் சொல்றேன் இப்பவே, நல்ல சமையலாப் பண்ணிவைக்கச் சொன்னீங்கன்னு! சரியா?'' 
"சரி. ஆனா நான் சொன்னது தமாஷுக்கு. அவங்க கிட்ட எதுவும் விளையாட்டாக் கூடச் சொல்லிடாதீங்க, மாமா.'' 
"சொல்லவே மாட்டேன். சொல்லிட்டு அப்பால நான் எங்க போறது?'' 
"தாமரை கிட்ட பேசுறீங்களா?'' 
"பேசுறேன். நீங்க கௌம்புங்க. ரொம்ப நேரம் பேசாதீங்கன்னு தாமரை சொல்லிச்சு... ரிசீவரை அது கிட்ட குடுங்க.'' 
" இந்தா தாமரை. பிடி''! 
"சொல்லுங்கப்பா''. 
"'சாயந்தரம் ரெண்டு பேரும் இங்க வர்றீங்களாமே? ரொம்ப சந்தோஷம்மா. ராத்திரி இங்கயே சாப்பாடுன்னு நான் சொல்றதுக்கு முந்தியே மருமகப் பிள்ளை சொல்லிட்டாரு.'' 
"சரிப்பா.  ஆனா கத்தரிக்காயில எதுவும் பண்ண வேணாம்னு அம்மா கிட்ட சொல்லிடுங்க.  ஏன்னா இன்னைக்கு காலையிலதான் கத்தரிக்காய்ப் பொரியல் பண்ணியிருக்கு.'' 
"சரிம்மா.  வேற ஒண்ணும் இல்லியியே? வச்சுடட்டுமா?'' 
"சரிப்பா.''     
"இதற்குள் திரும்பியிருந்த வடிவேலு, பொண்ணரசி அப்பா கிட்ட அதுக்குள்ளாறவா பேசி முடிச்சிடிச்சு?''  என்றான்.
"அதான் சாயங்காலம் அங்க போகப் போறமே! அப்ப பேசினாப் போச்சு...  அது சரி,  அம்மா கிட்ட சொல்லிட்டீங்களா?நாம அங்க போகப் போறோம்னு?'' 
"ஓ! குளியலறைக் கடவைத் தட்டிச் சொல்லிட்டேன்.'' 
"என்ன சொன்னாங்க?'' 
"மகராசனாப் போயிட்டு வான்னாங்க.'' 
"என்னை ஒரு வாரம் போல அங்க இருந்துட்டு வரச் சொல்லியிருக்கிறதைப் பத்தியும் சொன்னீங்கல்லா?'' 
"சொல்லாம இருப்பேனா? சொல்லிட்டேன், சொல்லிட்டேன்.'' 
"அதுக்கு அம்மா ஒண்ணும் சொல்லல்லியா?'' 
"சரி, சரின்னாங்க. நான் போன பிற்பாடு உங்கிட்ட ஏதாவது   கேப்பாங்களோ என்னமோ!''             
"கேட்டா என்னன்னு சொல்ல?''
"அம்மா-அப்பாவைப் பாக்கணும் போல இருக்கான்னு நான் கேட்டதாகவும் நீ ஆமான்னு சொன்னதாகவும் சொல்லிடு!'' 
"எவ்வளவு நல்ல மனசு இவருக்குத்தான்!'' என்று எண்ணிய தாமரைக்குக் கண்கள் கலங்கின. 
 -  தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com