பைக் பெண்கள்!

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை மோட்டார் பைக்கில் 156 மணி நேரத்தில் சென்றடைந்ததாக லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவான முந்தைய சாதனையை
பைக் பெண்கள்!

கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை மோட்டார் பைக்கில் 156 மணி நேரத்தில் சென்றடைந்ததாக லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவான முந்தைய சாதனையை முறியடிக்க மங்களூரைச் சேர்ந்த சுப்ரா ஆச்சார்யா மற்றும் அம்ருதா காசிநாத் ஆகிய இரு பெண்கள் கன்னியாகுமரியிலிருந்து செப்டம்பர் 4-ஆம் தேதி பைக்கில் தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

கன்னியாகுமரியிலிருந்து தொடங்கும் இந்த நீண்ட தூர நெடுஞ்சாலை பயணத்தில் தினமும் 800 கி.மீ. தூரம் என்ற கணக்கில் மத்திய இந்தியா மார்க்கத்தில் பெங்களூரு, ஹைதராபாத், நாக்பூர், ஜான்சி, ஆக்ரா, தில்லி, சண்டிகர், மணாலி வழியாக லீ சென்றடைவதென்றும், வழியில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களையும் கடப்பதன் மூலம் 4 ஆயிரத்து 51 கி.மீ. தூரம் ஆகுமென்றும் சுப்ரா ஆச்சார்யா கூறினார். மோட்டார் பைக் ஓட்டுவதில் உள்ள ஆர்வமே சுப்ரா ஆச்சார்யாவையும், அம்ருதா காசிநாத்தையும் இணைத்துள்ளதாகக் கூறலாம். கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களிருவரும் சேர்ந்து இதுபோன்ற தொலைதூர பைக் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். ஏழாண்டுகளாக அட்வெஞ்சர் டூரிஸத்தில் அனுபவம் பெற்ற எம்.பி.ஏ. பட்டதாரியான சுப்ரா, 2015-ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிள் - டிராவலிங் கம்பெனியொன்றை சொந்தமாக நிறுவி 400-க்கும் மோட்டார் பைக் வீரர்களை அமர்த்தி இந்தியா - பூடான் - ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளில் 45-க்கும் மேற்பட்ட பயணங்களை நடத்தியுள்ளார்.

"எதையுமே சாதனையாக்க வேண்டுமென்பதே என் ஆசை. என்னுடைய கனவுகளுக்கு வானமே எல்லை'' என்று கூறும் சுப்ராவுடன், இரண்டாண்டுகளுக்கு முன் கை கோர்த்த அம்ருதா, இதுவரை 18 மாநிலங்களில் 30 ஆயிரம் கி.மீ. தொலைவு பல்வேறு பைக் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இமாலயா - லடாக் மற்றும் ஸ்பிதி பள்ளத்தாக்கு, ரேன் ஆஃப் கட்ச், குஜராத் - பெங்களூரு - பூடான் போன்ற இடங்களுக்கு ஆபத்தான பயணங்களை மேற்கொண்ட அம்ருதாவிடம் சொந்தமாக பைக் இல்லை என்றாலும், "என்னுடைய சாதனைக்கு இது எந்த வகையிலும் பின்னடைவை ஏற்படுத்தியதில்லை'' என்கிறார்.

தற்போது இருவரும் மேற்கொண்டுள்ள பைக் பயணத்திற்காக கேடிஎம் ட்யூக் 390 என்ற மோட்டார் பைக்கையே தேர்ந்தெடுத்துள்ளனர். தடங்கல் இல்லா தொலைதூரப் பயணத்திற்கு ஏற்ப பைக்கில் சில மாற்றங்களையும், வசதிகளையும் செய்துள்ளனர். பைக் சீட் அமைப்பு, கூடுதல் பெட்ரோல் கேன், லக்கேஜ் வைக்க இடவசதி, விடியற்காலை மூட்டம், புழுதிக்காற்று போன்ற நேரங்களில் பாதை தெளிவாகத் தெரிய சக்தி வாய்ந்த ஹெட்லைட்கள், மழைக்காலம் என்பதால் ரெயின் ப்ரூஃப் லக்கேஜ் என தேவைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்பாடு செய்துள்ளனர். மணாலியிலிருந்து பாதைகள் மோசமாக இருக்குமென்பதால் அதற்கான தனி டயர்களையும் கொண்டு செல்கின்றனர். கன்னியாகுமரி - காஷ்மீர் நீண்ட தூர பைக் பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

"முந்தைய லிம்கா சாதனையை முறியடிக்க வேண்டுமென்பது மட்டும் எங்கள் நோக்கமல்ல. இந்தியாவில் பெண்கள் தனியாகப் பயணம் செல்லும்போது பாதுகாப்பு இல்லை என்ற பயத்தைப் போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதே எங்கள் குறிக்கோள் ஆகும். முன்னெச்சரிக்கை உணர்வுடன் பயணம் செய்பவர் யாராக இருந்தாலும், பாதுகாப்புடன் செல்லலாம் என்பதை குறிப்பாக வழியில் சந்திக்கும் பெண்களிடம் அறிவுறுத்த விரும்புகிறோம்'' என்றார் அம்ருதா.
-பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com