நவதுர்க்கை வழிபாடு

ஒவ்வொரு ஆண்டும் "சரத்' காலத்தில் வரும் ஒன்பது இரவுகளான நவராத்திரியில் "இருளைப் போக்கி ஒளிக்கு அழைத்துச் செல்வாய்' என்று தேவி வழிபாடு செய்வதை
நவதுர்க்கை வழிபாடு

ஒவ்வொரு ஆண்டும் "சரத்' காலத்தில் வரும் ஒன்பது இரவுகளான நவராத்திரியில் "இருளைப் போக்கி ஒளிக்கு அழைத்துச் செல்வாய்' என்று தேவி வழிபாடு செய்வதை பழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அம்பிகையின் அனுக்கிரகத்தைப் பரிபூரணமாகப் பெற்றிட, தேவியின் ஒன்பது வடிவமான நவதுர்க்கை வழிபாடு மிகவும் விசேஷமானது. நவசக்திகளின் இருப்பிடமான நவதுர்க்கைகள்: வாமை, ஜ்யேஷ்டை, ரௌத்ரீ, காளி, கலவி கரணி, பலவிகரணி, பலப்ரதமனீ, சர்வ பூத தமனி, மனோன்மணி ஆகியோராவர். இவர்கள் ஒன்றாய்ச் சேர்ந்தவள்தான் துர்கா எனப்படும் மலைமகள். இந்த துர்கா பரமேஸ்வரியே நவதுர்க்கையாகக் காட்சி அளிக்கிறாள்.

ஒவ்வொரு வடிவமும் ஒரு பிரத்யேகமான காரியத்திற்காகவே ஏற்படுகின்றது என்பதை சில சம்பவங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். சமயத்துக் கேற்றாற்போல், உருவங் கொண்டு காத்திட வந்திடும் "சமய' புரத்தாளாகிய துர்க்கையின் கருணை, கடல் போன்றது. அழிப்பதற்காக மட்டும் வந்தது துர்க்கை அம்சம் என்ற எண்ணம் தவறானது. அறம், பொருள், இன்பம் என்ற மூன்று அடிப்படைத் தேவைகளை அளித்திடும் மாகாளி, மகாலட்சுமி, மகாசரஸ்வதியின் முக்கூடலே துர்க்கையின் வடிவமாகும். அதனாலேயே சச்சிதானந்த்தைப் பெற்றிட இம்மூன்று தேவியர்களையும் வழிபடும் மரபு ஏற்பட்டு, ஒவ்வொரு தேவிக்கும் மும்மூன்று நாட்கள் என பகிர்ந்து ஒன்பதுநாட்கள் கொண்டாடும் நவராத்திரி வைபவம் துவங்கியது.

நவ சக்திகளைக் கொண்ட நவ துர்க்கைகள் ஒன்பது விதமான தத்துவங்களைக் கொண்டிருக்கிறார்கள். வாமை - பிருதிவி தத்வ ரூபிணி, ஜ்யேஷ்டை - ஜல தத்வ ரூபிணி, ரௌத்ரீ- அக்னி தத்வ ரூபிணி, காளி - வாயு தத்வரூபிணி, கலவிகரணி, - ஆகாசத்தவ ரூபிணி, பலவிகரணி பலத்தை விசேஷமாக செய்வது, பலப் பிரதமனி, பலத்தை அழிப்பது, சர்வ பூத தமனீ - ஆத்மாவின் புண்ணிய பாவங்களை அடக்குவது, மனோன்மணி - சிவமூர்த்தி வடிவினள். இந்த ஒன்பது சக்திகளும் பராசக்தியைச் சுற்றி வித்யேச் வரசக்திகள் என்ற பெயருடன் விளங்குகிறார்கள். இந்த நவசக்திகளே வனதுர்கா, சூலினி துர்கா, ஜாத வேதோ துர்கா, லவண துர்கா, தீப துர்கா, அஸீரி துர்கா என ஒன்பது துர்கைகளாக காட்சி அளிக்கிறார்கள்.

வன துர்கா : விந்திய பர்வதம் அகத்திய முனிவர் முன்பு வானளாவி நின்றபோது அவர் இந்த வன துர்க்கையைத் தான் வேண்டினார். இவள் தன்னிடம் சரணடைந்தவர்களைச் சம்காரமாகிய வனத்திலிருந்து காப்பாற்றுவாள். இவள் தங்கத்தாமரையில் வீற்றிருந்து, சங்கு சக்கரம் ஏந்தி, அபயவரத கரத்தோடு, சிரசில் சந்திர கலை தரித்துக் கொண்டு, கடகம், ஹாரம், குண்டலம் அணிந்து சிம்ம வாகனத்தில் வீற்றிருந்து முக்கண்ணுடையவளாய் அருள் பாலிப்பவள்.

சூலினி துர்கா: கொடியவனான திரிபுராசுரனை சம்ஹாரம் செய்ய சிவபெருமான் இவளை வேண்டினார். இவள் சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற தொழில்களைச் செய்பவள்.இவள் சூலபாணியாய் விளங்குவதால் "சூலினி துர்கா' என திருநாமம் பெற்றவள். மேகம் போன்ற நிறம் கொண்டவள். பெரிய கிரீடத்தை சிரசில் தாங்கியிருப்பவள். கோரமான கத்தி, கேடயம், அம்பு, வில், சங்கு, சக்கரம், சூலம் பாசம் ஆகியவற்றை எண் கரங்களில் ஏந்தி, சிம்மத்தின் மீது அமர்ந்து ரட்சிப்பவள்.

ஜாத வேதோ துர்கா : "குமார சம்பவம்' நடந்தபோது இவள் சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட தீப்பொறியைத் தனது கையால் தாங்கி கங்கையில் விட்டவள். இவள் அக்னி வடிவில் விளங்குபவள். மின்னல்போல் ஒளிர்பவள். பயங்கரமானவள், சிரசில் சந்திரகல்லை தரித்து முக்கண்ணோடு கூடி அக்னிஸ்வரூபத்தோடு சங்கு, சக்கரம், கதை கத்தி, கேடயம், அம்பு, வில், பாசம் என எட்டுக் கரங்களோடு சிம்மத்தின் மீது அமர்ந்து அருள்பவள்.

சாந்தி துர்கா: தட்சணின் யாகத்தால் கோபம் கொண்டு ரௌத்திர தாண்டவமாடி உமையவளையே அழித்திட முற்பட்டபோது, ஈசனை சமதானப் படுத்தியவள். நரசிம்மரின் கோபத்தை அடக்கயாராலும் முடியாத காரணத்தால் தேவர்கள் மகாலட்சுமியை நாடி அவள் மூலம் நரசிம்மத்தைச் சாந்தி அடையச் செய்தனர். அவளே இவள். சிரசில் சுடர் முடி அணிந்து, பொன்னாடை தரித்து, சங்கு சக்கரம், கத்தி , கேடயம், அம்பு, வில், கதை, சூலம் அமிர்த கலசம், ரத்னபாத்திரம் ஏந்தி அபய வரத கரங்கள் என பன்னிரு கரங்கள் கொண்டு தேவ கணங்களால் சூழப் பெற்று சாந்தியைத் தருபவள்.

சபரீ துர்கா: அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற சிவனைக் குறித்து தவம் செய்தான். அவனைப் போருக்கு இழுத்து அருள் செய்ய சிவபெருமான திருவுளம் கொண்டார். எனவே, ஒரு வேடனாக ரூபம் தரித்தார். போகும் இடத்தில் நிதானத்தை இழந்து சிவனால் அர்ச்சனைக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதைத் தவிர்க்க இறைவியும் வேடுவச்சியாக இறைவனைத் தொடர்ந்தாள். இவளே சபரீ துர்கா . இடையில் மரவுரி தரித்து, குந்துமணி மாலையணிந்து, மயில் தோகையைக் காதில் அணிந்து இரு கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி அருள்பவள்.

ஜ்வால துர்கா: ஸ்ரீலலிதா பரமேஸ்வரி பண்டாசுரனோடு சண்டையிடும்போது அசுரனின் படை உள்ளே புகாமலிருக்க அக்னி பிரகாரம் அழைத்து ஜ்வாலை மயமாக இந்த துர்க்கை நின்று சக்தி சேனையைக் காத்தவள். ஆதலால் இவள் ஜ்வால துர்கா என்று பெயர் பெற்றாள். அக்னி ஜுவாலையால் சூழப்பட்டு சிம்மத்தின் மீது அமர்ந்து அம்பு, வில், சக்கரம், கத்தி, கேடயம், சூலம், முத்திரை, சங்கு தாங்கிய எண் கரங்களோடு ஜ்வாலிப்பவள். சிம்மத்தின் மீது அமர்ந்து காப்பவள்.

லவண துர்கா: கொடியவனான லவணாசுரனை அழிக்க வேண்டி ஸ்ரீராம பிரான் இந்த துர்க்கையைப் பிரார்த்தித்து, லட்சுமணனை அனுப்பினார். லட்சுமணன் வெற்றி கண்டதால் இவளுக்கு இந்தத் திருநாமம் ஏற்பட்டது. சங்கு, சக்கரம், கத்தி, சூலம் இவைகளை ஏந்தி முக்கண்ணோடு சூரியனாய் பிரகாசிப்பவள். சிவந்த சரீரமுள்ளவள்.

தீப துர்கா: இருள் என்ற அந்தகாரமே அறியாமை. அஞ்ஞானம் அகல் விளக்கு போன்ற ஞானம் அவசியம். இந்த ஞானத்தைப் பெற நாம் எவ்வளவுதான் முயன்றாலும் அவள் அருள் இல்லாமல் அடையமுடியாது. குண்டலினி யோகத்தில் ஈடுபட்ட யோகிகளுக்கு தீப துர்கா அவர்கள் இதயத்திலுள்ள அஞ்ஞானத்தைப் போக்கி ஞானஒளி வீசச் செய்கிறாள். இந்த அம்பிகையின் ஆத்மா. உள்ளத்தில் விள்கொளி போல இந்த ஆத்மா விளங்குகிறது. செந்தாமரை போன்ற நிறத்தவளான இவள் தீபச்சுடரில் ஜ்வலிப்பவள். சங்கு, சக்கரம், அம்பு, வில், சூலம், கதை, அபயகரம், வரதகரமென எண்கரங்களில் ஆயுதம் தாங்கி சிம்மத்தின் மீது அமர்ந்து காப்பவள்.

அஸீரி துர்கா: மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இம்மூன்று மோகப் பிசாசுகளிடமிருந்து விடுவித்து மோட்சம் என்னும் முக்தியை அளிப்பவள். இவள் வெண்மை நிறத்தவள், நிறைய ஆடை அணிமணிகள் பூண்டு, கரங்களில் சூலம், பாசம் இவற்றைத் தரித்து தாமரை மலரில் அமர்ந்திருப்பவள். பாம்பை பூணூலாகத் தரித்துக் கொண்டு அதர்வன வேதத்தினால் போற்றப்பட்டு என்றும் மகிழ்ச்சியை அளிப்பவள் இந்த அஸீரி துர்கா.

வாழ்க்கையின் துன்பக் கடலிலிருந்து நம்மையெல்லாம் மீட்டிட துர்காம்பிகையின் ஒன்பது அம்சங்களை நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், அடுத்தமூன்று நாட்கள் லட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபடுகிறோம். அறியாமை என்ற மாயையிலிருந்து நம்மை விடுவித்து உய்வு பெற்றிட அருள்புரியம் அன்னை துர்காவை வழி படுவோம்.
- டி.எம்.இரத்தினவேல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com