நெற்றிக்கண்! 6 - ஜோதிர்லதா கிரிஜா

தாமரை பெருமூச் செறிந்தாள்:  "இவருக்கு மனசாலும் துரோகம் நினைக்கக் கூடாது' என்று அந்தக் கணத்தில் அவளுக்குத் தோன்றினாலும், சற்று நேரம் கழித்துத் தன்னறைக்குப் போய்ச் சமையலறை வேலைகளின்
நெற்றிக்கண்! 6 - ஜோதிர்லதா கிரிஜா

தாமரை பெருமூச் செறிந்தாள்:  "இவருக்கு மனசாலும் துரோகம் நினைக்கக் கூடாது' என்று அந்தக் கணத்தில் அவளுக்குத் தோன்றினாலும், சற்று நேரம் கழித்துத் தன்னறைக்குப் போய்ச் சமையலறை வேலைகளின் அலுப்புத் தீர வழக்கம் போல் ஓய்வாகப் படுத்துக்கொண்டதும் அவள் நிறுத்திய கட்டத்திலிருந்து துரை பற்றிய ஞாபகங்கள் அவளுக்குத் துளியும் புரியாத காரணத்தால் அவள் உள்ளத்தில் தொடர்ந்தன.  மனம் கட்டுக்கு அடங்க மறுத்தது. "வெறும் ஞாபகங்கள் மட்டுந்தானே வருகின்றன? நானென்ன அவனை நினைத்து ஏங்கினேனா, இல்லாவிட்டால் அவனோடு சினிமாவில் வருவது போல் கற்பனையில் டூயட் பாடினேனா?' என்று அவள் தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றாள். 
    தனக்கு மட்டும் வாய்ப்பும் வசதியும் கிடைத்திருந்தால், வடிவேலுவின் கையால் தாலி கட்டிக்கொள்ளுவதற்கு முன்னால், அவனை நேரடியாகவே சந்தித்தோ, அல்லது கடிதம் எழுதியோ அவள் தனது கடந்தகாலம் பற்றிக் கண்டிப்பாக அவனுக்குத் தெரிவித்திருந்திருப்பாள்.  வேறு வழியற்ற நிலையில் அவனுக்குக் கழுத்தை நீட்டத் தான் சம்மதித்துள்ளது பற்றி மனம் விட்டுக் கூறியிருந்திருப்பாள்.  அவளை வேண்டாம் என்று அதன் விளைவாக அவன் தானாகவே தன்னை நிராகரித்தாலும் சரி. அல்லது, அதனால் தனக்குப் பரவாயில்லை என்று பெரிய மனத்துடன் ஏற்றாலும் சரி; திருமணத்துக்குப் பிறகு அவனுடனான தன் வாழ்க்கை அமைதியாகவும், குற்ற உணர்வு இன்றியும் கழியும் என்று அவள் நினைத்தாள். ஆனால் அதற்கான வாய்ப்பு அவளுக்கு மறுக்கப்பட்டது. 
துரை தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படையாகவே சொல்லிவிட்டு அவள் எதிரே கணமும் நில்லாமல் விரைந்து சென்று விட்ட அந்தப் புல்லரித்த கணம் அவளுக்கு மறுபடியும் ஞாபகம் வந்தது. அதன் பின்னர் அவள் தன் அப்பாவோடு பேசுவதற்காக அவரது அலுவலகத்தோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதெல்லாம், அப்பா அவரது அறையில் இல்லாவிட்டால் அவனோடு பேசத் தோதாக இருக்குமே என்று அவள்தான் என்னமாய்ப் பரபரத்தாள்! ஆனால் கிட்டத்தட்ட ஒரு வாரம் வரையில் அந்த வாய்ப்பு அவளுக்குக் கிட்டவே இல்லை. இரவெல்லாம் உறங்காமல் அரையுங் குறையுமாய்த் தூங்கிக்கொண்டு கழித்தாளே! 
கடைசியில் அந்த வாய்ப்பு அவளுக்குக் கிட்டியது.  சதாசிவமே ஒரு நாள் தாம் வெளியே உடனே போகவிருப்பதாகவும், திரும்பி வரக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும் என்றும், ஏதேனும் பேச வேண்டுமா என்றும் வினவினார். அவள் தன் அம்மாவிடமும் கேட்டுவிட்டு அப்போதைக்கு ஒன்றுமில்லை என்று தெரிவித்தாள். அப்பா தமது அலுவலகத்தில் இல்லாத அந்த நேரத்தைத் துரையுடன் பேசுவதற்குப் பயன்படுத்த அவள் முடிவு செய்தாள்.
    ஐந்து நிமிடங்கள் கழித்து அவள் தொலைபேசியை இயக்கியதும் ஒரே ஒரு முறை மணியடித்து முடிப்பதற்குள் அதற்கென்றே காத்துக் கொண்டிருந்தவன் போல் துரை ஒலிவாங்கியை  உடனடியாக எடுத்துப் பதில் சொன்னான்.  அவன் குரலில் அச்சம், ஆர்வம் இரண்டுமே ஒருசேர ஒலித்தன. 
"துரை!'
"சொல்லுங்க, தாமரை மேடம்!'
"அந்த "மேடம்' வேண்டாம், துரை! அப்பா கிளம்பிப் போயாச்சா?'
"போயாச்சு,  தாமரை!  சொல்லுங்க.' "அந்த மேடம் வேண்டாம், துரை' என்று தான் கூறிய சொற்களின் எதிரொலியாக அவன் குரலில் சட்டென்று ஓர் உற்சாகமும் ஒரு நம்பிக்கையும் தொற்றிக்கொண்டு விட்டிருந்ததைக் கவனிக்க அவள் தவறவில்லை.  அவனது குரலும் சற்றே நடுங்கியது அந்த மனக்கிளர்ச்சியின் விளைவாகத்தான் என்பதும் அவளுக்கு மிகத் தெளிவாய்ப் புரிந்தது.
ஒருமையில் விளிக்கச் சொன்னால் அவன் அப்போதைக்குக் கேட்க மாட்டான் என்பதால், அந்த விருப்பத்தைச் சொல்லாமல், "அன்னைக்கு நீங்க உங்க மனசில இருந்ததைச் சொல்லிட்டு உடனேயே ஒரு செகண்ட் கூட நிக்காம ஓடிட்டீங்க... எனக்கு முழுச் சம்மதம், துரை'
"ரொம்ப ரொம்ப தேங்ஸ்,  தாமரை!  ஒரு வாரமா நான் பயந்து நடுங்கிட்டு இருந்தேன்.'
"நானும் நடுங்கிட்டுதான் இருக்கேன். அதை எப்படி எங்கப்பாகிட்ட சொல்லப் போறேன்னு நினைச்சாலே குலை நடுங்குது. சொல்லிட்டாலும், அதை எப்படி நாம சாதிக்கப் போறோம்,  துரை?  எங்கப்பாவைப் பத்தி உங்களுக்குத் தெரியுமில்லே?'
"நல்லாவே தெரியும், தாமரை. என் தங்கச்சி கல்யாணம் முடியட்டும்.  அதுக்குப் பெறகு சொல்லலாம் அவர் கிட்ட...'
"யாரு சொல்லப் போறோம், துரை? நீங்களா, இல்லாட்டி நானா?'
"நீங்க எப்படிச் சொல்றீங்களோ, அப்படி!' 
"உங்களுக்கு இதிலே ரொம்பவே தயக்கம் இருக்கும், துரை. அதனால நானே சொல்லிடறேன்.'
"ரொம்ப, ரொம்ப தேங்ஸ், தாமரை!'
"ஆனா, உடனே இல்லே. என் கல்யாணப் பேச்சு வீட்டில கௌம்புறப்ப விஷயத்தைப் பட்னு போட்டு உடைச்சிடறேன்.'
"உங்கப்பாவுடைய  ரீயாக்ஷன் என்னவாயிருக்கும்னு நினைக்கிறீங்க?'
"கரெக்டா ஊகிக்க முடியல்லே.  ஆனா அதுக்கு அவரு சம்மதிக்க மாட்டாருன்றது மட்டும் நிச்சயம்! இதமா, பதமாப் பேசி என்னை வழிக்குக் கொண்டுவரப் பார்ப்பாரா, இல்லாட்டி திட்டு அடின்னு ஆரம்பிப்பாரான்னு தெரியல்லே!'
"சேச்சே. அடிக்கவெல்லாம் மாட்டாரு, தாமரை!'
"சொல்ல முடியாது, துரை! அந்தக் காலத்துல எங்கம்மாவை அடிச்சிருக்காரு. அந்தக் கை என் விஷயத்துல துருதுருக்காதுன்னு என்ன நிச்சயம்?'
"என்னது! உங்கம்மாவை அடிச்சிருக்காரா!'
"ஆமா.  ஆனா அந்தக் கதையெல்லாம் இப்ப என்னத்துக்கு, துரை? அந்தக் காலத்துல அப்பா குடிப்பாராம். குடிகாரங்க செய்யிற வேலை அதானே – பொஞ்சாதியை அடிச்சு நொறுக்குறது? எனக்குக் கொஞ்சம் விவரம் தெரியத் தொடங்கினதும் வீட்டில குடிக்கிறதை நிப்பாட்டிட்டாரு. வெளியில குடிப்பாரோ என்னமோ, யாரு கண்டா?'
"இங்க குடிக்கிறதில்லே, தாமரை! ஒருக்கா, பார்ட்டிகள்லே குடிப்பாரோ என்னமோ..'
"இருக்கும்... அது கிடக்கட்டும்... நீங்க உங்க மனசில இருந்ததைச் சொல்லிட்டு, ஒரு செகண்ட் கூட நிக்காம விறுட்னு போயிட்டீங்க அன்னைக்கு. ஆனா, எனக்கு எப்படிப் படபடன்னு வந்திடிச்சு, தெரியுமா?
"புரியுது.  உங்களைக் கேட்டப்ப எனக்கும் என்னாமாப் படபடன்னு வந்திச்சு, தாமரை!  உங்க மனசில என்ன இருக்கும்னு எனக்குத் தெரியாத நிலையில, அதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னும் சரியாத் தெரியாததால, எனக்குத்தான் ரொம்பவே படபடன்னு வந்திடிச்சு. சத்தம் போட்டு எதாச்சும் ரகளை பண்ணிடுவீங்களோன்னு கூட பயந்துக்கிட்டேதான் பேசினேன். ...'
"சேச்சே!'
"சொல்ல முடியாதுங்க!  தைரியமா அப்படி ஒரு பேச்சைப் பேசிட்டு நான் எப்படி பயப்படாம இருக்க 
முடியும்? ... இருந்தாலும், பேசித்தானே ஆகணும்? அப்பால உங்களைத் தனியாப் பாத்துச் சொல்றதுக்கு எனக்கு சந்தர்ப்பமே கிடைக்காதில்லே?'
"அப்ப, பத்திரிகை குடுக்க வந்தப்ப, சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சரியாயிருந்தா உங்க மனசில இருக்கிறதைச் சொல்லிடுறதுன்ற தீர்மானத்தோடதான் அன்னைக்கு வந்திருந்தீங்க.  இல்லியா?'
"நிச்சயமா.  நான் உங்களுக்குன்னு தனியா ஒரு பத்திரிகையைக் குடுக்க வந்ததே அதுக்காகத்தான், தாமரை!'     தான் மறுமுனையில் மலர்ந்து சிரித்தது அவளுக்கு அப்போது ஞாபகம் வந்தது.       
"என்ன, சிரிக்கிறீங்க?'
"உங்க சாமர்த்தியத்தை நினைச்சுத்தான்! வேற என்ன? நல்ல காலம். எங்கம்மாவும் அப்ப வீட்டில இல்லே.'
"அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காம போயிட்டா என்ன பண்றதுங்கிற பயத்துனால உங்களுக்கு ஒரு லெட்டரும் கையோட எழுதி எடுத்துட்டு வந்திருந்தேன். ஆனா, நேர்லயே சொல்ல முடிஞ்சுட்டதால அதுக்கு அவசியம் இல்லாம போயிடிச்சு.'    
"அந்த லெட்டரை பத்திரமா வெச்சிருக்கீங்கதானே?'
"நீங்க அதைப் படிக்கணும்கிறதுக்காக பத்திரமாத்தான் வெச்சிருக்கேன். சந்தர்ப்பம் மறுபடியும் எப்பவாச்சும் வந்தா  குடுப்பேன்.'
"இப்ப வேணாம், துரை! ..கக.. கல்யாணம் ஆனதுக்குப் பெறகு வாங்கிக்கிறேன். அதுக்கு முந்தி யார் கண்லேயும் அது பட வேண்டாம்.  ஏங்கிட்டயும் குடுக்கவேண்டாம். ஏன்னா, எங்கப்பா கையில மாட்டிச்சுன்னா கிழிச்சுப் போட்றுவாரு. என்னையும்  கிழிகிழின்னு கிழிச்சுடுவாரு. நீங்க எனக்கு எழுதின முதல் லவ் லெட்டரைப் பத்திரப்படுத்தி வைக்க முடியாம போயிடும்.  அதனால, அடுத்து நாம சந்திக்கிறப்ப  அதைக் குடுங்க.  ஆனா படிச்சுட்டு உங்க கிட்டவே திருப்பிக் குடுத்துடறேன். நீங்களே பத்திரமா வெச்சிட்டு இருங்க. சரியா?'
"அப்ப நாம சந்திக்கிற வாய்ப்பை ஏற்படுத்திக்கப் போறோம்ங்குறீங்க?'   
"பின்னே? நாம சந்திச்சுப் பேசிக்க வேணாமா, துரை? பேசி முடிச்சு, தீர்த்துக்க வேண்டிய எத்தனையோ சந்தேகங்களும், கேள்வி-பதில்களும் இருக்கே, துரை?'
"ஆமா, தாமரை. தவிர நமக்குக் கல்யாணம்கிறதா ஒண்ணு ஆகிறதுக்கும் முந்தி நாம எத்தனையோ விஷயங்களைப் பத்திப் பேசணும், தாமரை! உங்க கருத்துகள், எண்ணங்கள் பத்தியெல்லாம் ஆட்டோவில போறப்போ உங்க ஃப்ரண்ட்úஸôட நீங்க பேசினதுலேர்ந்து ஓரளவுக்குத் தெரிஞ்சுக்குற வாய்ப்புக் கிடைச்சிச்சு... ஆனா என் கருத்துகள் பத்தி உங்களுக்கு ஒண்ணுந் தெரியாதில்லே?'
"ஓ! நாங்க எங்களுக்குள்ள பண்ணிக்கிட்ட அந்த சினிமா விமர்சனம் பத்தின ஞாபகத்துலதானே நீங்க பேசறீங்க? அப்ப நான் சொன்ன தடாலடியான கருத்துகள்தான் உங்க மனசில அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கித்துன்னு நான் நினைக்கலாமா?'
துரை  வாய்விட்டுச் சிரித்தான்.  "உங்க முற்போக்கான எண்ணங்களைத் தெரிஞ்சுக்கிறதுக்கு அது ஒரு வாய்ப்பா அமைஞ்சுதுன்றது ரொம்பவே சரிதான். சரியா ஊகிச்சுட்டீங்க, தாமரை! ஆனா, உங்களோட அந்த சினிமா விமர்சனம்தான் என் மனசில உங்க மேல அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்திச்சுன்னு சொல்லிட முடியாது. ஏற்கெனவே என் மனசில பொத்திப் பொத்தி நான் வெச்சிருந்த ஆசையை உங்ககிட்ட சொல்லுறதுக்குத் தேவைப்பட்ட துணிச்சலை அது குடுத்திச்சுன்னு சொல்றதுதான் சரியாயிருக்கும், தாமரை!'
"ஓ! ஆனா உங்க மனசில அப்படி ஒரு எண்ணம் இருந்ததை என்னால கண்டுபிடிக்கவே முடியல்லே, துரை!'
"ஆமா. நான் அடக்கி வாசிச்சுக்கிட்டு இருந்தேன், தாமரை! ரொம்பவே கவனமா யிருந்தேன். உங்க கண்களை நான் நேருக்கு நேராச் சந்திக்கத் துணிஞ்சதே இல்லே. என் பார்வை காட்டிக்குடுத்துடுமோன்னு எனக்கு உள்ளூர ஒரு பயம் இருந்திச்சு. அதான்!'
"நீங்க இது மாதிரி சொன்னதுக்கு அப்புறம் நினைச்சுப் பாக்கிறப்போ, எனக்கும் அது நெனப்பு வருது.  ராணியோடவும், மஞ்சுளாவோடவும் பேசுறப்ப அவங்களை நேருக்கு நேர் பாத்துப் பேசுவீங்க.  ஆனா, என்னோட பேசுறப்ப மட்டும் ஒண்ணு, குனிஞ்சுக்கிட்டு இருப்பீங்க, இல்லாட்டி, என்னைப் பாக்காம வேற எங்கயாச்சும் பார்வையைச் சுழலவிடுவீங்க. இப்பதான் எனக்கு அது நெனப்பு வருது!'  இவ்வாறு சொல்லிவிட்டுத் தாமரையும் வாய் விட்டுச் சிரித்தாள்.      
அந்தச் சிரிப்பில் அவனும் கலந்துகொண்டான். 
சரியாக அந்தக் கணத்தில் சதாசிவம் தள்ளுகதவைத் திறந்து கொண்டு அறைக்குள் நுழைந்தார். முந்தின நாள்தான் கதவு கிறீச்சிடுகிறது என்பதற்காக அதன் கீல்களில் எண்ணெய் ஊற்றியிருந்ததன் விளைவாக அது ஓசை செய்யாததால், அவர் அதைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்ததைத் துரை கவனிக்கவில்லை. 
 - தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com