மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு போராட்டம்!

சக்கர நாற்காலி  உதவியுடன் ரயிலில் பயணம் செய்யவரும் மாற்று திறனாளிகள்  ரயில் நிலையத்திற்குள்  நுழையவோ, ரயிலில் ஏறவோ நம் இந்திய ரயில்வே நிர்வாகம் இதுவரை
மாற்றுத்திறனாளிகளுக்காக ஒரு போராட்டம்!

சக்கர நாற்காலி  உதவியுடன் ரயிலில் பயணம் செய்யவரும் மாற்று திறனாளிகள்  ரயில் நிலையத்திற்குள்  நுழையவோ, ரயிலில் ஏறவோ நம் இந்திய ரயில்வே நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது துரதிருஷ்டமானதாகும். மும்பையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி விராலி மோடி. இது குறித்து, சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளத்தில் கோரிக்கை வைத்த விராலி  சொல்கிறார்:  

" மும்பையில்  வசித்து வரும் மாற்றுத் திறனாளியான எனக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். ஆனால் இந்திய ரயில்களில் மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் வகையில் மடக்கும் வீல்சேர் வசதிகள் இல்லை.  என்னை ரயிலில் ஏற்றிவிடுவதாக கூறி, மூன்று பயணங்களின் போது போர்ட்டர்கள் என்னைத் தொடக் கூடாத இடங்களில் தொட்டும், தடவியும் வண்டியில் ஏற்றிவிட்டது கசப்பான அனுபவமாகும். ரயில் பயணத்தின்போது எழுந்து  டாய்லெட் செல்ல  முடியாது  என்பதால் நான் டயாபர் அணிவதுண்டு. அதை மாற்றுவதற்கு கூட  தனிமை  கிடைப்பதில்லை என்பதால் இரவு நேரத்தில் விளக்குகள் அணைக்கும் வரை காத்திருப்பதுண்டு. ரயில்வே நிர்வாகத்தைப் பொருத்தவரை மாற்றுத் திறனாளிகளை ஒரு லக்கேஜ் போன்றே கருதுகிறது.  இந்த எண்ணம் மாற்றப்பட வேண்டும்'' என்று விராலி மோடி சமூக வலை தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இவரது கருத்துக்கு ஏராளமானோர் இணையதளத்தில் ஆதரவு தெரிவித்திருந்தனர். இத் தகவல் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கவனத்திற்கு சென்று இவருக்கு ஆதரவு தெரிவித்த மேனகா, மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு இத்தகவலை அனுப்பி உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரினார்.

இதற்கிடையில் விராலி மோடியின் கோரிக்கையை  இணையதளத்தில் கண்ட தென்னிந்திய ரயில்வே, அரசின் உத்தரவை எதிர்பார்க்காமல்  உடனடியாக திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் மாற்றுத் திறனாளிகள் வந்திறங்கவும், ரயிலில் ஏறுவதற்கும் வசதியாக அடிப்படை தேவைகளை அமைத்ததோடு, இந்த தகவலை விராலி மோடிக்கும் தெரிவித்தது. அடுத்து கொச்சி ரயில் நிலையத்திலும்  மாற்றுத் திறனாளிகள் வசதிக்கான ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டது.

இது குறித்து விராலி மோடி கூறுகையில்,  என்னுடைய கோரிக்கையை ஏற்று திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தென்னிந்திய ரயில்வே எனக்கு தகவல் அனுப்பி, மேலும் என்னுடைய கருத்துகளை தெரிவிக்கும்படி கேட்டிருந்தது. மாற்றுத்திறனாளிகள் எவ்வவித சிரமும் இன்றி ரயில்களில் பயணிக்க என் மனதில்  தோன்றிய கருத்துக்களை  "வாட்ஸ் அப்'பில் தெரிவித்தேன்.  சாய்வான மேடை வழியே வீல்சேர்களை பயன்படுத்தி ரயிலுக்குள் செல்லும்போது வீல்சேரை மடக்கி கொண்டுபோகும் வசதியை, இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி  தருமென்ற நம்பிக்கை எனக்குள்ளது. 

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நம்முடைய நாட்டில் 26.8 மில்லியன் மாற்றுத் திறனாளிகள் இருப்பது தெரியவந்துள்ளது. என்னுடைய கோரிக்கை ஏற்கப்படும்போது இவர்கள் அனைவருமே பயனடைய முடியும்'' என்றார்.

வீல்சேர் மிஸ். இந்திய அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த முன்னாள்  அழகியும், மாடலுமான விராலி மோடிக்கு திரைப்படங்களில் நடிக்க வேண்டுமென்ற ஆசையும் உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில் நிலையத்தில் மட்டுமின்றி, ரயிலில் பயணிக்கவும்,  டாய்லெட்  வசதி பெறவும், தேவையான வீல் சேர்களை ரயில்வே நிர்வாகம் வழங்கும் வரை போராட விராலி மோடி தீர்மானித்துள்ளார்.

தற்போது தென்னிந்திய ரயில்வே திருவனந்தபுரம், சென்னை ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் முதல் கட்டமாகும்.  லிப்ட், சரிவு பாதை இல்லாத ரயில் நிலையங்களிலும் துரிதமாக  நடவடிக்கை எடுப்பதன் மூலம் எனக்கேற்பட்ட   அனுபவம் மற்றவர்களுக்கு ஏற்படாமல் இருக்கும் என்பதுதான் இம்முயற்சிக்கு காரணம்'' என்கிறார் விராலி மோடி.
 -பூர்ணிமா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com