பெண்கள் சுற்றுலா! ஒரு சர்வே 

பல பெண்கள் இன்று துணிச்சலாக பல இடங்களுக்கு தனியாக பயணிக்கிறார்கள். தோழியருடன் இணைந்து கொண்டு, இன்று உலக அளவில் சுற்றுலா செல்ல பெண்கள் அஞ்சுவதில்லை.
பெண்கள் சுற்றுலா! ஒரு சர்வே 

பல பெண்கள் இன்று துணிச்சலாக பல இடங்களுக்கு தனியாக பயணிக்கிறார்கள். தோழியருடன் இணைந்து கொண்டு, இன்று உலக அளவில் சுற்றுலா செல்ல பெண்கள் அஞ்சுவதில்லை. முன்பெல்லாம் டிராவல் ஏஜென்சிகள், யாத்ரா சர்வீஸ்கள் மூலம் சென்றால், அதில் பயணிப்பவர்கள் ஒன்று கணவன் மனைவியாக இருப்பார்கள் அல்லது வயதான ஆண்களாக இருப்பார்கள். ஆனால் தற்போது இந்த நிலைமை மாறிவிட்டது. பெண்கள் தங்கள் தோழியர், சகோதரியரை இணைத்துக் கொண்டு துணிச்சலாக இந்தியா முழுவதும் ஆன்மிக தலங்களுக்கு பயணிக்கிறார்கள்.

சமீபத்தில் காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில் சென்றபோது அதில் பல 50-70 வயது பெண்கள், தனியாக வந்திருந்தனர். அவர்கள் அனைவரும், காலையில் புறப்படும் முன் முதல் நபர்களாக தயாராக இருக்கின்றனர்.

இன்று மகன்கள், மகள்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, வேலை பார்ப்பதால், இங்கு தாய்மார்கள் தனிமையை உணருகின்றனர். இதிலும் கணவரை இழந்த பெண்கள், ரொம்பவே தனிமையை உணருவதால், அவர்களின் மகள், மகன் வெளிநாட்டிலிருந்தபடியே சுற்றுலா நிறுவனங்களிடம் பேசி, சுற்றுலாவை நிச்சயம் செய்து அனுப்பி வருகின்றனர்.

இன்று இந்த தாய்மார்கள் தனியாகவே நேபாளம், சிங்கப்பூர், மலேசியா ஹாங்காங், தாய்லாந்து. தென் ஆப்பிரிக்கா சென்று திரும்புகின்றனர். இந்த லிஸ்டில் பாலி, மாலத்தீவு, அந்தமான் நிக்கோபார் என பல இடங்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. படுபிசி கணவர்களும், தொழில் அதிபர்களும், தங்களால் செல்ல இயலாவிடினும், துணிந்து மனைவியின் மனதில் தைரியத்தை ஏற்றி அனுப்புகின்றனர்.

இன்று இப்படி பெண்களை மட்டும் இணைத்து சுற்றுலா குறிப்பாக வெளிநாடுகளில் பயணத்துக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனங்களில் The flappen life  மற்றும் பக்கெட் லிஸ்ட் (Bucket List) போன்றவை முன்னணி வகிக்கின்றன. இன்று ரோட்டரி லயன்ஸ் கிளப் உட்பட பல சமூகசேவை இயக்கங்கள், தங்களது உறுப்பினர்களின் மனைவியரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

பெரிய குடியிருப்புகளில் வசிக்கும் பெண்மணிகளும், தாங்களே, சுற்றுப் பயணங்களை, டிராவல் ஏஜென்சிகளுடன் இணைந்து திட்டமிட்டு சென்று வருகின்றனர். இனி இப்படி பயணிக்கும் பெண்கள் அறிந்து செயல்பட சில தகவல்கள் எங்கும் தனியாக செல்லாதீர்கள். குறிப்பாக, சூரியன் மறைந்ததும், கூட்டத்துடனேயே செல்லுங்கள். 

எங்கு பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை, சோஷியல் மீடியாவில் வெளியிட வேண்டாம். நிஜ பணப்பையை மறைத்து, போலி பணப்பையை கையில் வைத்துக் கொள்ளுங்கள். சுற்றுலா இடங்களில், பயணிகளின் பணப்பைகள், மனிதர்களாலோ அல்லது குரங்குகளோ பறித்து, தப்பி ஓட வாய்ப்பு அதிகம். தனியாக தங்குவதையும் வெளியே மேப்பை வைத்துக் கொண்டு தேடுவதையும் தவிர்க்கவும். வெளிநாடுகளில் பயணிக்கும் போது சிலவற்றை அறிந்து, கோபப்படாமல் பயணிப்பது பேசுவது நல்லது. 

உதாரணமாக எகிப்தியர்கள், தங்கள் பெருமை பேசுவர். பாலிவுட் படவுலகம் பற்றி பேசினால் ஆர்வமாய் கேட்பார்கள். டச் மக்கள் மரியாதையாக பழகுவர். சிங்கப்பூர் மக்கள் உதவும் குணங்களை கொண்டவர்கள். துணிச்சலுடன் அணுகலாம். மொராக்கோ மக்களோ பேசிக் கொண்டேயிருப்பார்கள். எந்த நாட்டிற்கு அல்லது ஊர்களுக்கு செல்வதானாலும், முன்கூட்டியே புக் செய்து கொண்டு செல்வது, மேலும் அந்த ஊர் பற்றி, படித்துவிட்டுச் செல்வதும் நல்லது. 
லாட்ஜ்களில் தங்கி, வெளியே பயணிக்கும்போது மறக்காமல் லாட்ஜ் பெயர், முகவரி கொண்ட கார்டை வாங்கிக் கொள்ள மறக்காதீர்கள். மேலும் செல்லும் இடங்களில் ஊர் பற்றி தகவல் புத்தகம், புகைப்படங்களுடன் கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ளவும். ஏனென்றால் பயணத்துக்கு, சில நாட்கள் கழித்து திரும்புவதால், பார்த்த இடங்கள் பல மறந்து விட வாய்ப்பு உண்டு. ஊர் சுற்றுலா புத்தகம் இருந்தால் புகைப் படத்தைப் பார்த்து, நினைவுபடுத்திக் கொண்டு, பயண அனுபங்களை எளிதில் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆகவே, தனியாக செல்லும் பெண்களே, இன்று செல்லும் இடங்களில் என்ன நடக்குமோ என பயப்படத் தேவையில்லை. சுற்றுலா நிறுவனங்கள் இவற்றை கனகச்சிதமாக செய்து தனி பயணங்களை இனிதாக்குகின்றன.

- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com