54 வயதினிலே...! 

சென்னை கோயம்பேடு நகரில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையில் உள்ள குரோம்பேட்டை அடுத்த தி.நகராக உருவாகி வருகிறது
54 வயதினிலே...! 

சென்னை கோயம்பேடு நகரில் இருந்து தாம்பரம் செல்லும் சாலையில் உள்ள குரோம்பேட்டை அடுத்த தி.நகராக உருவாகி வருகிறது என்று கூறினால் மிகையல்ல. தேநீர் கடை முதல் தங்க நகை மாளிகைகள் வரை அனைத்தும் கிடைக்கும் இடமாக, வணிக சந்தையாக மாறி வருகிறது. தி.நகரில் சொந்தமாக கொஞ்சம் இடமிருந்தால் கூட அதை பொன் முட்டையிடும் வாத்து என்று வர்ணிப்பார்கள். அதுபோன்று இந்த நகரமும். இங்கு ஒரு தொழிலைத் தொடங்க வேண்டுமானால் நமக்கு சில லட்சங்களிலாவது முதலீடு செய்ய தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஜிஎஸ்டி சாலையில் இரு புறங்களும் கடைகளாக இருக்கும் குரோம்பேட்டையில் உணவகங்களுக்கும் பஞ்சம் கிடையாது. தள்ளு வண்டி கடை முதல் குளிரூட்டப்பட்ட பல உயர்தர உணவகங்கள் வரை இங்கு உள்ளன. இங்கு "இது நம்ம கிச்சன்' என்ற பெயரில் புதிதாக ஒரு உணவகம் உதயமாகியுள்ளது. இதை நிர்வகித்து வருபவர் ஒரு பெண். ஆம்; ஹோட்டல் தொழிலில் பெண் ஈடுபடக் கூடாதா என்ன? அது அல்ல விஷயம். 54 வயதில் ஹோட்டலை ஒரு பெண் நிர்வகித்து வருகிறார் என்பதே சிறப்புக்குரிய விஷயம். அவருக்கு, அவரது கணவரும், குடும்பத்தினரும் பக்க பலமாக இருந்து வருகின்றனர். எந்த வயதிலும் இல்லத்தரசிகளால் அதுவும் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான, நன்கு தெரிந்த சமையல் கலையில் சாதனை படைக்க முடியும். அதைக் கொண்டு வருமானத்தையும் ஈட்ட முடியும் என்று நிரூபித்து காட்டியுள்ளார் உஷா ரங்கநாதன்.
இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 40 பேர் வரை அமர்ந்து சாப்பிட முடியும். உணவகத்துக்குள் நுழைந்ததும் வித்தியாசமான கலை வேலைபாடு நம்மை ஈர்க்கிறது. தென்னிந்திய உணவுகள், வட இந்திய உணவுகள், பிரத்யேக இனிப்பு வகைகளும் இங்கே கிடைக்கின்றன. பரபரப்பாக இருந்த உஷா ரங்கநாதனிடம் பேசுவோம்:
""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் குரோம்பேட்டையில்தான். பொருளாதாரம் பட்டப்படிப்பை படித்தேன். எனக்கு 10 வயதாக இருக்கும்போதே சமையல் கலை மீது ஆர்வம் பிறந்தது. அப்போதே சமையல் கலையைக் கற்கத் தொடங்கி விட்டேன். திருமணத்துக்குப் பிறகு வீட்டிலேயே டியூஷன் எடுத்துக் கொண்டு சமையல் கலையில் புதிது புதிகாக கற்றுத் தேர்ந்தேன். கொல்கத்தாவில் சில ஆண்டுகள் இருந்ததால் வட இந்திய உணவு வகைகளையும் கற்றறிந்தேன்.
அப்போது சமையல் கலை குறித்து நான் கற்றறிந்தது இப்போது இந்த உணவகத்தை திறம்பட நடத்துவதற்கு பெரிதும் உதவுகிறது. இந்த உணவகத்தை குடும்பத்தினரின் ஆதரவுடன் சேர்ந்து தொடங்கியிருக்கிறேன். பிள்ளைகளை படிக்க வைத்து நல்ல நிலையில் ஆளாக்கிவிட்டோம். என் மனதில் சிறுவயது முதல் பதிந்திருந்த சமையல் கலை மீதான ஆர்வம் மட்டும் நீங்காமல் இருந்தது. கணவரும் பணி ஓய்வு பெற்றார். அதனால், இந்த உணவகத்தை தொடங்கலாம் என்று முடிவு செய்தேன்.
நீங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைத்ததா? போட்டியாளர்களிடம் இருந்து எப்படி உணவகத்தை வேறுப்படுத்தி காட்டுகிறீர்கள்?
எங்கள் உணவகத்தில் பல புதுமைகளை புகுத்தியிருக்கிறோம். வீட்டில் கிடைக்கும் உணவைப் போன்றே எங்களது உணவகத்தில் உணவு கிடைக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். உணவின் தரம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதால் நாங்கள் எதிலும் சமரசம் செய்து கொள்ளவில்லை.
பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்தோம். பழச்சாறு அருந்துவதற்குக் கூட பிளாஸ்டிக் ஸ்டிராவை அளிப்பதில்லை. கண்ணாடி கிளாஸில்தான் கொடுக்கிறோம். மண்பாண்டங்களில் தான் உணவைப் பரிமாறுகிறோம். மண் தட்டில் வாழை இலையை வைத்து உணவைப் பரிமாறுகிறோம். குடிநீரும் மண்ணால் உருவாக்கப்பட்ட டம்பளரில்தான் அளிக்கிறோம். இதுவே மற்ற உணவகங்களுக்கும், எங்கள் உணவகத்துக்கும் இடையே உள்ள வித்திôயசம். இது பலருக்கும் பிடித்துவிட்டது. தினசரி வாடிக்கையாளர்களும் கிடைத்து விட்டனர். நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது'' என்கிறார் உஷா ரங்கநாதன். அந்த உணவகத்தில் இருக்கும் உணவுகளுடன் அவரது வார்த்தைகளிலும் நம்பிக்கை மணம் வீசியது.
- க.தி.மணிகண்டன்
படம்: சுரேந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com