வறுமைக்கிடையே ஜொலித்த தங்கமங்கை! 

அந்தப் பெண்ணுக்கு வயது பத்து. அப்பா ஒரு கடை நிலை ஊழியர். அம்மா பெட்டிக்கடை வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தார்
வறுமைக்கிடையே ஜொலித்த தங்கமங்கை! 

அந்தப் பெண்ணுக்கு வயது பத்து. அப்பா ஒரு கடை நிலை ஊழியர். அம்மா பெட்டிக்கடை வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருந்தார். அந்த குடும்பத்தில் நான்கு ஆண் பிள்ளைகள் இரண்டு பெண் பிள்ளைகள். அந்த பத்து வயதுப் பெண்தான் கடைக்குட்டி.
 தன்னைவிட நான்கு வயது மூத்த கடைசி அண்ணனுடன் காட்டுக்குள் சென்று வீட்டுக்கு வேண்டிய விறகுகளைப் பொறுக்கி வர வேண்டும். அந்தப் பெண், அண்ணன் சுமந்து வரும் விறகுக் கட்டைவிட பெரிய விறகுக் கட்டை சுமந்து வீடு திரும்புவாள். "எப்படி அதிக அளவு விறகுகளை என்னைவிட சிறிய பெண்ணால் தூக்கி வர முடிகிறது' என்று அண்ணன் ஆச்சரியமாகத் தங்கையைப் பார்ப்பான்.
 தோழி வீட்டில் டிவியில் பளு தூக்கும் வீராங்கனை குஞ்சுராணி தேவி 2004 -இல் ஒலிம்பிக்ஸில் பளு தூக்குவதைக் கண்ட அந்தப் பெண் "நானும் இன்னொரு குஞ்சுராணியாவேன்' என்று தீர்மானித்ததுடன் நிற்காமல் பயிற்சி வகுப்புகளிலும் சேர்ந்தாள். தொடக்கத்தில் மூங்கில் கழியில் கற்களைக் கட்டி பயிற்சி தொடங்கியது. சில மாதம் கழித்துத்தான் இரும்பு வட்டுகள் இருபுறமும் பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு தண்டில் பயிற்சி தரப்பட்டது.
 வீட்டில் வறுமை என்றாலும் அந்தப் பெண்ணுக்கு மனதில் வலிமை எக்கச்சக்கமாக இருந்தது. பதினொன்று வயதிலேயே ஜுனியர் பிரிவில் பளு தூக்கும் போட்டியில் முதலாவதாக அந்தப் பெண் வந்தாள். தங்கப் பதக்கம் வென்றாள். பயிற்சிக்காக சுமார் நாற்பது கி.மீ சைக்கிளில் தினமும் பயணிக்க வேண்டும். அந்த நீண்ட தொலைவு... அந்தத் தொலைவை சைக்கிளில் துணையின்றி தனியே கடப்பதில் ஏற்படும் உடல் வலி. மனச்சோர்வு. அந்தப் பெண்ணை பயிற்சியிலிருந்தும் நிறுத்தவில்லை. "இன்னொரு குஞ்சுராணி தேவியாக வேண்டும்' என்ற வைராக்கியம் அந்தப் பெண்ணை சதா விரட்டிக் கொண்டிருந்தது.
 "தினமும் அதிக அளவு பால் குடிக்க வேண்டும், புரதம் மிகுந்த உணவுவகைகளை சாப்பிடவேண்டும்' என்று பயிற்சியாளர் சொன்னாலும், அந்தப் பெண்ணுக்கு வாரத்தில் ஒரு வேளை கூட நல்ல உணவு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
 ரியோ ஒலிம்பிக்ஸ் தேர்வுப் பயிற்சிக்காக மணிப்பூரின் தலைநகரமான இம்பாலில் தங்க வேண்டிய கட்டாயம் அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்டது. அப்படி தங்கினால் ஆகும் செலவுகளை எப்படி சமாளிப்பது என்று குடும்பம் திணறியது. "எனக்காக... என் விருப்பத்திற்காக... நான் கடைக்குட்டி என்பதற்காக செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். நாம் படும் கஷ்டம் எனக்குப் புரிகிறது. ஆனால், என் லட்சியத்திற்காக ஒத்துழையுங்கள். நான் கண்ட கனவை நனவாக்க உதவுங்கள். ரியோ ஒலிம்பிக்சிற்கு நான் தேர்வு பெறாவிடில் பளு தூக்குவதிலிருந்து நிரந்தரமாக முழுக்குப் போட்டுவிடுகிறேன்' என்று அந்தப் பெண் கெஞ்ச... குடும்பத்தினர் அந்த முடிவை ஏற்றுக் கொண்டனர்.
 ஆனால் முழுக்கு போடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படவில்லை என்பதுதான் சுவாரஸ்யமான அம்சம். 2014-இல் காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டு அந்தப் பெண் வெள்ளிப் பதக்கம் பெற்றார். 2015 -இல் நடந்த உலக பளு தூக்கும் போட்டியில் சர்வதேச அளவில் ஒன்பதாவது இடம் கிடைத்தது. 2015 - இல் ரியோ ஒலிம்பிக்சிற்கு நடந்த தேர்வுப் போட்டியில், பன்னிரண்டு ஆண்டு காலமாக உடைக்கப்படாமல் இருந்த குஞ்சுராணி தேவியின் சாதனையை அந்தப் பெண் தகர்த்து புதிய சாதனையை உருவாக்கினார். பிறகு குஞ்சுராணி தேவியே அந்தப் பெண்ணின் பயிற்சியாளரானார் என்பது இன்னொரு சுவாரஸ்யம். அந்தப் பெண் தான் மீராபாய் சானு.
 ஆஸ்திரேலியாவில் கோல்டு கோஸ்ட் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகளில் 48 கிலோ எடைப் பிரிவில், ஆறு முறை பளுதூக்கி, ஏப்ரல் 5-இல் ஆறு சாதனைகளை நிகழ்த்தி, போட்டிகள் தொடங்கிய முதல் நாளில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்திருக்கிறார் மீராபாய் சானு.
 மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு மொத்தம் 194 கிலோ (ஸ்னாட்ச் பிரிவில் 86 கிலோ + கிளீன் & ஜெர்க் பிரிவில் 110 கிலோ) எடையை தூக்கி புதிய சாதனை படைத்திருக்கிறார். உயரத்தில் ஐந்தடிக்கு ஓர் அங்குலம் குறைவாக இருக்கும் சானுவுக்கு வயது இருபத்துமூன்று.
 மீராபாய் 2016 -இல் ரியோ ஒலிம்பிக்சிற்கு தகுதி பெற்றாலும், ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதட்டத்தால் சரிவரச் செய்ய முடியவில்லை. சோர்ந்து சோகத்தில் ஆழ்ந்திருந்த மீராபாய் "இனி அவ்வளவுதான்..' என்று சுருண்டு போனார் . சிறிய கால இடைவெளியில், சானு சுதாரித்துக் கொண்டு ஃபீனிக்ஸ் பறவை போன்று சாம்பலிலிருந்து பிரம்மாண்டமாகக் கிளம்பினார். 2016 -இல் தெற்கு ஆசிய நாடுகளுக்கிடையே நடந்த போட்டியில் சானுவுக்குத் தங்கப் பதக்கம் கிடைத்தது. 2017 -இல் அமெரிக்காவில் நடந்த உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
 காமன்வெல்த் 2018 -இல் வெற்றி குறித்து சானு என்ன சொல்கிறார்..?
 "புதிய சாதனையை நிகழ்த்த ஆசைப்பட்டாலும் அது நிறைவேறும் என்று நினைக்கவில்லை. இனி அடுத்தது ஆசிய விளையாட்டுப் போட்டிகள். சவால்கள் நிறைந்த போட்டியை எதிர் நோக்கியிருக்கிறேன். அதற்கேற்றவாறு என்னைத் தயார் செய்து கொள்வேன். அதற்குப் பிறகு 2020 ஒலிம்பிக்ஸ். "ஒலிம்பிக்சில் ஒரு பதக்கம் பெற வேண்டும்' என்பது எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் லட்சியம். அது எனக்கும் இருக்கிறது''. என்றார்.
 தற்சமயம் சானு இந்திய ரயில்வேயில் ஒரு சாதாரண வேலையில் இருக்கிறார். உலகப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதற்காக மணிப்பூர் அரசு சானுவுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருபது லட்சம் அன்பளிப்பு செய்தது. இப்போது காமன்வெல்த் போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதால் மேலும் பதினைந்து லட்சம் மணிப்பூர் அரசிடமிருந்து ஊக்கத் தொகையாகக் கிடைக்கும். அங்கே சானுவின் கிராமத்தில், சானு பளு தூக்கி புதிய சாதனை படைத்ததை பெற்றோர்கள் உட்பட கிராமமே ஆனந்தக் கண்ணீருடன் சின்னத்திரையில் பார்த்தது. தங்கப் பதக்கம் கிடைத்ததும், ஒருவருக்கொருவர் பல வித நிறங்களை தடவி "தபல் சோங்பா' நாட்டுப்புற நடனம் ஆடினர். சானுவுக்குப் பிடித்த சூப்பும், இனிப்பும் அனைவருக்கும் வழங்கப்பட்டன. "சானுவுக்கு கெüரவமான பதவி தரப்பட வேண்டும்' என்று சானுவின் கிராம மக்கள் மணிப்பூர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 சமீப காலமாக சானு காதுகளில் வளைய வடிவில் தோடு அணிகிறார். "அந்த வளையங்கள் என் காதுகளில் ரியோ தோல்வி பற்றி கிசுகிசுக்கும். கை நழுவிப் போன 2016 ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை அப்படியே மறந்துவிடலாமா.. 2020 ஒலிம்பிக்ஸில் நழுவிப் போனதை கை வசப்படுத்த வேண்டும்' என்று என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருப்பதாக உணருகிறேன்'' என்கிறார் மீராபாய் சானு.
 ஆஸ்திரேலியாவில் நடக்கும் காமன்வெல்த் போட்டிகளில் சானு நிகழ்த்திய சாதனையை 2020 ஒலிம்பிக்ஸில் நிகழ்த்தினால், குறைந்தது வெண்கலப் பதக்கம் கிடைக்கும்' என்று பளு தூக்கும் போட்டி ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.
 - கண்ணம்மா பாரதி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com