30 ஆண்டுகளுக்கு பின் அசாமிய படத்துக்கு தேசிய விருது!

30 ஆண்டுகளுக்கு முன் ஜானு பகுவாவின்  "ஹலோதியா சோராயே போதன் கை' என்ற அசாமிய மொழி படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.
30 ஆண்டுகளுக்கு பின் அசாமிய படத்துக்கு தேசிய விருது!


30 ஆண்டுகளுக்கு முன் ஜானு பகுவாவின்  "ஹலோதியா சோராயே போதன் கை' என்ற அசாமிய மொழி படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அடுத்து கடந்த ஆண்டில்  பெண் இயக்குநர்  ரீமா தாஸின்  "வில்லேஜ் ராக்ஸ்டார்'  என்ற அசாமிய படம் தேசிய விருது பெற்றுள்ளது. இது குறித்து அதன் தயாரிப்பாளரும்,  இயக்குநருமான ரீமா தாஸ்,  தன் அனுபவங்களை இங்கு கூறுகிறார்:

""அசாம் மாநிலத்தில் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளின் திறமைகளையும், கற்பனைகளையும் வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டுமென நினைத்தேன். அப்பாவி மக்களின் வாழ்க்கை, கடின உழைப்பு, கிராமங்களோடு இணைந்துள்ள சவால்கள், இயற்கை பேரிடர்கள் இவைகளுக்கிடையே  ஒரு சிறுமி தன்னிடமிருந்த கிடாரை வைத்து குழந்தைகளின் கனவுகளையும், வேடிக்கைகளையும் வெளிப்படுத்த "வில்லேஜ் ராக்ஸ்டார்' என்ற இசைக்குழுவை அமைப்பதுதான் இந்த படத்தின்கரு.

என் கிராமத்தை சுற்றிலுமுள்ள குழந்தைகள், அவர்களுடைய குடும்ப நபர்களே இப்படத்தில் நடித்துள்ளனர். என் முதல் படமான  "மேன் வித் தி பைனாகுலர்ஸ்' என்ற படத்திலும் குழந்தைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்தேன். உள்ளூர் மக்கள் கூட்டத்தில் வாத்தியம் வாசித்தபடி வருவார்கள். நான் திரைப்படம் எடுப்பதால் என்னை தொடர்ந்து வரும்படி அவர்களிடம் கூறினேன்.

திரைப்படத்துறையில் எந்தவிதமான அனுபவமும் இல்லாமல் எப்படி படமெடுக்கிறீர்கள் என்று பலரும் என்னைக் கேட்பதுண்டு. முதல் படமெடுக்கும்போது என் சேமிப்பு அனைத்தையும்  செலவழித்தேன். சினிமா மீதிருந்த மோகம், குழந்தைகளை பார்க்கும்போது எழுந்த கற்பனைகள் நேரத்தை வீணாக்கக் கூடாதென்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. பணத்திற்காக காத்திருந்து வாய்ப்பை தவறவிடக்கூடாது என்ற நோக்கத்தில் என் கை கேமராவை எடுத்துக் கொண்டு படமெடுக்கத் தொடங்கினேன். என் உறவுக்காரப் பெண் மல்லிகா உதவ முன் வந்தாள். தயாரிப்பாளர்களைத் தேடி செல்லக்கூடாது என்பதில் நான்பிடிவாதமாக இருந்தேன். மேலும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். என்னுடைய கண்ணோடத்தில் என் திரைக்கதை அமைப்பை யாருக்கும் விட்டுக் கொடுக்கவும் நான் தயாராக இல்லை. என்னுடைய கற்பனை சுதந்திரம்தான்  தனியாக படமெடுக்க உதவியது.

என்னுடைய  "தி மேன் வித் தி பைனாகுலர்ஸ்'  மற்றும் வில்லேஜ்  ராக்ஸ்டார் ஆகிய படங்கள் இரண்டுமே மனிதர்களின் கனவுகளையும்  ஆசைகளையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது என சிலர் கூறினர்.  மனித செயல்பாடுகள் என்னை யோசிக்க வைத்தது. அதை வார்த்தைகளாக, மவுனமாக வெளிப்படுத்திய போதுதான், அவை உலகளாவியது என்பதை புரிந்து கொண்டேன். அதனால் மொழியை கடந்து படம் வெற்றிப் பெற்றது.

என்னுடைய கதை நம்ப தகுந்ததாக இருக்க வேண்டுமென்பதற்காக  அரசியல், பெண்ணுரிமை போன்றவைகளை புகுத்த வேண்டியதாயிற்று. இதை ரசிகர்களே முடிவு செய்யட்டுமென விட்டுவிட்டேன். எனக்குள் இருக்கும்  நடிப்பு திறமை திரைக்கதை எழுதவே தூண்டுகோலாக உள்ளது. உடலசைவைவிட வார்த்தைகளால் உணர்வுகளை வெளிப்படுத்துவதையே நான்  விரும்புவதால், என்னுடைய படத்தில் பெரும்பாலான காட்சிகள் மவுனமாகவே இருக்கும். இது ரசிகர்கள்  தங்கள் உணர்வுகளை நினைவுபடுத்த ஒரு வாய்ப்பாகும்.

அசாம் மாநில கிராமங்களின் மீது அதிக அக்கறையுள்ள நீங்கள் பாலிவுட் படங்களை இயக்க என் முயற்சிக்கவில்லை என்று கேட்கிறார்கள். வித்தியாசமான படங்களைத் தயாரித்து இயக்கவே விரும்புகிறேன். ஒவ்வொரு படத்திலும் ஒரு புது கருத்தை வெளிப்படுத்த முயற்சிப்பதால் அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்குதான் முதலிடம்.

என்னுடைய படங்களுக்கு திரைக்கதை, இயக்கம், உடைகள், நடிகர்கள் தேர்வு, தயாரிப்பு அனைத்து பொறுப்புகளையும் நானே ஏற்கிறேன். அண்மையில் சில தயாரிப்பாளர்கள் எனக்கு வாய்ப்பளிக்க முன் வந்துள்ளனர். அப்போது அனைத்து பொறுப்புகளையும் பிறருக்கு பகிர்ந்தளிப்பேன். "வில்லேஜ் ராக்ஸ்டார்' தேசிய விருது பெற்றது. என் மூன்றாவது படத்தை எடுக்க நம்பிக்கையையும், தைரியத்தையும் தந்துள்ளது. இந்த அனுபவம் என் திரைப்பட தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும்'' என்றார்  ரீமாதாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com