96 வயது மாணவி...!

"சீனம் சென்றாவது ஞானம் தேடு'  என்று சொல்வார்கள்.  கல்வி கரையில்லாதது. கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்று பலர் நிரூபித்துள்ளனர்.
96 வயது மாணவி...!


"சீனம் சென்றாவது ஞானம் தேடு'  என்று சொல்வார்கள்.  கல்வி கரையில்லாதது. கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையில்லை என்று பலர் நிரூபித்துள்ளனர். சமீபத்தில், கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் தொண்ணூற்றாறு  வயது   மூதாட்டி.

கார்த்தியாயினி. கேரளம் ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்தவர். நான்காம் வகுப்பில் சேர போகிறார். இந்தியாவின் மிகவும் வயதான மாணவி என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார். கேரளத்தின் அறிவொளி இயக்கத்தின் சார்பில் நடத்தும் வகுப்புகளில் சேர்ந்து பத்தாம் வகுப்பு  பாஸ்  செய்து காண்பிக்கிறேன் என்று  கார்த்தியாயினி கிளம்பியுள்ளார்.   

செப்பாட்  கிராமத்தின்  முட்டம் பகுதியில் கார்த்தியாயினி வாழ்ந்து வருகிறார். கேரளா அறிவொளி  இயக்கத்தின்   முயற்சியின்  விளைவாக   தொன்னூற்றாறு வயதான கார்த்தியாயினி  கல்வி கற்கும்  மாணவியாகியிருப்பது கேரளத்தின் தலைப்பு  செய்தியானது. கேரளத்தில் வாழும் அனைவருக்கும் நூறு சதவீதம் கல்வி அறிவு உண்டு என்ற சாதனையை ஏற்படுத்த, கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு எழுதப் படிக்க சொல்லித் தர முயற்சிகள் நடந்து வருகின்றன. 

மழைக்குக்கூட பள்ளியில் ஒதுங்காத பல மூதாட்டிகள்,  கேரள அறிவொளி இயக்கத்  தொண்டர்களைக் கண்டதும்  ஓடி ஒளிய.. கார்த்தியாயினி  மட்டும் தைரியமாக  "நான் படிக்கிறேன்'  என்று முன்வந்திருக்கிறார். 

கார்த்தியாயினி இப்போது தொடக்க நிலைக் கல்வி கற்று வருகிறார். தொன்னூற்றாறு வயதில் கல்வி கற்க கார்த்தியாயினி முன் வருவார் என்று யாரும்  எதிர்பார்க்கவில்லை.  அதற்கும்  ஒரு  காரணம் இருக்கிறது. 

கார்த்தியாயினியின் மகள் அம்மிணி அம்மாவுக்கு அறுபது வயதாகிறது. அம்மிணி அறிவொளி இயக்கத்தில் சேர்ந்து பத்தாம் வகுப்பு தேறியதற்கு இணையான சான்றிதழைப் பெற்றிருக்கிறார். ""மகளே.. பத்தாம் வகுப்பைப் படித்து  பாஸாகி விட்டாள்... நான் என்ன  அவளுக்கு  குறைச்சலா..  நானும் படித்து மகள் மாதிரி பத்தாம் வகுப்பு தேறியதற்கான  சான்றிதழைப்  பெறுவேன்'' என்று சபதம் செய்திருக்கிறார். அக்கம் பக்கத்தில் படித்தவர்களிடம் சொல்லிக் கொடுக்கச் சொல்லி எப்போதும் நோட்டும் பேனாவுமாகத் திரிகிறார். கல்வி கற்பதில் கார்த்தியாயினியின் ஈடுபாட்டினைக் கண்ட அறிவொளி இயக்கத்தினர் வயோதிகம் காரணமாக இயக்கத்தினர் நடத்தும் பயிற்சி வகுப்பிற்கு கார்த்தியாயினி வர வேண்டிய தேவையில்லை  என்று  சலுகை கொடுத்துள்ளார்கள். 

கார்த்தியாயினிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் அக்கம் பக்கத்தினர், ""கார்த்தியாயினிக்கு வயது காரணமாக கொஞ்சம் மறதி  உள்ளது.   இரண்டாவது முறை சொல்லும் போது  புரிந்து கொள்கிறார்''  என்கிறார்கள். பாட்டும் தாளமுமாய் கார்த்தியாயினியின் வகுப்புகள் நடந்துகொண்டிருக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com