கௌசல்யா ஒரு சகாப்தம்!

ஒரு அக்கா தன் தங்கையைப் பற்றி எழுதியிருக்கும் புத்தகம்தான்   "கெளசீ'. அக்கா பத்மஜா வாசுதேவ் மயிலாப்பூரில் வசிக்கும் கர்நாடக இசை ஆசிரியை. பல மொழிகளில் தேர்ச்சி பெற்ற இவர் ஒரு மொழிபெயர்ப்பாளரும்கூட.
கௌசல்யா ஒரு சகாப்தம்!


ஒரு அக்கா தன் தங்கையைப் பற்றி எழுதியிருக்கும் புத்தகம்தான்   "கெளசீ'. 
அக்கா பத்மஜா வாசுதேவ் மயிலாப்பூரில் வசிக்கும் கர்நாடக இசை ஆசிரியை. பல மொழிகளில் தேர்ச்சி பெற்ற இவர் ஒரு மொழிபெயர்ப்பாளரும்கூட.  பிரபல கர்நாடக இசைக்கலைஞர் சுமித்ரா வாசுதேவின் அம்மா.  
கெளசல்யாவின் வாழ்க்கையில் நாம் எல்லோருமே பயனடையக் கூடிய பல விஷயங்கள் இருக்கிறது. அதனால்தான் இந்த புத்தகம். 
பத்மஜா, அவருடைய தங்கை கெளசல்யா, அண்ணன் மாதவன் ஆகியோர் பெற்றோருடன் மும்பையில் வசித்து வந்தார்கள்.  அவர்களது பூர்வீகம் மன்னார்குடி.
சிறுவயதில் எல்லோரையும் போல் ஆடி ஒடி விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கெளசல்யா திடீரென்று அடிக்கடி கீழே விழ ஆரம்பித்தாள். பள்ளிக்கு வந்த மருத்துவ முகாம் அவளுக்கு மேலும் சில பரிசோதனைகளை செய்து பிரபல நரம்பியல் நிபுணரிடம் அவளை அனுப்பி வைத்தார்கள். 
கெளசல்யாவுக்கு வந்திருப்பது மஸ்குலர் டிஸ்ட்ரொஃபி என்று கூறப்படும் வியாதி என்பதை உறுதி செய்தார் மருத்துவர். தசைகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து நோயாளியை முடக்கிவிடும் என்ற உண்மை ஒட்டுமொத்த குடும்பத்தையும் தாக்கியது. 
முதலில் சுதாரித்துக் கொண்டது கெளசல்யாவின் தாய் வேதம். பொங்கிய கண்ணீரை துடைத்துக் கொண்டு மன உறுதியை மீட்டெடுத்தார். சுய பச்சாதாபத்துக்கு ஆளாகாமல் முதலில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பிறகு கெளசல்யாவிடம் மென்குரலில் தைரியம் சொல்லி ""நான் இருக்கிறேன் கெளசி, எப்போதும் உன் பக்கத்தில் இருந்து நான் பார்த்துக்கொள்வேன்''  என்று நம்பிக்கையூட்டினார். 
கால்கள் செயலிழந்து போன கெளசல்யா வீட்டுப் பால்கனி வழியே வெளியில் விளையாடும் குழந்தைகளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா அவளருகில் அமர்ந்து இதோபார் கெளசல், கிட்டாதாயின் வெட்டென மற அப்படின்னு சொல்லிருக்கு.  உன்னால இப்ப விளையாட முடியாட்டா அதுக்கு ஏங்காதே. நீ சும்மா வருத்தப்பட்டால் உன்னால் விளையாடவும் முடியாது, சந்தோஷமாக இருக்கவும் முடியாது. விளையாடினால்தான் சந்தோஷமா என்ன? விளையாட்டை கவனிக்கிறதும் சந்தோஷம்தான். இதிலே அவுட்டாகிவிடுவோம் என்ற பயமே இல்லை. யார் விளையாடினாலும் உன்னால ரசிக்க முடியும். அதுதான் உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்.
அம்மாவின் இந்த வார்த்தைகள் கெளசியின் உள்ளத்தில் மந்திரம் போல் பதிந்திருக்க வேண்டும். அதன் பிறகு அவள் வாழ்க்கை முழுவதும் தன்னை மையப்படுத்திக் கொள்ளாமல் எட்ட நின்று நடப்புகளை கவனிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டாள். 
தரையில் உட்கார்ந்து காலை நீட்டி இடுப்பை அசைத்து தேய்த்துத் தேய்த்துதான் நகர வேண்டியிருந்தது. பாத்ரூம் போவதற்குக் கூட அம்மாவின் உதவி தேவைப்பட்டது. கெளசல்யா மிகுந்த பொறுமை காத்தாள். அவளுடைய நிலைமையை அறிந்து கெளசி குரல் கொடுத்தவுடனேயே கைகாரியத்தைப் போட்டுவிட்டு ஓடி வருவாள் அம்மா. ஒருநாள் கூட இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறை சொன்னதோ அலுத்துக்கொண்டதோ கிடையாது. ஓரிரு முறை கெளசிக்கு உணவளிக்க தாமதமானால் தன் அன்பான வார்த்தைகளால் சரிகட்டிவிடுவாள் அம்மா. பொறுமையின் சின்னம் அம்மாவா கெளசியா என்று பட்டிமன்றம் நடத்தினால் முடிவு சொல்வது கடினம். 
எட்டாம் வகுப்புத் தேர்வை கெளசல்யா எழுதப்போகும் நாளை வீடே பரபரப்புடன் எதிர்கொண்டது. இந்த முதல் பொதுத்தேர்வுதான் அவள் எதிர்கால கனவுக்கு அஸ்திவாரம். ஆனால் பள்ளிக்கூடத்தில் அவளுக்கான இருக்கை இரண்டாம் மாடியில் ஒதுக்கப்பட்டிருந்தது. அம்மா எவ்வளவோ போராடியும் தலைமையாசிரியர் இடத்தை மாற்றித்தர மறுத்தார். மாற்றுத்திறனாளிகள் மீதான கருணைப் பார்வை என்பதே நமது சமூகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வுதான். முப்பது ஆண்டுகளுக்கு முன் நிலைமை அப்படி இல்லை. பொது விதிகள் அவர்களுக்கு சற்றும் கருணை காட்டவில்லை.  துக்கமும் கண்ணீருமாக தன் கனவை கலைத்துக் கொண்டாள் கெளசி. அதற்கடுத்து வந்த ஆண்டுகள் உடலும் மனமும் சோர்ந்து போக தனக்குள் சுருங்கிப்போக ஆரம்பித்தாள் கெளசல்யா. படிப்பைத் தொடரவும் விரும்பவில்லை. 
அவளை அப்படியே விட்டுவிடுவாளா அம்மா? ""கடவுள் அருளால் உனக்கொரு பாதுகாப்பான குடும்பம் இருக்கிறது கெளசல்.  உன்னால் மற்றவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்ற கோணத்தில் யோசித்துப்பார்'' என்று தைரியமூட்டினாள்.  அதன் பிறகு கெளசல்யா சுதாரித்துக்கொண்டாள். 
இதற்கிடையில் கெளசல்யாவின் அக்கா பத்மஜாவுக்கும், அண்ணன் மாதவனுக்கும் திருமணமாயிற்று. புதிய வரவான அண்ணி எப்படி இருப்பாளோ என்று வீடே கவலைப்பட்டது.  திருமண சடங்குகள் முடிந்தவுடன் மேடையிலிருந்து இறங்கிய அண்ணி சங்கீதா, வீல் சேரில் உட்கார்ந்திருந்த கெளசல்யாவை நோக்கி வந்தாள். இன்முகத்துடன் பரிவாகப் பேசினாள். அந்த விநாடியில் ஒட்டுமொத்த குடும்பமும் நெகிழ்ந்து போனது. 
வீட்டுக்குள் இருந்தபடியே தியானம், யோகா என்று மனதை அமைதிப்படுத்திக் கொண்டு அக்கம்பக்கத்து சிறுவர்களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தாள் கெளசல்யா. உட்கார்ந்தபடி செய்யக்கூடிய வீட்டு வேலைகள் அத்தனையும் செய்தாள். அக்காவின் பிரசவத்துக்கும், அண்ணன் குழந்தைகள் வளர்வதற்கும் உறுதுணையாக இருந்தாள். அம்மா நோய்வாய்பட்ட போதெல்லாம் பக்கத்திலிருந்து பணிவிடை செய்தாள். சுமையாகிப் போய்விடுவாளோ என்று எல்லோரும் எண்ணிய ஒரு பெண் சுற்றியிருந்த அத்தனை பேருக்கும் கைகொடுத்து உதவினாள். இந்த தலைகீழ் மாற்றம் அவளுக்குள் ஏற்பட அம்மாவின் அணுகுமுறையும், அப்பா விதைத்த மதிப்பீடுகளும்தான் ஆதாரமாக இருந்தது. 
பொதுவாக மஸ்குலர் டிஸ்ட்ரொஃபி நோய்க்கு ஆளானவர்கள் சராசரியாக 27, 28 வருடங்களே உயிர்வாழ்வார்கள் என்றிருக்க,  ஐம்பது வருடங்கள் வரை தாக்குப் பிடித்து வாழ்ந்தாள் கெளசல்யா. மகிழ்ச்சியும், உற்சாகமும் ததும்ப வாழ்ந்து மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை அளித்து வெற்றி வீராங்கனையாக வாழ்ந்திருக்கிறாள். நோயின் தாக்கத்தால் கெளசி மெல்ல நலிந்தபோது அம்மாவும் தன் இறுதி நாட்களை எட்டியிருந்தாள். கெளசி இறந்து இரண்டு வாரத்துக்குள் அவளும் இறந்து போனாள்.
கெளசல்யாவின் கதையை எழுத வேண்டும் என்று பத்மஜாவுக்கு ஏன் தோன்றியது? ""நம்மில் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் எத்தனையோ விதமான பிரச்னைகள். . . போராட்டங்கள். மனத்திண்மையுடன் அவற்றை எதிர்கொண்டு வெற்றி காண கெளசியின் வாழ்க்கைக் கதை மகத்தானதொரு தூண்டுதலாக இருக்கும்''  என்கிறார் பத்மஜா.  ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு பிரச்னையையும் மனச்சோர்வுக்கு ஆட்படாமல் சமாளித்து கெளசல்யா வாழ்ந்து காட்டிய விதம் அருகிலிருந்து பார்த்த பத்மஜாவுக்குள் மிகப்பெரிய பிரமிப்பை ஏற்படுத்தியிருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.  
தொட்டதெற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவதும், வார்த்தைகளைக் கொட்டுவதும், வன்மம் வளர்த்துக் கொள்வதுமான இன்றைய தொலைக்காட்சித் தொடர்கள் தவறான திசையில் மனிதர்களை செலுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் இதுபோன்ற நிஜ வாழ்க்கை அனுபவங்கள்தான் நம்மை சிந்திக்கத் தூண்டுகின்றன. அந்த வகையில் இந்த நூல் ஒரு அரிய பங்களிப்பு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com