கதை எழுதும்போது சிறியவளாக மாறிவிடுவேன்!

இன்போசிஸ் பவுண்டேஷன் தலைவர் சுதாமூர்த்தி, தன் தயாள குணத்தின் காரணமாக கர்நாடகாவில் பல்வேறு அநாதைகள் பராமரிப்பு இல்லம்.
கதை எழுதும்போது சிறியவளாக மாறிவிடுவேன்!

இன்போசிஸ் பவுண்டேஷன் தலைவர் சுதாமூர்த்தி, தன் தயாள குணத்தின் காரணமாக கர்நாடகாவில் பல்வேறு அநாதைகள் பராமரிப்பு இல்லம். வாசக சாலை, பொது கழிப்பிடங்கள் என பொதுமக்களுக்கு தேவையான சமூக சேவைகளை செய்து வருகிறார். மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவாக்கத்திற்காக ரூ. 200 கோடி நிதியுதவி அளித்துள்ளார். மேலும் கோனப்ப அக்ரஹாரம் என்ற மெட்ரோ ரயில் நிலையத்தை அமைத்து 30 ஆண்டுகள் நிர்வகிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். 2006-ஆம் ஆண்டு "பத்மஸ்ரீ' விருது பெற்ற இவர் சமூக சேவை மட்டுமின்றி, இலக்கியத்திலும் கன்னடம், ஆங்கிலம் மொழிகளில் குழந்தைகளுக்காக ஏராளமான புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரது புத்தகங்கள் பல இந்திய மொழிகளில் மொழிப் பெயர்க்கப் பட்டுள்ளன. இவரது 12-ஆவது வயதில் இவரது 62 வயதான பாட்டி சொன்ன கதைகள்தான் கதை எழுதும் ஆற்றலை கொடுத்ததாக கூறும் சுதாமூர்த்தி, வாழ்க்கையில் மிகவும் எளிமையானவர். 1978- ஆம் ஆண்டு என்.ஆர். நாராயண மூர்த்தியை இவர் திருமணம் செய்து கொண்டபோது ஆன திருமணச் செலவு வெறும் ரூ.800தான். கம்ப்யூட்டர் என்ஜினியரான இவர் நிர்வாகம், சமூகசேவை, எழுத்துப்பணி என்று சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். அவரிடம் சில கேள்விகளை கேட்டபோது அவர் அளித்த பதில்கள் இதோ:

கம்ப்யூட்டர் என்ஜினியரான நீங்கள் எழுத்தாளராக மாறியது எப்படி?
சிறுவயதிலிருந்தே எழுத வேண்டுமென்ற ஆர்வம் எனக்கிருந்தது. என்னுடைய தாயார். கர்நாடகாவில் உள்ள பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்வார். ஒருமுறை பாதாமியில் உள்ள குகைகளைப் பார்த்தபோது எனக்குள் எழுந்த கற்பனைகள் கதைகளாக எழுதத் தூண்டியது. பருவ வயதில் கலை, கலாச்சாரம் ஆகியவைகளை அடிப்படையாக வைத்து எழுதத் தொடங்கினேன். நாளடைவில் குழந்தைகளுக்கான சிறுகதைகள், நாவல்கள் உருவாயின.
குழந்தை இலக்கியங்கள் ஒரு வட்டத்திற்குள்ளேயே அடங்கிவிடும் அப்படியிருக்க குழந்தைகளுக்காக எழுத வேண்டுமென்று ஏன் நினைக்கிறீர்கள்?
குழந்தைகளுக்காக எவ்வளவு புத்தகம் வேண்டுமானாலும் எழுத தயாராக இருக்கிறேன். ஏனெனில் குழந்தைகள் எதையுமே எளிதில் ஊகித்துக் கொள்வதோடு, இன்னும் கற்க வேண்டுமென்பதில்ஆர்வம் காட்டுவார்கள். அதனால் சம்பிரதாயம், பரம்பரை பழக்க வழக்கங்கள், திருவிழாக்கள், புராணம், தோட்டக்கலை, மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற விஷயங்களாக தேர்ந்தெடுத்து கதைகளாக எழுதுகிறேன்.
68 வயதான நீங்கள் எழுதும் எழுத்துகள் சிறு குழந்தைகள் மனதில் எப்படி ஆர்வத்தை ஏற்படுத்துமென நினைக்கிறீர்கள்?
கதை எழுதும்போது என்னுடைய உண்மையான வயதை மறந்து 12 அல்லது 14 வயதுடையவளாக மாறிவிடுவேன். 
"தி மேஜிக் ஆப் தி லாஸ்ட் டெம்பிள்ஸ்' என்ற கதையில் வரும் நூனி என்ற பாத்திரம் உங்கள் பேத்தியை மனதில் கொண்டு படைத்தது போன்று உள்ளதே?
நகரத்தை சேர்ந்த 12 வயதான நூனி, அவளது தாத்தா, பாட்டியை பார்க்க கிராமத்திற்கு செல்லும்போது, அங்குள்ள குழந்தைகள் சோர்வின்றி விளையாடும் விளையாட்டுகளைப் பார்க்கும்போது அவளுக்கு புதுமையாகவும், அவைகளை கற்க வேண்டுமென்ற ஆர்வம் ஏற்படுகிறது. தன் வயதுடைய குழந்தைகளுடன் விளையாடும்போது, புதியவைகளை கற்க ஆசைப்படுவது இயல்புதானே? 
நூனியின் பாட்டி, அவளுக்கு எண்ணெய் குளியல், மருத்துவ குணமுள்ள செடிகளின் நன்மை போன்ற பாரம்பரிய பழக்க வழக்கங்களை கற்பிப்பது போல் எழுதியிருக்கிறீர்கள். இன்றைய தலைமுறையினர் இதுபோன்ற நல்ல விஷயங்களை இழந்து வருவதாக நினைக்கிறீர்களா?
இன்றைய தலைமுறையினருக்கு பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று கருத மாட்டேன். ஏனெனில் அதற்குமாறாக பல புதிய விஷயங்களை கற்று வருகிறார்கள். தற்போது உடனுக்குடன் தகவல்களை அறிய கூகுள், தகவல் மடிகணினி ஆகியவை விரல் நுனியில் அவர்களுக்கு கிடைக்கிறது. இருந்தாலும் பழைய சம்பிரதாயங்களையும், கலாசாரத்தையும் பெரியவர்கள் அவர்களுக்கு உணர்த்துவது நல்லது. இன்று தெரிந்து கொள்ள பல புதிய விஷயங்கள் இருந்தாலும் பழையனவற்றை மறப்பது நல்லதல்ல. 
இன்றைய குழந்தைகளின் நிலைமை வித்தியாசமாக இருக்கிறதே?
ஒவ்வொரு தலைமுறையினரின் அனுபவங்கள் வித்தியாசமாகத்தான் இருக்கும். இன்றைய குழந்தைகளுக்கு தங்களை சுற்றிலும் உள்ள பல விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருப்பது போன்று, அன்றைய காலத்தில் நமக்கு இருந்ததில்லை. நம்முடைய காலத்திய எல்லா புத்தகங்களும் சிறப்பாக எழுதப்படவில்லை. எது கிடைத்ததோ அதை படித்தோம். இன்றைய குழந்தைகள் தேர்ந்தெடுக்க வசதியாக பல விஷயங்கள் உள்ளன. அவர்களுக்கு உதவ குடும்பத்தினர், உடன் பிறந்தோர். நண்பர்கள் என பலர் உள்ளனர். இன்றைய தலைமுறையினர் தங்கள் தேவைகளை பெற முடியாமல் போகும் வாய்ப்புகளும் மிகவும் குறைவு.
கதைகளுக்கான கருவை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
ஒரு கதையை வலுவாக சொல்ல கருத்துகள் மட்டும் போதாது. அதற்கு ஆய்வும் முக்கியம் "தி மேஜிக் ஆப் தி லாஸ்ட் டெம்பிள்' எழுதும்போது, படிக்கட்டுகள் உள்ள கிணறுகளை தேடி மூன்றாண்டுகள் நாடுமுழுவதும் சென்று ஆய்வு செய்தேன். ஜெய்ப்பூரில் உள்ள அபானரி கிணறு மற்றும் கர்நாடகாவில் உள்ள சில கிணறுகளும் இதில் அடங்கும்.
நீங்கள் எழுதி முடித்தவுடன், உங்களுடைய நாவலை முதலில் உங்கள் கணவர் நாராயணமூர்த்தி படித்து பார்ப்பதுண்டா?
நான் எழுதி முடித்தவுடன் பிரதிகளை என் பதிப்பாளரைத் தவிர வேறு யாரிடமும் கொடுத்ததில்லை. என்னுடைய திருப்திக்காகவே நான் எழுதுகிறேன். ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் கணவர் எனக்கு நிறைய புத்தகங்கள் வாங்கி தருவதுண்டு என்றார் சுதாமூர்த்தி.
- பூர்ணிமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com