சமையல்... சமையல்!

சீரக தோசை, சீரக தோசை, வாழைத்தண்டு பச்சை வேர்க்கடலை கூட்டு, கொள்ளு இனிப்பு உருண்டை, வெந்தயக்கீரை மசியல் 

சீரக தோசை

தேவையானவை:
அரிசி - கால் கிலோ
உளுந்தம் பருப்பு ( தொலியோடு) - 50 கிராம்
சீரகம் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
வெங்காயம் - 1
மிளகாய் - 2
தேங்காய்த் துருவல் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: வெங்காயத்தையும், மிளகாயையும் பொடியாக அரிந்து கொள்ளவும். அரிசி, உளுந்து, சீரகம், வெந்தயம் இவைகளை ஒன்றாக கலந்து மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும். இத்துடன் அரிந்த வெங்காயம், மிளகாய், உப்பு சேர்த்து இரண்டு மணி நேரம் வைக்கவும். பின்னர் தவாவை அடுப்பில் வைத்து, நன்கு சூடானதும் மாவு 
கலவையை மெல்லிதாக ஊற்றவும். ஒரு கரண்டி எண்ணெய்யை தோசையைச் சுற்றி விட்டு, பொன்னிறமானதும் திருப்பிப் போட்டு முறுவலாக வெந்ததும் எடுக்கவும். சீரக தோசை தயார். இத்துடன் தேங்காய்ச் சட்னி அல்லது கொத்துமல்லி சட்னி வைத்து சாப்பிட சுவையாக இருக்கும். சீரகம் அக உறுப்புகளை சீராக இயங்கச்செய்யும். உடலுக் குளிர்ச்சியூட்டும்.

ஆலு அல்வா

தேவையானவை:
உருளைக்கிழங்கு - அரை கிலோ
வெல்லம் - 300 கிராம்
நெய் - 4 தேக்கரண்டி
ஏலத்தூள் - கால் தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 7 
உலர்திராட்சை -2 தேக்கரண்டி
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து, ஆறினதும், நன்கு மசித்து வைக்கவும். அடிகனமுள்ள ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்து சேர்த்து போதிய அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்க விடவும். பாதிப் பாகுபதம் வந்ததும், மசித்த உருளைக் கிழங்கை சேர்த்து நன்கு கிளறி கொடுத்து, வேகவிடவும். இடை இடையே சிறிது நெய்யை ஊற்றி கிளறி கொடுக்கவும். கலவை பாத்திரத்தில் ஒட்டாது. அல்வாபதம் வந்ததும், நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, உலர்திராட்சை, ஏலத்தூள் சேர்த்து நன்கு கிளறி கொடுத்து இறக்கவும். நெய் தடவிய தட்டில் பரவலாக கொட்டி, விருப்பமான அளவில் துண்டுகளாக்கவும். ஆலு அல்வா தயார். மிகவும் சுவையான அல்வா இது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிதின்பர்.
- ஆர்.ஏ. ரமா

வாழைத்தண்டு பச்சை வேர்க்கடலை கூட்டு

தேவையானவை: 
வாழைத்தண்டு - ஒரு துண்டு
பாசிப்பருப்பு - அரை கிண்ணம்
சின்ன வெங்காயம் - 8
பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
பச்சை வேர்க்கடலை - கால் கிண்ணம்
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு
நெய், பால் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைத்தண்டை நாரெடுத்து மிகவும் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை மலர வேகவிடவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறிக்கொள்ளவும். பச்சை வேர்க்கடலையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். மண் சட்டியில் அல்லது அடி கனமான வாணலியில் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து, நறுக்கிய வாழைத்தண்டு, வேக வைத்த பச்சை வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். வெந்தவுடன் நெய்யில் வறுத்த சீரகம், கறிவேப்பிலை சேர்த்து, பால் கலந்து பரிமாறவும். 

கொள்ளு இனிப்பு உருண்டை

தேவையானவை: 
கொள்ளு - ஒரு கிண்ணம்
பொடித்த வெல்லம் - முக்கால் கிண்ணம்
ஏலக்காய்த்தூள் - கால் தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - கால் தேக்கரண்டி
நெய் - சிறிதளவு.
செய்முறை: வாணலியில் நெய் விட்டு கொள்ளை லேசாக வறுத்து எடுத்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். பிறகு, நீரை நன்கு வடித்து, பொடித்த வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும். இதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி, சின்னச் சின்ன உருண்டைகளாகப் பிடித்து சாப்பிடக் கொடுக்கவும். சுவையான கொள்ளு இனிப்பு உருண்டை தயார்.
- மு.சுகாரா, தொண்டி. 

வெந்தயக்கீரை மசியல் 

தேவையானவை:
வெந்தய கீரை - ஒரு கட்டு 
துவரம் பருப்பு - நான்கு கை அளவு
வெங்காயம் - 1 
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 10
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி (விருப்பமுள்ள எண்ணெய் பயன்படுத்தலாம்)
கடுகு - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்றவாறு
மிளகாய் வற்றல் - 4
செய்யும் முறை: வெந்தய கீரையை அலசி, இலையை மட்டும் ஆய்ந்து கொள்ளவும், தண்டினை அகற்றி விடவும். குக்கரில் துவரம் பருப்பு, வெந்தைய கீரை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புளி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து 250 மில்லி தண்ணீரை ஊற்றி வேக வைக்கவும். மூன்று விசில் வரும் வரை காத்திருக்கவும். பின்னர், நீராவி அழுத்தம் அடங்கியதும் 
குக்கரைத் திறந்து தேவையான அளவு உப்பை சேர்க்கவும். மத்து கட்டை அல்லது மசி கட்டைக் கொண்டு நன்றாக கீரைக் கரைசலை மசிக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்யைச் சேர்க்கவும், கடுகு, மிளகாய்வற்றல் சேர்த்து தாளித்து மசித்து வைத்துள்ள கீரையில் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான, சத்தான வெந்தய மசியல் தயார்.
- கா.அஞ்சம்மாள், ராமநாதபுரம்.

பனீர் லஸ்ஸி!

தேவையானவை:
தயிர் - 1 கிண்ணம்
பனீர் துண்டுகள் - 5
சர்க்கரை - 1 கிண்ணம்
ஃப்ரூட் ஜாம் - 1 தேக்கரண்டி
முந்திரி, பாதாம் துருவல் - சிறிது
செய்முறை: புளிப்பில்லாத தயிருடன் பனீர் துண்டுகள், சர்க்கரை, ஃப்ரூட் ஜாம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்துக் கொள்ளவும். அதனை ஒரு டம்ளரில் ஊற்றி அதன்பின் முந்திரி, பாதாம் துருவலைத்தூவி பரிமாறவும். சுவையான பனீர் லஸ்ஸி தயார்.
- தவநிதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com