டிரையத்லான் போட்டி: அசத்தும் குடும்பம்!

"இந்தியாவின் இரும்பு மனுஷி' சென்னையில் வாழ்ந்து வருகிறார் என்பதைவிட இரும்பு மனுஷியாக இன்றைக்கும் தொடர்கிறார் என்று சொல்வதுதான் பொருத்தம்.
டிரையத்லான் போட்டி: அசத்தும் குடும்பம்!

"இந்தியாவின் இரும்பு மனுஷி' சென்னையில் வாழ்ந்து வருகிறார் என்பதைவிட இரும்பு மனுஷியாக இன்றைக்கும் தொடர்கிறார் என்று சொல்வதுதான் பொருத்தம். நீச்சல், சைக்கிள், ஓட்டம். இந்த மூன்றையும் ஒரு கை பார்த்திருக்கும் "இரும்பு மனுஷி' ஈஸ்வரி ஆண்டியப்பன், டிரையத்லானில் பெண்கள் பிரிவில் போட்டிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் இந்தியப் பெண் ஆவார்.
 "டிரையத்லான். இந்த விளையாட்டை தமிழில் நெடுமுப்போட்டி என்கிறார்கள். உடல் திறன், ஆற்றல் எவ்வளவு நேரத்திற்கு நீடிக்கும் என்பதை நிர்ணயிக்கும் போட்டிதான் டிரையத்லான். தொடர்ச்சியாக அடுத்தடுத்து நடைபெறும் மூன்று விளையாட்டுகள் அடங்கியப் பன்முனை விளையாட்டுப் போட்டியாகும். அதாவது, இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் நீச்சல், மிதிவண்டி, ஓட்டம் என்று ஒரு போட்டியிலிருந்து இன்னொரு போட்டிக்கு மாற வேண்டும். இந்த விளையாட்டுகள் நீர், நிலம், காற்றுடன் தொடர்புடையவை. டிரையத்லான் என்ற பெயர் கிரேக்க மொழியிலிருந்து உருவானது'' என்று தொடங்கிய ஈஸ்வரி ஆண்டியப்பன் தொடர்கிறார்:
 "டிரையத்லான் போட்டிகளில் கடக்க வேண்டிய தொலைவுகள் மாறுபடும். பன்னாட்டு டிரையத்லான் சங்கம் மற்றும் அமெரிக்க டிரையத்லான் அமைப்பு, டிரையத்லான் விதிமுறைகளை வரையறுத்து கட்டுப்படுத்தி வருகின்றன.
 நீச்சலில் இருந்து மிதிவண்டிக்கு மாறவும், மிதிவண்டியிலிருந்து ஓட்டத்திற்கும் மாற வேண்டும். நீச்சல் போட்டி முடிந்ததும், மிதிவண்டி ஓட்டும் போட்டிக்கான உடை தேவையான பாதுகாப்பு சாதனங்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் அணிந்து கொண்டு சைக்கிள் ஓட்டி நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைக் கடக்க வேண்டும். அது முடிந்ததும், தடகள ஓட்டத்திற்கான உடையை அணிந்து கொண்டு ஓட வேண்டும். உடைகள் உபகரணங்கள் மாற்றிக் கொள்ள செலவிடப்படும் நேரமும் போட்டியை முடிக்க எடுத்துக்கொள்ளும் மொத்த நேரத்தில் அடங்கும். இந்த மூன்று போட்டிகளில், விளையாட்டு வீரரின் ஆற்றல், பொது வலிமை, பயிற்சியால் கிடைத்திருக்கும் திறமை ஒருங்கிணைந்து வெளிப்படும். இந்தப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலாவதாக வந்தேன். அப்போது எனக்கு வயது முப்பத்தாறு. இரண்டு குழந்தைகளுக்குத் தாய். வயதும், தாய்மையும் இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்கு எந்த விதத்திலும் தடையாக இருக்கவில்லை.
 இப்போட்டி, வெளிநாடுகளில் ரொம்ப பிரசித்தம். இந்தியாவில் நிலவும் காலநிலை வெப்பத்தை அதிகமாக கொண்டிருப்பதால் டிரையத்லான் போட்டிக்கு பாதகமாக அமைந்திருக்கிறது. அதனால், கோவா, பெங்களூரு, ஐதராபாத் போன்ற நகரங்களில் சிறிய அளவில் டிரையத்லான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் முழுமையான டிரையத்லான் போட்டிகள் நடக்கின்றன. இந்தப் போட்டியில் 3.9 கி.மீ தூரம் நீந்த வேண்டும். அது முடிந்ததும், தொடர்ந்து, 180 கி.மீ மிதிவண்டியை வேகமாக மிதிக்கணும். சைக்கிள் பயணத்தை நிறைவு செய்ததும், 42.2 கி.மீ ஓடணும். இந்த பந்தயத்தை, பெண்கள் 22 மணி நேரத்துக்குள் செய்து முடிக்க வேண்டும். அதுதான் இந்த போட்டியின் விதிமுறை. நான் 20 மணி, 3 நிமிட நேரத்தில் நிறைவு செய்து "இந்தியாவின் இரும்பு மனுஷி' பட்டத்தை வென்றுள்ளேன்.
 இப்போது உடல் அளவில் திடமாக இருக்கிறேன் என்றாலும் என்னை டிரையத்லான் பக்கம் தள்ளி விட்டது பொல்லாத ஆஸ்துமாதான். எனது சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராய்சிலை கிராமம். நான், தம்பி ராமநாதன் இரண்டு பேரும்தான் பெற்றோருக்கு பிள்ளைகள். அப்பாவை வதைத்துக் கொண்டிருந்த ஆஸ்துமா எங்களுக்கு சின்ன வயதிலேயே வந்து விட்டது. மூச்சு விட சிரமப்பட்டோம். ஆஸ்துமா பிரச்னையிலிருந்து விடுபட முறையான உடல் பயிற்சிகள் தேவை என்று பலரும் சொன்னார்கள். அதனால் முதலில் நடக்க ஆரம்பித்தோம். பிறகு இறகுப் பந்தாட்டம். இவற்றை தொடர்ந்ததால் ஆஸ்துமாவின் பிடியிலிருந்து தப்ப முடிந்தது.

பொறியியல் பட்டப் படிப்பு முடித்ததும் வர்த்தக நிர்வாகத்தில் முதுநிலை பட்டம் பெற்றேன். கணினி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பிறகு திருமணம். கணவர் சொக்கலிங்கம் வங்கியில் அதிகாரியாக இருக்கிறார். மகன் கிருஷ்ணா. மகள் சாதனா. திருமணம், குடும்பம், குழந்தைகள், வேலை என்றதும் எல்லாரும் செய்கிற மாதிரி நானும் விளையாட்டை உடல் பயிற்சிகளை மறந்தேன். அதனால் ஒல்லியாக இருந்த நான் எடை போட்டேன். எனது எடை 78 கிலோவைத் தொட்டதும்தான் எனக்கு விழிப்புணர்வு மீண்டும் வந்தது. அந்த சமயத்தில் மகன் கிருஷ்ணாவையும் ஆஸ்துமா தாக்கியது. நான் பட்ட கஷ்டங்கள் அனுபவங்கள் பயமுறுத்தியது.
 கிருஷ்ணாவும் ஆஸ்துமாவால் சிரமமப்படக் கூடாது என்று அப்பா சொன்ன "கை கண்ட மருந்தான' நடை, ஓட்டம், நீச்சல் என்று வழி காட்டினேன். மகனை ஊக்கப்படுத்த நானும் அவனுடன் நடக்க ஓட நீந்த ஆரம்பித்தேன். வீட்டில் அனைவருமே நடைப் பயிற்சி செய்கிறார்கள். நாட்கள் போகப் போக மகனையும் டிரையத்லான் பக்கம் கொண்டு வந்தேன். இந்த பயிற்சிகள் காரணமாக ஆஸ்துமா அவனை விட்டுப் போய் விட்டது. மகனுடன் நிழலாக நானும் உடல் பயிற்சியில் ஈடுபட்ட காரணத்தால் எனது எடையும் 78 லிருந்து 61 கிலோவாகக் குறைந்தது.
 அந்த கால கட்டத்தில்தான் டிரையத்லான் பற்றி தெரிந்து கொண்டேன். "வேளச்சேரி வைப்ரன்ட்' என்ற விளையாட்டுக் குழுவில் சேர்ந்து டிரையத்லான் பயிற்சி பெற ஆரம்பித்தேன். அந்த அமைப்பின் தலைவர் அனில் சர்மாதான் எனக்கும் என் தம்பிக்கும், மகனுக்கும் பயிற்சியாளர்.
 கிருஷ்ணா "குட்டி டிரையத்லான்' போட்டியில் கலந்து கொள்ளும் அளவுக்கு முன்னேறினான். "சென்னை ட்ரெக்கிங் கிளப்' ஒலிம்பிக் ட்ரையத்லான் போட்டியை ஏற்பாடு செய்திருந்தது. நானும் கலந்து கொண்டேன். 1.5 கி.மீ தூரம் நீந்தனும். பிறகு 40 கி.மீ சைக்கிள் ஓட்டணும். அதன்பிறகு 10 கி.மீ ஓடணும். இந்த ரகமும் பெரியவர்களுக்கான "குட்டி டிரையத்லான்' வகைதான். இருந்தாலும் என்னால் சரிவர ஓட முடியவில்லை. ரொம்பவும் சிரமப்பட்டேன்.
 எனது குறைபாடுகள் எனக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தன. எனது உடல் திடத்தை மேம்படுத்திக் கொள்ள கடுமையான பயிற்சிகளைத் தொடர்ந்தேன். அந்த உழைப்புதான், முழுமையான டிரையத்லான் போட்டியில் என்னை வெற்றி பெறச் செய்தது. இன்றைக்கும் தொடர்ந்து நானும், தம்பியும், மகனும் டிரையத்லான் பயிற்சி செய்து கொண்டிருக்கிறோம். இப்போது மகளும் எங்களுடன் சேர்ந்திருக்கிறாள்.
 நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உடல் பயிற்சி பெரும் பங்கு வகிக்கிறது. நாம் சுறுசுறுப்பாக இருந்தால் குடும்பமே சுறுசுறுப்பாக இயங்கும். வேலை, குடும்ப வேலைகள் இருந்தாலும் உடல் பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குவதால் மனம், உடல் இரண்டையும் வளமையாக, வல்லமையாக வைத்துக் கொள்ள முடிகிறது. நோயையும் தூரத்தில் நிறுத்தி வைக்க முடியும்'' என்கிறார் .
 - பிஸ்மி பரிணாமன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com