சட்டம் சொல்வதை செய்வேன்!: லீலா மீனாட்சி  சினிமா தணிக்கை அதிகாரி

புதிதாக மத்திய திரைப்பட  தணிக்கை குழுவின் மாநில தலைவியாக (Regional Officer) பொறுப்பேற்றிருக்கிறார் லீலா மீனாட்சி. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு  தணிக்கை குழுவின்  மாநில தலைவியாக பொறுப்பேற்றிருக்கும் இர
சட்டம் சொல்வதை செய்வேன்!: லீலா மீனாட்சி  சினிமா தணிக்கை அதிகாரி

புதிதாக மத்திய திரைப்பட  தணிக்கை குழுவின் மாநில தலைவியாக (Regional Officer) பொறுப்பேற்றிருக்கிறார் லீலா மீனாட்சி. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு  தணிக்கை குழுவின்  மாநில தலைவியாக பொறுப்பேற்றிருக்கும் இரண்டாவது பெண்மணி இவர். செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தில் தான் தனது வேலையை ஆரம்பித்தார். அவரது பணி சென்னையில்  என்றவுடன் சந்தோஷப் பட்டார். காரணம் அவர் ஒரு தமிழ் பெண். இவர் தன்னை பற்றியும் தான் சினிமாவை தெரிந்து கொண்டதையும் இங்கு கூறுகிறார்:   

""புது டெல்லியில் வேலை செய்து கொண்டிருந்த நான், முதன் முறையாக மாற்றலாகி எனது தமிழ் மாநிலத்திற்கே வந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பிறந்தது, படித்தது எல்லாமே சேலத்தில்தான்.  நான் முதுகலை படித்தவுடன் எல்லா அப்பாக்களுக்கும் இருக்கும் ஆசையைபோல் எனது தந்தையார் மாரியப்பன் தனது மகள் அரசு உத்யோகத்தில் இருக்கவேண்டும் என்று விரும்பினார். குறிப்பாக ஐஏஎஸ்  படிக்க வேண்டும் என்றும் ஆசை பட்டார். படித்து முடித்தவுடன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேறியதால் எனக்கு  அரசாங்க வேலை கிடைத்தது. இங்கு நான் இருப்பதற்கு காரணம் அவரால்தான் என்றும் கூறலாம். கணவர் அபுதாபியில் வேலை செய்கிறார்.

சினிமாவை பற்றி எனக்கு புணேவில் உள்ள திரைப்பட  கல்லூரியில் பயிற்சி. தேசிய திரைப்ட விழாக்களில் பங்கு என்று பல வருடம் புதுடில்லியில் இருந்து விட்டு இங்கு வந்துள்ளேன். அப்பொழுது நான் அதிகம் பார்த்தது பல்வேறு பெரிய நடிகர்களின் படங்களைத்தான். காரணம் அவர்களது படங்கள்தான் அங்கு வெளியாகும். இல்லையென்றால் ஆங்கிலப் படங்களைதான் பார்போம். தினமும் படங்கள் என்பது இங்கு வந்தபிறகுதான் ஆரம்பமானது. இதுவே எனக்கு பேருதவியாக இருந்தது. இதனாலேயே எனக்கு எந்த ஒரு திரைப்பட தயாரிப்பாளரையோ, நடிகர் நடித்த படங்களையோ நான் பாகுபடுத்தி பார்ப்பது கிடையது.  எல்லாரும் எனக்கு ஒன்றுதான். அரசாங்கம் செய்ய சொன்ன வேலையை நான் இங்கு செய்ய வந்திருக்கிறேன். அவ்வளவுதான். அதனால்,  எனக்கு பிடித்த இயக்குநர் அல்லது நடிகர் என்று சிறிய அளவில் கூட   விருப்பு, வெறுப்பு  இல்லாமல் பணியாற்ற  முடிகிறது.

ஒன்று மட்டும் நிச்சயம், முன்பு நான் படம் பார்க்கும் போது இது வெட்டப் பட்டிருக்க வேண்டும் என்றோ அல்லது ஒரு படத்தை  உன்னிப்பாக பார்த்து அக்கு வேறு ஆணி வேறாக அலசவேண்டும் என்றோ நினைத்ததில்லை. ஆனால் இன்றோ படம் பார்ப்பதே வேலையாகி விட்டதால் நான் சாதாரணமாக ஒரு படம் பார்த்தாலும் ஏதோ வேலை செய்வது போல்தான் என் மனம் பார்க்கிறது. எனது கணவருடன் நான் பொழுது போக்காக படத்திற்கு சென்றாலும் flash back (படத்தில் சொல்வோமே)  என்னை அறியாமல் நிகழ்கிறது.  அதுபோன்று, சென்சாருக்காக படம் பார்ப்பதுடன் நில்லாமல் தியேட்டர்களில் சென்றும் படம் பார்க்கிறேன். காரணம்,  நமது பணி சரியாக மக்களுக்கு போய்  சேர்கிறதா என்று பார்க்கவே தியேட்டருக்கு செல்கிறேன். நான் அலுவலகத்திலும் படம் பார்த்து விட்டு மாலை அல்லது இரவு காட்சிக்கு டிக்கெட் வாங்கி பார்க்கிறேன். 

இந்தியாவில் உள்ள எல்லா திரை அரங்கிலும் இலவசமாக செல்லும் உரிமையை அரசாங்கம் கொடுத்திருந்தாலும்  நான் டிக்கெட் வாங்கித் தான் பார்க்கிறேன்.  இதனால்,  சமீபத்தில் 2-3 படங்களை  நாங்கள் கையும் களவுமாக பிடித்துள்ளோம்.  எப்படி என்றால்,  எங்களுக்கு காண்பிக்கும் போது அதில் sub-title இல்லை. அதனால், அந்தப் படத்தை எல்லாரும் பார்க்கும் வகையில்  "யு'  -சான்றிதழ் கொடுதோம். அதே படத்தை திரையரங்கில் பார்க்கும் போது சப்-டைட்டிலுடன்  ஓடிக் கொண்டிருந்தது.  அதை எங்கள் மேலதிகாரிக்குச் சொல்லி உடனே அதை தடுத்து நிறுத்தினோம். தற்போது அது ஒரு சட்டமாகவே இந்தியா முழுவதும் வந்து விட்டது. இப்படி பல விஷயங்கள் இந்த குறுகிய காலதில் என்னால் செய்ய முடிந்தது என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை பொருத்தவரை எங்களுக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சட்டம் இருக்கிறது. அந்த வேலையை செய்யவே நான் இங்கு வந்திருக்கிறேன்.  அதை நிறைவாக செய்தாலே போதும்.

""பல ஆண்டுகளுக்கு பின்னர்,  ஒரு தமிழ் பெண்ணுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி'' என்று பலர் என்னிடம் கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது'' என்றார் லீலா மீனாட்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com