காயம் செய்த மாயம்! - மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்

ஆசிய போட்டியில், இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்ற "முதல் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்.
காயம் செய்த மாயம்! - மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட்

ஆசிய போட்டியில், இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்ற "முதல் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட். ரியோ ஒலிம்பிக்சில் முழங்காலில் ஏற்பட்ட காயத்தினால் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் வெளியேறிய வினேஷ் போகாட் ஏமாற்றத்தில் கண்ணீர் சிந்தினார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்தத்தில் தங்கப் பதக்கம் வென்றார். அதன் தொடர்ச்சியாக வினேஷ் ஜாகர்த்தாவில் நடந்து கொண்டிருக்கும் பதினெட்டாவது ஆசிய போட்டியில், இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்ற "முதல் மல்யுத்த வீராங்கனை' என்ற சாதனை புரிந்து ஆனந்தக் கண்ணீர் சிந்தியுள்ளார்.
 பெண்கள் மல்யுத்தப்போட்டியில் "ஃப்ரீ ஸ்டைல்' ஐம்பது கிலோ (உடல்) எடைப் பிரிவில் வினேஷ் போகாட், ஜப்பானின் யூகி இரியை இறுதிப்போட்டியில் 6-3 புள்ளிகளில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தைத் தட்டிக் கொண்டார்.
 "இந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் உழைத்தேன். காமன்வெல்த் போட்டிகளில் இருமுறை தங்கப் பதக்கம் பெற்றிருந்தாலும், ஆசிய போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை மட்டுமே வென்றிருக்கிறேன். போட்டியில் எனது உடலும், பயிற்சியால் கிடைத்த மன உறுதியும் ஒத்துழைத்தது. கடவுளும் கருணை காட்டினார். விளையாட்டு வீரர்களுக்கு காயங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அது அவர்களின் வாழ்க்கையில் ஓர் அங்கமாகும். காயம் ஏற்பட்ட பிறகுதான் விளையாட்டு வீரர்கள் வலுவுடன் எழுகிறார்கள். தவற விட்டதை பிடிக்க கடும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்வதுண்டு. காயத்திற்குப் பிறகுதான் கடும் பயிற்சியில் ஈடுபட்டேன். அதன் பயனாக வெற்றியையும் அறுவடை செய்திருக்கிறேன். எனது விஷயத்தில் காயம் மாயம் செய்திருக்கிறது என்று நம்புகிறேன். போட்டியின் போது எதிராளியை எடை போட்டு அவரை வீழ்த்துவதில் குறியாக இருப்பேன். பார்வையாளர்களின் உற்சாகக் குரல்கள் கூட என் காதுகளில் விழாத அளவிற்கு போட்டியில் ஒன்றிவிடுவேன்'' என்கிறார் வினேஷ்.
 ரியோ ஒலிம்பிக்சில் வினேஷ் தோற்றது சீனாவின் யனன் சன் என்பவரிடம். யனனிடம் வினேஷ் வேறு இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளார். மூன்று முறை வினேஷை தோற்கடித்த அதே யனனை ஆசிய போட்டியில் ஆரம்பத்திலேயே வினேஷ் தோற்கடித்தார். இந்த வெற்றியால் எதிராளியைவிட தான் உறுதியாக இருப்பதாக வினேஷ் உணர... அது அவருக்கு வெற்றியின் ஏணிப்படியாகியது.
 "ஆண் மல்யுத்த வீரரான சுஷில்குமார் நண்பர். அவரிடம் மல்யுத்தம் குறித்து பேசுவேன். அவரது ஆலோசனைகளை மனதில் குறித்துக் கொள்வேன். 2014 ஆசிய போட்டியில் எனக்கு வெண்கலம்தான் கிடைத்தது. ""மனத்தைத் தளர விடாதே.. நடப்பதெல்லாம் நல்லதுக்குத்தான்... இதைவிட உயர்ந்த பதக்கம் உனக்காகக் காத்திருக்கலாம்'' என்று சுஷில் ஆறுதல் சொன்னார். சுஷில் என்றால் இந்த ஆறுதல்தான் எனக்கு நினைவுக்கு வரும்.
 பிரபல மல்யுத்த வீராங்கனைகளான கீதா போகாட், பபிதா போகாட்களுக்கு வினேஷ் தங்கை முறை வேண்டும். இந்திய மல்யுத்த சங்க அலுவலர்களுக்கும் வினேஷுக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது வினேஷின் வெற்றியைப் பாதிக்கவில்லை. வினேஷ் தனிப்பட்ட முறையில் பயிற்சி பெற்றவர்.
 ஒலிம்பிக்ஸ் பதக்கம் குறித்து வினேஷ் சொல்வது:
 "ஒலிம்பிக்ஸ் ஒலிம்பிக்ஸ்தான்.. ஆசியா போட்டிகள் ஒலிம்பிக்ஸýடன் ஒப்பிட இயலாது. நிச்சயம் எனது முழு திறமையைக் காட்டுவேன். அதற்கேற்ற பலன் கிடைக்கும்'' என்கிறார். வினேஷுக்கு இருபத்தி மூன்று வயதாகிறது. வினேஷிற்கு மல்யுத்தம் தவிர பிடித்தமான விளையாட்டு டென்னிஸ்.
 - பிஸ்மி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com