மேடையில் ஏறினால் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை!: மேரி கோம்

சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் வரலாறு படைத்திருக்கிறார் இந்தியாவின் மேரி கோம்.
மேடையில் ஏறினால் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை!: மேரி கோம்

சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் வரலாறு படைத்திருக்கிறார் இந்தியாவின் மேரி கோம்.  48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற மேரி கோம், இறுதிச்சுற்றில் உக்ரைனின் ஹன்னா ஒகோட்டாவை வீழ்த்தியதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 6-ஆவது தங்கத்தை கைப்பற்றினார். இதன்மூலம் சர்வதேச அளவில் உலக குத்துச்சண்டை  சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்றவரும், உலகின் ஆகச்சிறந்த குத்துச்சண்டை வீரருமான கியூபாவின் பெலிக்ஸ் சேவானின் சாதனையை சமன் செய்திருக்கிறார். 
1998-இல் நடைபெற்ற ஆசியவிளையாட்டுப்போட்டியில் மணிப்பூரைச் சேர்ந்தவரும், மேரி கோமின் சகவீரருமான டின்கோ சிங் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.  அவருடைய வெற்றியால் உத்வேகம் பெற்ற மேரி கோம், தனது 18-வது வயதில் சர்வதேச குத்துச்சண்டையில் களமிறங்கினார். துடிப்புமிக்க வீராங்கனையாகத் திகழ்ந்த மேரி கோம், சர்வதேச குத்துச்சண்டையில் களம்புகுந்த அதே ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்ற, அதன்பிறகு அவருக்கு ஏறுமுகம்தான்.  2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் அதிக தங்கம் வென்றவரான அயர்லாந்தின் கேத்தி டெய்லரின் சாதனையை சமன் செய்தார். 
2012-இல் ஒலிம்பிக்கில் மகளிர் குத்துண்டை  அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதில் களம்புகுந்த மேரி கோம், வெண்கலம் வென்றார். ஒலிம்பிக்கில் குறைந்தபட்சமே 51 கிலோ எடை பிரிவில் பங்கேற்க முடியும். ஆனால் மேரி கோமோ தொடர்ச்சியாக 48 கிலோ எடைக்குள்பட்ட பிரிவிலேயே பங்கேற்ற நிலையில், லண்டன் ஒலிம்பிக்கில் 51 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், சற்று சிரமப்பட்டார். அதனால் அவரால் வெண்கலம் மட்டுமே வெல்ல முடிந்தது.
இதனிடையே மூன்று குழந்தைகளுக்கு தாயான மேரி கோம், 2016 -இல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற முடியாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. விமர்சனத்தையும் எதிர்கொள்ள நேரிட்டது. எனினும் அதிலிருந்து விரைவாக மீண்ட மேரி கோம், இப்போது உலக சாம்பியன்ஷிப்பில் 6-ஆவது முறையாக வாகை சூடி குத்துச்சண்டை  உலகை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாக  காலநிலை மாற்றம் காரணமாக வயிற்றுக்கோளாறு, தலைவலியால் அவதிப்பட்டார் மேரிகோம். எனினும், இறுதி ஆட்டத்தில் சற்றும் சளைக்காமல் எதிராளிக்கு வாய்ப்பே அளிக்காமல் வீழ்த்தியதன் மூலம் வயதானாலும் தனது திறமை மங்கிவிடவில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் 35 வயதான மேரி கோம்.
1974 -ஆம்  ஆண்டு முதல் தற்போது வரையில் ஆடவர் பிரிவில் 21 உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது.  ஆனால் அதில் இந்தியர்கள் பெற்ற பதக்கங்கள் 4 வெண்கலம் மட்டுமே.  மகளிர் பிரிவில் இதுவரை 11 உலக சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. அதில் இந்திய வீராங்கனைகள் 9 தங்கம் உள்பட 32 பதக்கங்களை குவித்திருக்கிறார்கள். மேரி கோம் மட்டும் 6 தங்கம் வென்றுள்ளார்.
மேரி கோமுடைய வெற்றியின் ரகசியமாக பார்க்கப்படுவது அவருடைய தனித் தன்மைதான். எப்போதுமே மற்ற பெண்களிலிருந்து அவர் வேறுபட்டவராகத் திகழ்கிறார்.  ""விளையாட்டில் ஒன்று வெற்றி, மற்றொன்று தோல்வி.  அதனால் தோல்வியடைகிறபோது அதை நினைத்து மனஅழுத்தம் கொள்வதில்லை. முன்னணி வீராங்கனைகளை எதிர்கொள்ளும்போது இந்திய வீராங்கனைகள் அச்சம் கொள்கிறார்கள். நான் குத்துச்சண்டை மேடையில் ஏறிவிட்டால், எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அதனால்தான் என்னால் சிறப்பாக ஆட முடிகிறது''  என்கிறார் மேரி கோம். 
பணம் கொழிக்கும் தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க மேரி கோமுக்கு பல முறை அழைப்பு வந்தபோதும், அதை ஏற்க மறுத்துவிட்டார். தொழில்முறை குத்துச் சண்டை போட்டியில் களமிறங்கிவிட்டால், ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க முடியாது என்பதை உணர்ந்த மேரி கோம், ""எனது தாய் நாட்டுக்காக விளையாட வேண்டும், பதக்கம் வெல்ல வேண்டும். நான் பணத்துக்காக விளையாட  விரும்பவில்லை''  என கூறிவிட்டார்.  அதனால் அவரைத் தேடி மாநிலங்களவை உறுப்பினர் பதவி வந்தது. 
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 6-ஆவது முறையாக தங்கம் வென்றபோது, அதை நாட்டுக்காக அர்ப்பணிப்பதாக அறிவித்த மேரி கோம், தற்போது 2020 -இல் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு பயணித்துக் கொண்டிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com