விமானங்கள் புறப்படுவதையும் - தரை இறங்குவதையும் ரசிப்பேன்!

ஆளில்லாத காமிராக்கள்  பொருத்திய குட்டி  விமானங்கள் இதுவரை உலக அளவில்  ராணுவத்தினர்  மட்டுமே  பயன் படுத்திவந்தனர். 
விமானங்கள் புறப்படுவதையும் - தரை இறங்குவதையும் ரசிப்பேன்!

ஆளில்லாத காமிராக்கள்  பொருத்திய குட்டி  விமானங்கள் இதுவரை உலக அளவில்  ராணுவத்தினர்  மட்டுமே  பயன் படுத்திவந்தனர்.  பல நாடுகள் விரவாதிகளை கண்கானிக்கவும், பிற நாடுகளில் ராணுவ தகவல்களை  உளவு பார்க்கவும்   பயன்படுத்துவதுண்டு. தற்போது பல நாடுகளில் தனியார் நிறுவனங்கள் ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவதைப்  போன்று, இந்தியாவிலும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அதி நவீன தொழில் நுட்பங்களுடன்  அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளதால் ஆளில்லா விமானம் வர்த்தக ரீதியில் பிரபலமாகி  வருகிறது. இந்தியாவிலும் ஆளில்லா விமானம் தயாரிப்பில் பலர்  ஈடுபட்டுள்ளனர். இந்தூரை சேர்ந்த ஏரோ  ஸ்பேஸ்   என்ஜினியரான சோனல்  பெய்ட்  (28) என்ற பெண்மணி  "கிட்டிஹாக்'  என்ற பெயரில் ஆளில்லாத குட்டி விமானங்களை தயாரிக்கும் முதல் இந்தியப் பெண் தொழிலதிபர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். ஆளில்லா விமானம் தயாரிப்பில் ஆர்வம் ஏற்பட்டதற்கான காரணங்களை   இங்கு  கூறுகிறார் சோனல் பெய்ட்:

""சிறுவயதில் என் தந்தையுடன்  ஞாயிறுதோறும்  இந்தூர்  விமான நிலையத்துக்கு செல்லும் போதெல்லாம் விமானங்கள் புறப்படுவதையும்- தரை இறங்குவதையும்  ஆர்வத்துடன்  பார்ப்பேன். அப்போதிலிருந்தே பறக்கும் விமானங்கள் மீது ஈடுபாடு  ஏற்பட்டது. படித்து முடித்து பட்டம் பெற்ற பின், பெங்களூரில்  நான்காண்டுகள் ஏரோ ஸ்பேஸ்  பயிற்சி பெற்று நிர்வாகத்தின் சார்பில்  அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டேன்.  அங்கு , ஏரோ ஸ்பேஸ்  பற்றி நிறைய தகவல்களை  அறிந்து  கொண்டேன்.

நான் படித்த படிப்பு எனக்கு பெரிய பலம் என்று பிறர் கருதினாலும், அதை பயன்படுத்துவதற்கான  வாய்ப்புகள்  கிடைக்கவில்லை.  மிகவும் போராட வேண்டியிருந்தது. எனக்கு வேலை ஏதும் கிடைக்காத நேரத்தில், நம்பிக்கையற்ற நிலையில்  ஏதாவது ஒரு தொழிலை   சொந்தமாக தொடங்கலாம் என்று நினைத்தேன்.  என்னுடைய  முடிவுக்கும்,  உறுதிக்கும் என்னுடைய  பெற்றோர்  ஆதரவளிக்க முன் வந்தனர். 

இது பலதரப்பட்ட  பிரச்னைகளை எதிர்கொள்ள  உதவியது.  பொதுவாகவே பல குடும்பங்களில்  ஆண்களையும், பெண்களையும்  வளர்ப்பதில்  வித்தியாசம் இருக்கும்.  என்னுடைய  பெற்றோரை  பொருத்தவரை நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு  காலடிக்கும், கனவுகளுக்கும் ஊக்கமளித்து வந்தனர்.

ஆளில்லாத  குட்டி விமானங்கள் தயாரிப்பதற்கும்,  வர்த்தக ரீதியில் தனியார் பயன்படுத்துவதற்கும் மத்திய அரசு அனுமதியளித்ததோடு,  பல சலுகைகளையும்   அளிக்க முன்வந்ததால் ஆளில்லா விமானம் தயாரிப்பில்  இறங்க தீர்மானித்தேன்.  இதில்  அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும்  தொழில் நுட்பத்தில்  அதிக வித்தியாசமுள்ளது.  போட்டி அதிகமிருப்பதால்  அமெரிக்கா நவீன   தொழில்நுட்பங்களை  உடனுக்குடன்  புகுத்தி ஆர்டர்களை   பிடிப்பதில் ஆர்வம்  காட்டுகின்றனர்.  

இந்தியாவில்   ஏரோ ஸ்பேஸ்   தொழிற்சாலைகள் அதிகமில்லை  என்பதால் புதிய தொழில் நுட்பங்களை  புகுத்துவதில்  தாமதமேற்படுகிறது.  இன்றைய   தினத்தில்  ஆளில்லா விமானங்கள்  தேவை அதிகரித்து வருவதால்  2020-  ஆம் ஆண்டுக்குள்   ஆளில்லா விமானம் வர்த்தகம்  120 மில்லியன்  டாலர்  அளவுக்கு அதிகரிக்க  வாய்ப்புள்ளது.  அதனால்  இதற்கு நல்ல எதிர்காலம்  உள்ளது என்பதால்  நான்  இந்த தொழிற்சாலையை  தொடங்கினேன்.

இந்தத் துறை  முழுக்க முழுக்க ஆண்கள் கட்டுப்பாட்டில்  இருப்பதால், ""உன்னால்  சுதந்திரமாக செயல்பட முடியுமா?'' என்று சிலர்   சந்தேகத்தை  கிளப்பினார்கள்.  

இன்று ஆண்கள்  ஆதிக்கத்தில்  உள்ள பல  தொழில்களில் தன்னம்பிக்கை, உறுதியுடன் நுழைந்து  பல பெண் தொழிலதிபர்கள் வெற்றிப்  பெற்றிருப்பது எனக்குள்  தைரியத்தையும் , துணிச்சலையும்  அளித்தது.  மேலும்  இன்றைய பெண்களில்  நிறையபேர்  அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல்  மற்றும் கணிதம்  போன்ற  துறைகளில்  ஆர்வத்துடன்  சேர்ந்து  படிக்க முன் வந்துள்ளனர்.  இது அவர்களுக்கு மாறுபட்ட  துறைகளில்  துணிந்து  பணியாற்ற ஊக்கத்தையும், தைரியத்தையும் அளிப்பதோடு, அவர்களுக்கு வழிகாட்ட பலர் முன் வந்துள்ளனர். குட்டி விமானம்  தயாரிப்பில்  நான் இறங்கியபோது, எனக்கு உதவி  செய்யவும்,  ஆலோசனை கூறவும்  பல  ஆண்கள்  முன் வந்ததோடு,  ஒரு குழுவாக  எனக்கு துணையாக  இருக்கிறார்கள்  என்பதையும்  நான் சொல்லியாக  வேண்டும். 

எங்கள்  நிறுவன  தயாரிப்பான  கிட்டி ஹாக் ஆளில்லா விமானங்கள் வர்த்தக பயன்பாட்டுக்கு  பாதுகாப்பானது  மட்டுமின்றி  நவீன  தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கப்படுவதுடன், அவ்வப்போது  தொழில் துறையில் ஏற்படும்  மாறுதலுக்கேற்ப  தரத்தை  உயர்த்தவும்  தீர்மானித்துள்ளோம். தற்போது ஆளில்லா குட்டி விமானத்  தயாரிப்பை  ஊக்குவிக்கும்  வகையில் காமிரா  பொருத்திய  இலகுவான எடை  கொண்ட  ட்ரோன்களுக்கு  போட்டி  வைக்க கர்நாடக  அரசு அறிவித்தது. இது ஒரு நல்ல ஆரம்பமாகும்.

இது மட்டுமின்றி  நடுத்தர  பள்ளி மாணவிகள் அறிவியல்,  தொழில் நுட்பம், பொறியியல், கணிதம்  போன்ற துறைகளில்  சேர்ந்து  பயிலுவதற்கும், பிற்காலத்தில்  தங்கள்  திறமைக்கேற்ப  தொழில்  துறையை தேர்ந்தெடுப்பதற்கு  உதவும் பல அமைப்புகளுடன்  நானும் தொடர்பு கொண்டு சில  செயல் திட்டங்களை  தயாரித்து அளிக்கும்  முயற்சியில்  ஈடுபட்டுள்ளேன். இதை இந்த சமூகத்தில்  பெண்களுக்காக  செய்யும்  சேவையாக  கருதுகிறேன்'' என்கிறார்  சோனல்  பெய்ட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com