என் வாழ்க்கை திறந்த புத்தகம்!

என் வாழ்க்கை திறந்த புத்தகம்!

சில காட்சிகளில் ஷகிலாவும்  நடிக்கிறார். தன்னுடைய வாழ்க்கை திரைப்படமாவது குறித்து ஷகிலா என்ன கூறுகிறார்

25 ஆண்டுகளுக்கு முன் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வந்த ஷகிலா, அதிக சம்பளம் பெறும் பிரபல நடிகையாக கருதப்பட்டார். இப்போது அவரது வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ், திரைப்படமாக  தயாரித்து வருகிறார். "ஷகிலா' என்ற பெயரிலேயே தயாராகும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா, ஷகிலாவாக  நடிக்கிறார். சில காட்சிகளில் ஷகிலாவும்  நடிக்கிறார். தன்னுடைய வாழ்க்கை திரைப்படமாவது குறித்து ஷகிலா என்ன கூறுகிறார்:
"சென்னையில் நடுத்தர குடும்பமொன்றில் பிறந்த எனக்கு உடன் பிறந்தவர்கள் ஏழுபேர். என்னுடைய 23-ஆவது வயதில் தந்தை இறந்து போனார். அவர் இருந்தவரை என்னை அன்புடன் வளர்த்து வந்தார். நான் சினிமாவில் நடிப்பது கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. இன்று எனது சகோதரன் சலீமுடன் மட்டும் பேசுகிறேனே தவிர, என் மூத்த சகோதரியுடன் பேசுவதில்லை. மற்றவர்கள் இறந்துவிட்டார்கள். என்னுடைய அம்மா இறக்கும் வரை என்னுடன்தான் இருந்தார். என்னுடைய வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது போன்று, 17-ஆவது வயதில் நான் சினிமாவில் நடிப்பதற்குமுன், என் அம்மா என்னை பலவந்தமாக தவறான தொழிலில் தள்ளவோ, ஆபாசமான படங்களில் நடிக்கவோ வற்புறுத்தியதில்லை. சினிமாவில் நடிக்க நானேதான் விரும்பினேன். "வரும் வாய்ப்புகளை வேண்டாமென்று சொல்லாதே' என்று என் அம்மா அறிவுறுத்தினார்.
 உண்மையிலேயே நான் கூச்ச சுபாவமுள்ளவள், வீட்டைவிட்டு வெளியே வரும்போது கவர்ச்சியாக உடையணிவது கூட கிடையாது. சினிமாவில் நடிப்பது என்னுடைய தொழில் என்பதால், அவர்கள் தரும் உடைகளை அணிந்து நடிப்ப துண்டு. 18-ஆவது வயதில் சில்க் ஸ்மிதாவுடன் சேர்ந்து "ப்ளே கேர்ள்ஸ்' (1995) என்ற படத்தில் நடித்தேன். பின்னர் "இன்னர தும்பிகள்' ( 2000) என்ற படத்தில் நடித்தது என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
 நான் நடித்த படங்களில் என்னை ஆபாசமான கோணங்களில் படம் எடுத்ததோ, பின்னர் அந்த காட்சிகளில் வேறொரு பெண்ணை ஆபாசமாக நடிக்க வைத்ததோ எனக்கு தெரியாது. பெரும்பாலும் நான் சென்னையில் இருந்ததால், நான் நடித்த படங்களுக்கு தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாக கேள்விபட்டேனே தவிர, தியேட்டருக்குச் சென்று நான் நடித்த படங்களை பார்த்ததில்லை. என்னுடைய முகபாவங்களையும், உடலையும் பல கோணங்களில் படமாக்குவார்களே தவிர படத்தில் எப்படி காண்பித்தார்கள் என்பது தெரியாது. ஆனால் நான் நடிக்கும் படங்கள் ஆபாசமாக இருப்பதாக விமர்சனங்கள் வந்தன.
 இந்த சந்தர்ப்பத்தில் ஒரு தயாரிப்பாளர் என்னை கன்யா ஸ்திரியாக நடிக்க வைத்து படமெடுத்தார். ஏற்கெனவே என்னைப் பற்றி தவறான தகவல்கள் பரவியிருப்பதால், இப்படத்தில் நடிப்பது தேவையற்ற பிரச்னைகளை கிளப்புமென கூறினேன், அவர் கேட்கவில்லை. அதே போன்று அந்தப் படம் முடிவடைந்தது 15 ஆண்டுகளாகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
 நான் நடிப்பது அனைத்துமே ஆபாசமான படங்கள் என்ற முத்திரை குத்தப்பட்டதால், இடையில் சில ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லை. நான் உச்சத்தில் இருந்தபோது என்னுடைய படங்கள் தணிக்கை குழுவில் அனுமதி பெறுவதற்கு பிரச்னைகள் ஏற்பட்டதாக கூறுவார்கள். உண்மையில் அதே நேரத்தில் பிரபல நடிகர்களின் படங்கள் வெளியானால் வசூல் பாதிக்குமே என்று தயாரிப்பாளர்களே என்னுடைய படத்தைத் தடை செய்யும்படி தணிக்கைக் குழு அதிகாரிகள் மூலம் முயற்சித்ததாக அறிந்தேன். மேலும் என்னுடைய படங்கள் வெளியாகும்போது தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற புகாரும் எழுந்ததுண்டு. ஜெயம் ( 2002) என்ற தெலுங்குப் படத்தில் எனக்கு கிடைத்த துணை கதாபாத்திரம் மீண்டும் எனக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்ததோடு என்னுடைய இமேஜூம் மாறத் தொடங்கியது.
 இடையில் எனக்கும் திருமணமாகி, கணவர் குழந்தைகள் என வாழ வேண்டுமென்று ஆசைவந்தது. ஆனால் அந்த சமயத்தில் நிறைய பட வாய்ப்புகள் வந்ததால், வசதியான வாழ்க்கை, வருமானம் போய்விடுமே என்ற அச்சத்தில் என்னுடைய அம்மா எனது விருப்பத்துக்கு சம்மதிக்கவில்லை. பட வாய்ப்புகள் இல்லாதபோது திருமணத்திற்காக நான் தேர்வு செய்து அழைத்து வந்தவர்களை என் அம்மா விரும்பாததால், திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தையே விட்டுவிட்டேன். இப்போது எனக்கு 41 வயதாகிறது. இன்றைய தனிமை வாழ்க்கை எனக்கு பிடித்திருக்கிறது.
 என்னுடைய வரலாற்று படத்தில் நானே நடிப்பதற்கான உடல்வாகு இப்போது இல்லை. என்னைப் போன்று நடிக்க இயக்குநர் ரிச்சா சட்டாவை ஒப்பந்தம் செய்வதாக கூறியபோது ஒப்புக்கொண்டேன். இதுவரை என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ரிச்சாவிடம் சொன்னேன். வாழ்க்கை வரலாறு என்றால் இயற்கையாக இருக்க வேண்டுமல்லவா?
 என்னுடைய வாழ்க்கை முழுவதுமே பிரச்னைகளும், சவால்களும் நிறைந்ததாகவே இருந்தது. இதிலிருந்து சொந்த குடும்பத்தினர் உள்பட யாரையுமே நம்பக்கூடாது என்பதை உணர்ந்தேன். 20 ஆண்டுகளுக்கு மேல் திரைப்படங்களில் நடித்துவிட்டேன். என்னுடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். ஒளிவு மறைவின்றி பேசுவது என் வழக்கம். இப்போது எனக்கு நானே பேச வேண்டிய நேரம் என்பதால் ஒதுங்கியிருக்கிறேன். நடிகை என்ற முறையில் எனக்குள் ஓர் ஆசை இருக்கிறது. எனக்கு கமல்ஹாசனை மிகவும் பிடிக்கும். அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்'' என்கிறார் ஷகிலா.
 - அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com