ஓடி வந்து உதவுவது ஆண்கள்தான்! நடன இயக்குநர் பிருந்தா

கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு "கலர்ஸ் தொலைக்காட்சி'யில் ஒளிபரப்பாகும் " டான்ஸ் ஸ்ள் டான்ஸ்' நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நடுவராக மீண்டும் களம் இறங்கியிருக்கிறார் நடன இயக்குநர் பிருந்தா.
ஓடி வந்து உதவுவது ஆண்கள்தான்! நடன இயக்குநர் பிருந்தா

கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு "கலர்ஸ் தொலைக்காட்சி'யில் ஒளிபரப்பாகும் " டான்ஸ் ஸ்ள் டான்ஸ்' நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நடுவராக மீண்டும் களம் இறங்கியிருக்கிறார் நடன இயக்குநர் பிருந்தா. இந்த நிகழ்ச்சி குறித்தும், அவர் கடந்து வந்த பாதை குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:
 "கலர்ஸ்' தொலைக்காட்சியில் இந்த டான்ஸ் ஸ்ள் டான்ஸ் நிகழ்ச்சிக்குள் நான் வருவதற்கு காரணம் எனது அக்கா மகள் கீர்த்திதான். பொதுவாக நான் எந்த நிகழ்ச்சி வழங்கினாலும் அதில் ஒரு தனித்துவம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இந்த நிகழ்ச்சியில் அந்த தனித்துவமும், நேர்மையும் இருந்ததால் இதில் நானும் இருக்கிறேன்.
 இதன் இயக்குநர் , டெக்னிக்கல் ஆட்கள் எல்லாரும் மும்பையில் இருந்து வந்திருக்கிறார்கள். திவாகர் கேமராமேன், கீர்த்தியும், விஜய்யும் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகின்றனர். அவர்களின் தொகுப்பை பார்க்கும்போது நமக்குள் ஓர் உற்சாகம் தானாக வந்து ஒட்டிக் கொள்கிறது. நகுல், என்னுடன் இன்னொரு நடுவராக இருக்கிறார். இதுதவிர வாரம் ஒரு சிறப்பு விருந்தினரும் வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுபவர்களும் மிக அருமையாக ஆடுகிறார்கள். இவர்களை பார்க்கும்போது எங்கள் காலத்தில் இதுபோன்ற மேடை கிடைக்கவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது. அதே சமயம், இதுபோன்ற போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வது அவ்வளவு சுலபமல்ல என்பதையும் அருகில் இருந்து பார்க்கும்போது உணர்கிறேன்.
 
 உங்களது குடும்பமே ஒரு டான்ஸ் குடும்பம்? இது எப்படி சாத்தியப்பட்டது?
 ஈரோடுதான் எங்கள் பூர்வீகம். எங்கள் குடும்பத்தில் நாங்கள் 7 சகோதரிகள். எனது அக்கா கிரிஜாவுக்கு 7 வயதிருக்கும்போது சென்னை வந்தோம். அப்போது அவங்க பத்மினி நடனக் குழுவில் ஆடிக் கொண்டு இருந்தார். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறை பக்கம் வாய்ப்பு கிடைத்து திரைத்துறைக்குள் வந்தார். பின்னர், ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். அவரை வைத்துதான் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் திரைத்துறைக்குள் வந்தோம்.
 நான் 9-ஆவது வகுப்பு படிக்கும்போதெல்லாம் நரசிம்மாச்சாரி, வெண்ணிற ஆடை நிர்மலா ஆகியோரது குழுவில் நடனம் ஆடுவோம். அப்போது எனக்கு சம்பளம் 75 ரூபாய். ஆனாலும், நாங்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு ஆடுவோம். அப்போதிருந்த மகிழ்ச்சியை இப்போதும் மறக்கமுடியாது. பிருந்தா இப்போ இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு எனது அக்கா கிரிஜாவும், ரகு மாஸ்டரும்தான் காரணம்.
 அம்மாவுக்கு நடனத்தில் ஆர்வம் அதிகம். அதனால் ஈரோட்டில் பெரிய வாய்ப்புகள் எதும் இருக்காது. சென்னை வந்தால் நிச்சயம் எதாவது ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எங்களை இங்கு அழைத்து வந்தார். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஜெயந்தி அக்காவையும், கிரிஜா அக்காவையும் நடனப்பள்ளியில் சேர்த்துவிட்டார். அதன்பிறகு படிப்படியாக வளர்ந்து அவர்கள் இந்தப் பெயரையும் புகழையும் அடைந்திருக்கிறார்கள். அன்று அவர்களின் கடின உழைப்பை எல்லாம் கேட்கும்போது, நாங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றும். அதுபோன்று, எங்க அம்மா. அவர்தான் எங்கள் அனைவரின் ஆணிவேராக இருந்தார். அவர், படிக்காதவர்தான், ஆனால் அவருடைய புத்திசாலிதனத்தையும், தைரியத்தையும் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். 7 பெண்களையும் ஆண்களைபோன்று வளர்த்தார். இன்று நாங்கள் இந்தளவிற்கு தைரியமாக அனைத்து இடத்திலும் வலம் வருகிறோம் என்றால் அன்று அம்மா கொடுத்த தைரியம்தான் இது.
 ரகு மாஸ்டரிடம் உதவியாளராக நிறைய படங்கள் ஒர்க் செய்திருக்கிறேன். ஆனால், தனியாக நடன அமைப்பாளராக வேலை செய்தது "நந்தவன தேரு' படத்தில்தான்.. ஆனால், சுந்தர்.சி இயக்கிய "உள்ளத்தை அள்ளித்தா' தான் எனக்கு பிரேக் கொடுத்தது. அது முடித்ததும் மணிரத்னம் இயக்கத்தில் "இருவர்' படம் ஓர்க் பண்ணினேன். அதன்பிறகு அப்படியே படிப்படியா இண்டஸ்ட்ரியில் பிசியாகிவிட்டேன். அதே சமயம் நாம் என்ன வேலை செய்தாலும் அதில் கடின உழைப்பு இருக்க வேண்டும். சும்மா ஏதோ ஒரு படம் வந்தது என்று நினைத்து செய்திருந்தால் இன்று எனக்கு என்று அடையாளம் இல்லாமல் போய் இருக்கும். நடனம் எனது உயிர். எனது தொழிலை நான் நேசித்து செய்கிறேன். அதுபோன்று, வேலைன்னு வந்துட்டா நான் கொஞ்சம் ஸ்ட்ரிட் ஆபிசர்தான் .
 
 உங்களது மூத்த சகோதரிகளில் யாருடைய நடனத்தைப் பார்த்து வியந்திருக்கிறீர்கள்?
 கிரிஜா அக்கா, ஜெயந்தி அக்கா, கலா எல்லாருடைய நடனமும் எனக்கு பிடிக்கும். அதில் கலாவின் நடனத்தை ரொம்பவே ரசித்திருக்கிறேன். அவளது ஷோவில் திடீர் என்று எழுந்து சென்று ஆடுவார். அதையெல்லாம் கண்டு வியந்திருக்கிறேன்.
 ஆரம்பத்தில் நான், சினிமாவுக்கான டான்ஸில் வருவதற்கு மிகவும் கூச்சப்படுவேன். அதிலிருந்து எனக்கு தைரியம் கொடுத்து அழைத்து வந்தவர் கிரிஜா அக்காதான். ஜெயந்தி அக்கா இப்போ டான்ஸ் கிளாஸ் எடுக்கிறார். இப்போ இருக்கிற நிறைய கதாநாயகர்கள் அக்காவின் மாணவர்கள்தான். கலாவை பொருத்தவரை கலான்னு சொன்னாலே கலையில் வந்தவங்க. அவரின் நடன அமைப்பில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பாலசந்தர் இயக்கிய "அழகன்' படத்தில் வரும் "கோழிக்கூவும் நேரமாச்சு...' பாடலும் , அதுபோன்று "சிங்கார வேலன்' படத்தில் கிரிஜா அக்காதான் எல்லா பாடல்களுக்கும் நடனம் அமைத்திருந்தார். அதுவும் எனக்கு அவர்களின் நடன அமைப்பில் மிகவும் பிடித்தவை. ஜெயந்தி அக்கா கொரியோகிராப் செய்ததில்லை.
 
 சந்தித்த சவால்கள், அனுபவங்கள்?
 ஏராளமான சவால்கள். அதிலும் , திரைத்துறையில் தொழில்நுட்பத்தில் பெண்கள் மிகவும் குறைவாக பங்கேற்ற காலகட்டம் அது. அதனால் நிறைய சவால்களை நிச்சயம் சந்திருக்கிறேன். உதாரணமா என்னைச் சுற்றி ஒரு 200 ஆண்கள் இருப்பார்கள். நான் ஒருத்தி மட்டும்தான் அங்கே பெண்ணாக இருப்பேன். அதுபோன்ற சமயங்களில் நான் என்னை பெண்ணாக நினைக்காமல், ஆணாக நினைத்துக் கொள்வேன். ஆண்களைப் போன்றுதான் உடையும் அணிந்திருப்பேன். நிறைய முறை என்னை ஆண் என்று நினைத்து தள்ளுடா தம்பி என்று பின்னாலிருந்து தள்ளிவிட்டுச் செல்வார்கள். அதன்பின் நான் பெண் என்று தெரிந்ததும் மன்னிப்பு கேட்பார்கள். அதே சமயம் பெண் என்று கேவலமாக யாராவது பேசிவிட்டால் அவர்களை சும்மா விடமாட்டேன்.
 அப்போதெல்லாம் நிறைய பேர் சொல்லுவார்கள் சினிமாவில் இருந்தால் கஷ்டம், சினிமாத்துறை பெண்களுக்கு ஆபத்து நிறைந்தது என்றெல்லாம் சொல்லுவார்கள். ஆனால், நான் இதுவரை அதுபோன்ற அனுபவத்தை பெற்றதே இல்லை. என்னைப் பொருத்தவரை சினிமாதான் எனக்கு பாதுகாப்பான துறையாக கருதுகிறேன். லைட் மேன்னில் இருந்து, புரொடக்ஷன் என எல்லாரும் என்னை ராணி மாதிரி பார்த்துக் கொள்வார்கள். ஏதாவது ஓர் அடிபட்டால் கூட அவர்கள்தான் முதலில் ஓடி வருவார்கள். அப்போ இருந்ததற்கும் தற்போது சினிமாத் துறை இருப்பதற்கு நிறைய மாற்றங்கள், நவீனத்துவம் வந்துவிட்டது என்பது எல்லாருக்குமே தெரியும். அதற்கு தகுந்தாற் போல் என்னை அப்டேட் செய்து கொள்வேன். ஒரு சோக பாடல் கூட நான் கேட்க விரும்பமாட்டேன். எப்பவுமே பாசிட்டிவ்வாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
 
 உங்களது நடன அமைப்பில் மறக்க முடியாதது?
 "கடல்' படத்தில் "அடியே...' என்று வரும் அந்தப் பாடல் மறக்க முடியாதது. அதுபோன்று மணிரத்னம் இயக்கத்தில் நான் செய்து கொடுத்த அத்தனை பாடல்களுமே மறக்கமுடியாத பாடல்கள்தான். அந்தளவிற்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கும். அவரை என் மானசீக குருவாகக் கூட கருதுவேன்.
 
 பிரபலங்களுடன் செய்த நடனங்கள் குறித்து?
 ரஜினி சாரை பொருத்தவரை, "இதெல்லாம் எனக்கு வராது பிருந்தா''ன்னு சொல்லுவார். ஆனால், சூப்பரா ஆடிடுவாரு. கமல் சார் ரொம்ப புத்திசாலி. அவரை அவ்வளவு சீக்கிரம் ஏமாற்றமுடியாது. ரகு மாஸ்டருக்கு அடுத்தபடியா நான் நடன அசைவுகளை நிறைய கற்றுக் கொண்டது கமல் சாரிடம்தான். அஜித் மிகவும் எளிமையானவர் இப்படியும் ஒரு மனிதரா என வியந்திருக்கிறேன், விஜய் ரொம்ப அமைதியானவர், இவ்வளவு அமைதியா இருக்கும் இவர் ஆடுவரா என ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால், கேமரா ஆன் ஆனதும் அவருக்கு எங்குதான் பவர் வரும் என்று தெரியாது அப்படி ஓர் ஆட்டத்தைக் கொடுப்பார். சூரியா எல்லாரிடமும் ரொம்ப அக்கறையா இருப்பார்.
 
 உங்களது குடும்பம்?
 எனக்கு பெரியவர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம்தான். லவ் பண்ண எல்லாம் நேரமில்லை. திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் அம்மா, அக்கா எல்லாம் சேர்ந்து சொல்லியதில் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டேன். அதனால்தான் மிக அன்பான கணவர் எனக்கு கிடைத்திருக்கிறார். எனது கணவர் பரமேஷ்வர் என்னை மிகவும் புரிந்து வைத்திருப்பவர். அதனால்தான் இவ்வளவு சுதந்திரமாக செயல் பட முடிகிறது. ஆதவ், மாதவ் என எனக்கு இரண்டு இரட்டை குழந்தைகள். அவர்கள்தான் எனது வாழ்க்கை.
 
 நடிப்பு பக்கம் வராதது ஏன்?
 எனக்கும் நடிப்புக்கும் ஒத்துவராது. "நம்மவர்' படத்தில் அந்த கேரக்டருக்காக நடித்துக் கொடுத்தேன். அப்போது கூட என்னைச் சார்ந்தவர்கள், நண்பர்கள் யாரையும் படத்தை பார்க்கக் கூடாது என்று உறுதி வாங்கிக் கொண்டேன். எனக்கு டான்ஸ் போதும்.
 - ஸ்ரீதேவி குமரேசன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com