தாய்ப்பாலில் உருவாகும் நகைகள்!

பெற்ற குழந்தையைத் தாலாட்டாத சீராட்டாத தாய்மார்கள் இருக்க மாட்டார்கள். அதுவும் முதல் குழந்தை என்றால் கேட்கவே வேண்டாம். குழந்தையைத் தோளிலிருந்தும் மடியிலிருந்தும் அன்னையர்
தாய்ப்பாலில் உருவாகும் நகைகள்!

""ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ..
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ ..
மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்காமணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே ..
ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே...!'' - என்று

பெற்ற குழந்தையைத் தாலாட்டாத சீராட்டாத தாய்மார்கள் இருக்க மாட்டார்கள். அதுவும் முதல் குழந்தை என்றால் கேட்கவே வேண்டாம். குழந்தையைத் தோளிலிருந்தும் மடியிலிருந்தும் அன்னையர் இறக்கவே மாட்டார்கள். குழந்தையை எத்தனை கொஞ்சினாலும் அம்மாக்களுக்கு திருப்தி ஏற்படாது. 

சில அன்னையர் அடுத்த நிலைக்குப் போவார்கள். குழந்தைக்கு முதன்முதலாக தலை முடியிறக்கும்போது கொஞ்சம் முடியை எடுத்துப் பாதுகாப்பார்கள். முதன்முதலாக நகம் வெட்டும்போது சிலவற்றை எடுத்து வைத்துக் கொள்வார்கள். முதல் பல் விழும்போது அதையும் மறக்காமல் சேகரித்து பத்திரமாகப் பாதுகாப்பார்கள். இந்த நிலையையும் கடந்து சிந்திக்கும் அன்னையர் இல்லாமல் இல்லை. 
முதன்முதலாக தாயாகும்போது சுரக்கும் தாய்ப்பாலில் நகைகள், நினைவுப் பொருள்கள் செய்து கொள்ளும் பழக்கம் மேலை நாடுகளில் நடைமுறையில் உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் வசிக்கும் ப்ரீத்தி விஜய், வெளிநாட்டு அன்னைகள் போலவே இந்திய அன்னைகளின் கனவினை நிறைவேற்றித் தருகிறார். ஆம்! இந்தியாவில் ப்ரீத்தி மட்டுமே தாய்ப்பாலில் நகைகள், நினைவுப் பொருள்களை உருவாக்கி வருகிறார். ப்ரீத்தி அடிப்படையில் கைவினைக் கலைஞர் என்பதால் நகைகள், நினைவுப் பொருள்களின் வடிவமைப்பு செய்வது அவருக்கு கை வந்த கலை. 
முப்பது வயதாகும் ப்ரீத்தி செய்து தரும் நகைகள், நினைவுப் பொருள்கள் தாயன்பை உரக்கச் சொல்லும் ஓர் ஊடகமாக மாறியுள்ளன. தாய் - குழந்தையின் பந்தத்துக்கு ஒரு சாட்சியாக அமைகின்றன. "அம்மா என் மேல் எத்தனை அன்பிருந்தால் இப்படி எல்லாம் செய்திருப்பார்" என்று பிள்ளைகளுக்கு மெளனமாக புரிய வைக்கும்.
""முகநூலில் தாய்ப்பாலில் நகைகள் செய்ய முடியுமா என்ற கேள்வியைப் பார்த்தேன். அதுகுறித்து பல தகவல்கள் சேகரித்தேன். தாய்ப்பாலை திரவ நிலையிலிருந்து திடமான நிலைக்கு மாற்ற பல பரிசோதனைகள் நடத்தினேன். ஆரம்பத்தில் தோல்வியே கிடைத்தன. பால் திடப்பொருள் ஆகும்போது நிறம் மாறுபட்டது. பாலின் வெண்மை நிறம் வர பல முயற்சிகளுக்குப் பிறகு சில ரசாயனப் பொருள்கள் சேர்த்து வெண்மை நிறம் மங்காதவாறு பார்த்துக் கொண்டேன். அம்மாக்களின் உடல்வாகுக்கு ஏற்றவாறு தாய்ப்பால், வெண்மை அல்லது மங்கலான வெண்மை நிறத்தில் இருக்கும். தாய்ப்பாலின் நிறம் எப்படி உள்ளதோ அப்படியே அந்த நிறம் சற்றும் வேறுபடாத முறையில் நகைகள், நினைவுப் பொருள்கள் செய்கிறேன். சிலர் நீல நிறம், இளஞ்சிவப்பு நிறத்தில் வேண்டும் என்பார்கள். அப்படி விரும்பிக் கேட்பவர்களுக்கு மட்டும் அந்தந்த நிறங்களில் நகைகள் செய்கிறேன். 
தாய்ப்பால் கொண்டு மோதிரம், காதணிகள், பென்டண்ட் போன்றவற்றை வடிவமைக்கிறேன். உலோகமாக வெள்ளியைப் பயன்படுத்துகிறேன். தரமான தெளிவான பிளாஸ்டிக்களையும் பயன்படுத்துவேன். நினைவுப் பொருள்கள் என்ன வடிவத்தில் வேண்டுமோ அந்த வடிவத்தில் செய்து தருகிறேன். 
எனது முகநூல் மூலமாக என்னை அணுகலாம். பிரத்யேகமான பிளாஸ்டிக் பையில் தாய்ப்பாலை எனக்கு அனுப்பித்த தரவேண்டும். அதற்கான குறிப்புகளை நான் தருவேன். பால் கிடைத்ததும் அதை பதப்படுத்தி வைப்பேன். அதனால் பால் கெட்டுப் போகாது. ஒருமாத காலத்துக்குள் அவர்கள் கேட்கும் நகைகள் அல்லது நினைவுப் பொருள்கள் தயாராகிவிடும். 
குழந்தையின் முடி சுருண்டிருந்தால் மட்டுமே, தலை முடி கொண்டு நினைவுச் சின்னம் உருவாக்க முடியும். நீளமான முடியைக் கையாளுவதில் சிரமம் உள்ளது. சிலர் தலைப் பிள்ளையின் முதல் பல், தொப்புள்கொடியைக் கொண்டு வருவார்கள். அதையும் தேவையான வடிவத்தில் நினைவுப் பொருளாக மாற்றித் தருகிறேன். தாய்ப்பாலில் நகைகளை ஓராண்டு காலமாக செய்து வருகிறேன்'' என்கிறார் அநேக அன்னைமார்களின் அன்பைப் பெற்றிருக்கும் ப்ரீத்தி விஜய்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com