அம்மா! - எழுத்தாளர் ஸுஜாதா விஜயராகவன் அம்மா என்ற அற்புதம்!

என் தாய் அனந்தலக்ஷ்மி சடகோபன் பிரபலமான கர்நாடக சங்கீத விதுஷி. பத்து வயதில் கச்சேரி செய்யத் தொடங்கினார்.
அம்மா! - எழுத்தாளர் ஸுஜாதா விஜயராகவன் அம்மா என்ற அற்புதம்!

பிரபலங்கள் தங்கள் தாயார் குறித்து எழுதும் தொடர்:
 என் தாய் அனந்தலக்ஷ்மி சடகோபன் பிரபலமான கர்நாடக சங்கீத விதுஷி. பத்து வயதில் கச்சேரி செய்யத் தொடங்கினார். திருச்சி வானொலி நிலையம் அவரை அந்த வயதிலேயே அழைத்தது. முதல் நிகழ்ச்சிக்காக அவருடன் அவர் தந்தையும், பாட்டியும் உடன் போனார்கள். ஸ்டூடியோவில் ஒரே மைக்தான் உண்டு. வயலின் வித்வானும், மிருதங்க வித்வானும் சற்றே தள்ளி அமர வேண்டும். வாய்ப்பாட்டின் ஓசையை அடக்கி விடாமல் இருக்க இந்த ஏற்பாடு. பாட்டிக்குப் பரம திருப்தி, பேத்தி ஆண்களுக்கு நடுவில் உட்கார வேண்டியதில்லை என்பதால்.
 என் தாயின் அம்மா அலமேலுதான் அவரது பாட்டுக்கு விதை, உரம், நீர் எல்லாம். பதினாறு வயதுக்குள்ளாகவே என் அம்மாவின் புகழ் பரவியது. "சங்கராபரணனை அழைத்தோடி வாடி' என்ற நாலு ராகத்தில் அமைந்த ராகம் தாளம் பல்லவி இன்றும் ரசிகர்களிடையே பாராட்டுப் பெறுகிறது. தமிழ்ப் பாடல்கள் மட்டுமே கொண்ட முதல் கச்சேரி செட் அவரது குரலில் பதிவு செய்து வெளியிட்டது ஹெச்.எம்.வி. நிறுவனம். பின்னர் வெளியான அம்புஜம் கிருஷ்ணாவின் "கான மழை பொழிகின்றான்' என்ற ராகமாலிகைப் பாடல் அம்மாவுக்கு மேலும் புகழ் தேடித் தந்தது.
 எனது பத்து வயதில் அம்மா கச்சேரிகளில் அவருடன் பாடத் தொடங்கினேன். அவரது பாட்டுக்களைக் கேட்டுக் கேட்டே ஓரளவு பாடம் ஆகிவிடும். அதன்பின் அதை நுணுக்கமாகத் திருத்தி, அனுஸ்வரங்களைப் புரிய வைத்து மெருகேற்றுவார். "இந்த இடத்தில் அடித்துப் பாடு. அப்போது குரலில் நினைத்தது பேசும்'' என்பார். சில அகாரங்கள், கமகங்களை கச்சிதமாக ஒலிக்க வைக்க அவர் விசித்திரமாக ஓர் உத்தியைச் சொல்வார். அடாணாவில் ஒரு பிடியில் ""மேல் மத்யமத்தை நினைத்துக் கொண்டு பிடி, அப்பட்டமாக அந்த ஸ்வரத்துக்குப் போய் விடாதே'' என்பார். நன்றாக வாய்விட்டுப் பாட வேண்டும் என்பதை வலியுறுத்துவார். அம்மாவின் குரலில் வலிமை, காத்திரம், இனிமை எல்லா ஸ்தாயிகளிலும் ஜொலிக்கும். மைக் இல்லாமலும் கணீரென்று கேட்கும்.
 பாவம் என்பது ராகத்திலும் சாஹித்யத்திலும் இயல்பாக வல்லினம் மெல்லினத்துடன் ஒலிக்கும். வாமன்ராவ் ஸடோலிகர் என்ற வித்வானிடம் ஹிந்துஸ்தானியும் பயின்றதால் அவரது ராக ஆலாபனைகளுக்கு அலாதியான அழகு உண்டு. மின்னல் வேகத்தில் அனாயாசமாக ப்ருகா பேசும். கார்வைகள் ஸ்ருதியுடன் இழைந்து ஒவ்வொரு ஸ்தாயியிலும் பொலிவு கூட்டும்.
 பரம ரசிகை. யார் பாடினாலும் ஆர்வத்துடன் ரசித்துப் பாராட்டுவார். அவருக்கு விருப்பமான கலைஞர்கள் பட்டியல் மிக நீளம். எல்லா வகையான இசையும் அவருக்கு உகந்தவை. அவரது மருமான் மதுரை சுந்தரின் கர்நாடக இசையையும், மைத்துனர் மகன் ஸ்ரீனிவாஸ் பாடும் சினிமாப் பாடல்களையும் கஜல்களையும் மெச்சி மகிழ்வார். ஸ்வாமி ஹரிதாஸ்கிரியின் நாமசங்கீர்த்தனம், உடையாளூர் கல்யாணராமனின் பஜனை என்று அவற்றில் ஆழ்ந்து மெய்மறந்து போவார்.
 நிதமும் காலை எட்டு மணி அளவில் அம்மாவிடம் இருந்து போன் வரும். "ரேடியோ வை...அற்புதமாகப் பாடுவதைக் கேளு' என்று கட்டளையே போடுவார். சங்கீதம் அவருக்கு உணவு, அமிர்தம், சர்வரோக நிவாரணி என்பதைப் பார்த்து வியந்திருக்கிறோம். ஓயாமல் அவர் ரேடியோ, காசெட் மூலம் இசையில் நாளெல்லாம் திளைக்க, அவரைப் பார்த்துக் கொள்ள இருந்த பெண்மணியே "இவங்க பாட்டு நல்லா இருக்கு. அந்த காசெட் நல்லா இல்லே' என்று கூறும் விமர்சகர் ஆகிவிட்டார்.
 படிப்பதில் அளவு கடந்த ஆர்வம். தமிழ்ப் பத்திரிகைகள், முக்கியமாக "துக்ளக்' ஒருவரி விடாமல் படிப்பார். பிடித்த கட்டுரைகளை ஜெராக்ஸ் எடுத்து என்னிடமும் என் தம்பிகளிடமும் பகிர்ந்து கொள்வார். பத்திரிகையாளர் சோவின் புத்திக்கூர்மை, வாக்கு சாதுர்யம் இரண்டையும் பிரமிப்புடன் பாராட்டுவார்.
 சுஜாதா (நான் அல்ல) வின் எழுத்தை வரிவரியாய் ரசிப்பார். அம்மாவின் நகைச்சுவையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். அபாரமாக மிமிக்ரி செய்வார். ஒருவர் பேசுவதை அவர் குரல், முகபாவங்களுடன் அம்மா பேசுவது எங்களுக்கெல்லாம் அலுக்காத பொழுதுபோக்கு. தனது மருத்துவமனை அனுபவங்களைப் பற்றி சுஜாதா எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தவுடன் தனது பாராட்டை நேரில் தெரிவிக்கச் சொல்லி என்னை அனுப்பினார்.
 அம்மாவுக்கு மருத்துவமனை அனுபவங்கள் நிறையவே உண்டு. அம்மாவின் உடல்நலத்துக்காகப் பெரியாழ்வார் பாசுரம் ஒன்றை அவர் தினமும் படித்தால் நன்மை தரும் என்ற செய்தியை சுஜாதா என் மூலம் அம்மாவுக்கு அனுப்பினார். மனம் நெகிழ்ந்த அம்மா அந்தப் பாசுரத்தை ஈடுபாட்டுடன் படித்தார். "பண்டன்று பட்டினம் காப்பே' என்று ஒவ்வொரு பாடலும் முடியும். "பட்டினம் பாக்கே' என்று நான் இதைப் படித்து விடாமல் இருக்க வேண்டுமே என்று அம்மா ஒரு நமுட்டுச் சிரிப்புடன் சொன்னதை இன்று நினைத்தாலும் சிரிக்கிறோம்.
 சங்கீதத்துக்கு இணையாக அவர் ரசித்தது சமையல். திருநெல்வேலி பாணி, திருவனந்தபுரம் பாணி, வடக்கத்திய பாணி என்று அத்தனை விதங்களும் செய்து திக்குமுக்காடச் செய்து விடுவார். இறுதிநாள் வரை தன் கையால் பூஜையில் இருந்த ஆஞ்சநேயருக்குத் தயிர் சாதம் செய்து சமர்ப்பித்து வந்தார்.
 ஒவ்வொரு சிநேகிதமும் அவருக்கு ஆயுள் பரியந்தம் நீடித்துத் திகழ்ந்தது. அப்படி உயிராய்ப் பழகுவார். அவரது தோழியர் அனைவரும் என்னையும், என் சகோதரர்களையும் தங்கள் குழந்தைகளாகவே கருதி இன்றும் அன்பு காட்டுகிறார்கள் என்பது அவர் ஆக்கி வைத்த உறவு. பிறந்தகம், புக்ககம் என்ற வேறுபாடே இல்லாமல் எல்லா உறவினரிடமும் அன்பான வார்த்தைகளும், வார்த்தையில் அடங்காத உபசாரமும் அவரது பாணி.
 சங்கீதம் மட்டுமல்லாது அம்மாவிடம் கற்றுக் கொள்ள ஏராளமாக இருந்தது. நாங்கள் கற்றது கைம்மண் அளவே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com