கதை சொல்லியின் கதை!

இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது. குழந்தைகளின் கவனங்களைத் தன் பக்கம் திருப்பிக் கொள்வதில் கணினியும்,
கதை சொல்லியின் கதை!

இன்றைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது. குழந்தைகளின் கவனங்களைத் தன் பக்கம் திருப்பிக் கொள்வதில் கணினியும், செல்போனும், டிவியும் போட்டா போட்டி போடுகின்றன.
 குழந்தைகள் விளையாட அம்மாக்களே குழந்தையின் கையில் செல்போனைக் கொடுத்துப் பழக்குகிறார்கள். குழந்தைகளை வழிநடத்த, வழிகாட்ட இந்த அவசர உலகில் அப்பா அம்மாக்களுக்கு நேரம் இல்லை. இந்த ஊடகங்களின் அமானுஷ்ய தாக்கத்திலிருந்து சின்னஞ்சிறுசுகளை மீட்டு வர ஈரோட்டைச் சேர்ந்த வனிதா மணியிடம் ஒரு மந்திரக்கோல் இருக்கிறது. அது பல மாயங்களைச் செய்து வருகிறது.
 மரத்தின் நிழலில் சிறார்களை அமரச் செய்து வீசும் காற்றை அனுபவித்தபடி கிளைகளில் அமரும் பறவைகள், பறக்கும் தும்பிகள், பட்டாம்பூச்சிகளைப் பார்த்து மகிழச் செய்து, கொஞ்சம் கதையும் கொஞ்சம் புத்தக வாசிப்புமாய் ஒவ்வொரு ஞாயிறுக்கும் விடை கொடுத்து அடுத்த ஞாயிறுக்காக சிறார்களை ஆர்வத்துடன் காத்திருக்க வைக்கும் ரசவாதத்துக்குச் சொந்தக்காரர்தான் "கதை சொல்லி' வனிதாமணி.
 இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் வனிதாமணியை சிறுவர் சிறுமியர் இன்றைய வழக்கப்படி "ஆண்டி' என்று அழைப்பதில்லை. வாய் நிறைய "சித்தி' என்றும் "அத்தை' என்றும் வாஞ்சையுடன் அழைக்கின்றனர். அப்படி அழைக்க வைத்திருக்கிறார் வனிதாமணி. அதுவே ஒரு மாற்றம்தானே?
 குழந்தைகள் உளநலம் குறித்த தனது பயணம் குறித்து வனிதாமணி விளக்குகிறார்.
 ""வேதியியலில் பட்டப்படிப்பை முடித்த நான், திருமணத்துக்குப் பின் எம்.பி.ஏ. நிதி நிர்வாகம் படித்தேன். அத்துடன்
 எம்.ஏ.யோகாவும் படித்தேன். நான் படித்த யோகாவை குழந்தைகளுக்குப் பிடித்த யோகாவாக மாற்ற வீட்டுக்கு அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்து வந்தேன். கணவரின் சொந்த வர்த்தக நிறுவனத்தில் நிர்வாகப் பிரிவில் என்னை சில ஆண்டுகள் இணைத்துக் கொண்டேன். ஆனால் அந்த வேலையில் மனது ஒட்டவில்லை. எனக்கு விருப்பமான குழந்தைகள் தொடர்பான ஒன்றில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதல், தேடல் ஏற்பட்டது. குழந்தைகளை நெறிப்படுத்த ஆடல், பாடல், கதைகள் சொல்வதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு மாற்று யோசனை உதித்தது. அந்த யோசனையை நிஜப்படுத்தி எனது களமாக ஆக்கிக் கொண்டேன்.
 கதை சொல்லும் பழக்கத்தை முதலில் என் வீட்டிலிருந்து தொடங்கினேன். ஆம்! என் குழந்தைகளுக்கு கதைகளை ஓரங்க நாடகமாகச் சொல்ல ஆரம்பித்தேன். எனக்கு என் பாட்டிகள், அம்மா சொன்ன கதைகள் அதற்குக் கை
 கொடுத்தன. போகப் போக திரும்பத் திரும்ப அதே கதைகளை விவரிக்க எனக்கே சலித்துப் போனது. பிறகு கதைகளைப் புனைய ஆரம்பித்தேன். வயதானவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவர்களுக்குத் தெரிந்த, அவர்களின் வாரிசுகளுக்கு, பேரன் பேத்திகளுக்குச் சொன்ன கதைகளைக் கேட்டு மனதில் பதிவு செய்து கொள்வேன். அவற்றை குழந்தைகளிடம் பங்கு வைப்பேன். அதனால் கதையை நடிப்புடன் குரலில் ஏற்ற இறக்கத்துடன் குழந்தைகளுக்குப் பிடிக்கும் விதத்தில் சொல்லும் அனுபவம் ஏறுமுகத்தில் அமைந்தது.
 "பிள்ளைகள் கண்ணை மூடாமல் வாயைத் திறந்தவாறே உன் கதைகளை கேட்டு ரசிக்கிறார்கள்.உனது கதை சொல்லும் பாங்கும் சுவாரஸ்யமாக இருக்கிறது. கதை சொல்வதை பதிவு செய்தால் மற்ற குழந்தைகளுக்கும் போட்டுக் காட்டலாமே' என்று கணவர் சொல்ல, எனது குழந்தைகளைத் தாண்டி பிற குழந்தைகள் குறித்து யோசிக்கத் தொடங்கினேன்.
 கதை சொல்வதை பதிவு செய்யத் தொடங்கினேன். அதில் பல சிரமங்கள், தடைகளைக் கடந்தேன். பதிவு செய்கிறோம் என்று முன்னமே தெரிந்து விடுவதால், கேட்பவர்களைக் கவரும் விதத்தில் கதை இருக்க வேண்டும் என்பதிலேயே கவனம் சென்றதால், கதை சொல்லும் போக்கில் சுணக்கம் ஏற்பட்டு, செயற்கைத்தனம் வந்து உட்கார்ந்து கொண்டது. அதனால் பதிவு செய்வதை நிறுத்திவிட்டு சிறார்களிடம் நேராகச் சென்றுவிடுவது என்று தீர்மானித்தேன்.
 தீவிர புத்தக வாசிப்புடன், கதை சொல்லி சதீஷ், இதே துறையில் பயணிக்கும் பானுமதி ஆகியோரிடம் ஆலோசனைக் கேட்டேன். எழுத்தாளராகவும் திருவண்ணாமலையில் கதை சொல்லியாகவும் இருக்கும் பவா செல்லத்துரையும் உற்சாகம் தந்தார். கதை சொல்லியாக அவதாரம் எடுக்க தீவிரமாக இயங்கத் தொடங்கினேன்.
 எனது வயதுக்கான நூல்களை ஒதுக்கிவிட்டு, குழந்தைகளுக்கான நூல்களைத் தேடிப்பிடித்து வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். குழந்தைகளுக்காக "பட்டாம்பூச்சி' என்ற பெயரில் நூல் நிலையம் ஒன்றை வீட்டில் தொடங்கினேன். சுமார் 2,000 நூல்களை வாங்கி வரிசைப்படுத்தினேன். அவற்றில் 90 சதவீதம் குழந்தைகளுக்கான தமிழ் நூல்கள். குழந்தைகளுக்கு தமிழில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது லட்சியங்களில் ஒன்று. கூச்சத்தை போக்கி பேசும் திறமையை வளர்க்க வேண்டும் என்பது இரண்டாவது இலக்கு. இவற்றை அடைய கதைக் களம்' என்ற பெயரில் கதை சொல்ல ஆரம்பித்தேன்.
 "கதைக்களம்' நிகழ்ச்சியில் மூன்றிலிருந்து 12 வயது வரையுள்ள சிறுவர் சிறுமியர் கலந்து கொள்கின்றனர். இந்தப் பயிற்சிக்கு கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. பட்டாம்பூச்சி நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் கட்டணம் இல்லை. தொடக்கத்தில், அரசுப் பள்ளிகள், பொது நூலகம் இவற்றில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தேன். திருப்பூர், திருச்செங்கோடு, நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய இடங்களிலும் "கதைக்களம்' பட்டறை, கதை சொல்லும் பயிற்சி முகாம்கள் நடத்தியிருக்கிறேன். இதில் பெற்றோர்களுக்கு கதை சொல்வதன் மூலம் குழந்தைகளை எப்படிக் கையாளலாம் என்ற பயிற்சி முகாம்களும் அடங்கும்.
 பல்லாங்குழி போன்ற பாரம்பரிய முத்திரையுள்ள விளையாட்டுகள் எனது வகுப்புகளில் சிறார்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
 சிறார் தன் சுய புத்தியினால் சிந்தித்து செயல்பட அவர்களைப் பழக்குவதுதான் இப்போதைய உடனடித் தேவை. சிறார்களைக் கொண்டு கடிதம் எழுத வைத்தேன். எல்லா குழந்தைகளும் "எனக்கு விளையாட நாய்க்குட்டி வேணும்' என்றுதான் எழுதினார்கள். சக உயிர்களை நேசிக்கும் பண்பு குழந்தைகளிடம் தானே வந்துவிடுகிறது. வளரும் சூழ்நிலை காரணமாக குழந்தையிடம் இருக்கும் நல்ல பண்புகள் ஒவ்வொன்றாக கழன்று போகின்றன. அதைத் தடுப்பதில் கதைக்களம் கவனத்தைக் குவித்ததுள்ளது'' என்கிறார் வனிதாமணி.
 - பிஸ்மி பரிணாமன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com