காஞ்சி நெசவுப் பெண்களுக்கு தேசிய விருது

பட்டு நெசவுக்கு உலகப் புகழ்பெற்ற நகரமாக காஞ்சிபுரம் விளங்கி வருகிறது. இந்தப் புகழுக்கு இணங்கும் வகையில் தேசிய விருதுக்குத் தேர்வாகிய நெசவாளர்கள் மீண்டும் தங்களது புகழை
காஞ்சி நெசவுப் பெண்களுக்கு தேசிய விருது

பட்டு நெசவுக்கு உலகப் புகழ்பெற்ற நகரமாக காஞ்சிபுரம் விளங்கி வருகிறது. இந்தப் புகழுக்கு இணங்கும் வகையில் தேசிய விருதுக்குத் தேர்வாகிய நெசவாளர்கள் மீண்டும் தங்களது புகழை நிலை நாட்டியுள்ளனர். அவ்வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக மத்திய அரசு கொண்டாடுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் உள்ள நெசவாளர்களின் சிறந்த 21 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டுக்கான தேசிய கைத்தறி நெசவாளர்களுக்கான விருதுகளை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.
 அதில், சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருதுக்கு, பட்டு நெசவுக்கு பெயர் போன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரி (60), சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய நற்சான்று விருதுக்கு பார்வதி (46) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார்.
 விருதுகளைப் பெற்ற இரண்டு பெண்களுமே விருது பெறுவதற்காக அவர்களது படைப்புகளைச் செய்வில்லை. விருது அறிவித்தது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. நெசவுத்தொழிலின் மீது கொண்ட ஆழ்ந்த அனுபவம், உழைப்பு, நேர்த்தி ஆகியவையே அவர்களைத் தேசிய விருதுக்கு கொண்டு சென்றுள்ளது.
 விருது வாங்கிய அனுபவம் குறித்து மகேஸ்வரி அதிகம் பேசுவார் என்ற எதிர்ப்பார்ப்படன் சென்றபோது, அவர் வீட்டில் பட்டு நெசவு குறித்து அதிக விஷயங்களைப் பகிர்ந்து கொண்டவர் மகேஸ்வரியின் கணவர் குப்புராமன் (72).
 பூர்விகம், பட்டு நெசவு அனுபவம் குறித்து...
 சொந்த மாநிலம் குஜராத். நாங்கள் சௌராஷ்ட்ரா மொழி பேசுபவர்கள். அங்கிருந்து, தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்தோம். அதன்பிறகு, நெசவு தொழிலைக் கற்றுக்கொண்டு, 60 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்துக்கு வந்தோம். 10 வயதிலிருந்தே பட்டு நெசவு செய்து வருகிறேன். கடந்த 1966-ஆம் ஆண்டிலிருந்து முருகன் பட்டு நெசவு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். பட்டு நெசவுத் தொழிலில் சுமார் 62 ஆண்டுகள் அனுபவம் உண்டு. அதேபோன்று எனது மனைவி மகேஸ்வரி 25 வயதிலிருந்து, கடந்த 35 ஆண்டுகளாகப் பட்டு நெசவு செய்து வருகிறார். எனக்கு இரண்டு மகன்கள், 2 மகள்கள். இரண்டு மகன்களும், மருமகள்களும் பட்டு நெசவுத் தொழிலில்தான் ஈடுபட்டு வருகின்றனர்.
 விருது பெற்ற புடவை குறித்து...
 கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளதால், பட்டு சேலைகள் செய்வதற்கான ஆர்டர் அங்கிருந்துதான் வரும். அந்த வகையில் கோர்வை ரகத்தில் நெய்வதற்கு வடிவமைப்பு ஒன்று வந்தது. அந்த ரகத்தில், வடிவமைப்பில் நெய்வது சற்று கடினமாக இருந்தது. வேலைப்பாடும் அதிகமாகக் காணப்பட்டது. இதனைச் சவாலாக எடுத்துக்கொண்டு நெய்தோம். இந்த வடிவமைப்பில் ஈவ்னிங்-மார்னிங், மயில், மேல்சக்கரம், அன்னம், களபுட்டா யூனியன் 8" 4" அளவு என்ற வகையில் அரக்கு-பழுப்பு நிறத்தில் இரண்டு பக்கம் கொண்ட பட்டுசேலை நெய்து கொடுத்தோம். அந்த சேலைக்கு தான் இப்போது விருது கிடைத்துள்ளது. விருது கிடைக்கும் என்ற எண்ணத்தில் நெய்யவில்லை.
 எத்தனை நாள்கள் என்னென்ன வேலைகள்?
 வடிவமைப்பு, ஜரிகை, பட்டு ஆகியவற்றைப் பெற்றவுடன், பாவு புனைப்பு, கயிறு கட்டுதல், டிசைன் அட்டைக் கட்டுதல், உடல் வடிவம் ஏற்றுதல் என ஒவ்வொரு வேலைக்கும் தலா 2 நாள்கள் என நெய்வதற்கு முன்வேலையாக மொத்தம் 10 நாள்கள் ஆனது. அதன்பிறகு, இழைக்கும் பணி (சப்பூரி), தாள் சுற்றல், நாடா கோர்த்தல், தறி அடித்தல் என சுமார் 30 நாள்கள் ஆனது. நாளொன்றுக்கு 9 மணி நேரம் இந்தப் புடைவைக்கு வேலை செய்தோம். விருது பெறும் சேலைக்குக் கூலியாக ரூ.8 ஆயிரம் கிடைக்கும்.
 வேறு என்னென்ன ரகங்கள் நெய்வீர்கள்?
 அனைத்து வகையான பட்டுச் சேலைகளும் நெய்வோம். குறிப்பாக, சாதாரண, ஜாங்களா, கோர்வை, ஒன்சைடு, டபுள்சைடு, பாயாடி, ஈவ்னிங் - மார்னிங் ஆகிய ரகங்கள் நெய்வோம். இதில், கோர்வை ரகங்கள் அதிக வேலைப்பாடு கொண்டவை.பார்ப்பதற்கு கிராண்ட் லுக் இருக்கும். வெளிமாநிலத்தவர்கள் அதிகம் வாங்கிச் செல்வதுண்டு. தமிழக மக்களைப்பொறுத்தவரையில், ஒன்சைடு ரகங்கள் அதிகம் வாங்குவர். 4 முதல் 30 நாள்கள் வரை நெய்யக்கூடிய பட்டுச் சேலைகளும் உண்டு.
 விருது பெற்றது குறித்து...
 கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பட்டு நெசவுத்தொழில் ஈடுபட்டு வருகிறோம். விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சளிக்கிறது. உழைப்புக்கு கிடைத்த வெகுமதி என கருதுகிறேன். இது மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது என்றார்.
 தேசிய நற்சான்றிதழ் விருது பெற்ற பார்வதி:
 பிள்ளையார்பாளையம் ஒத்தவாடை தெருவில் வசித்து வரும் பன்னீர்செல்வத்தின் மனைவி பார்வதி (46). இரண்டு தலைமுறைகளாக பட்டு நெசவுத் தொழில் ஈடுபட்டு வருகின்றனர். சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய நற்சான்று விருதுக்குத் தேர்வாகியது குறித்து பார்வதி கூறுகையில்,
 "கடந்த 41 ஆண்டுகளாகப் பட்டு நெசவு செய்து வருகிறோம். ஓராண்டாக முருகன் பட்டு கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறேன். விருதுக்காகத் தேர்வு பெற்ற சாதாரண ரக பட்டுச்சேலையில், மல்லி மொக்கு, ஜரிகை கட்டம், முந்தானையில் மாடம், தோரணம் வடிவங்கள் இருக்கும். இது சிறிய ரகமாக இருந்தாலும் திறமையை அங்கீகரித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் பட்டு சேலையை நெய்வதற்கு சுமார் 15 நாளுக்கு மேல் ஆனது'' என்றார்.
 - எ.கோபி
 படங்கள்: கு.சபரிராஜன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com