குழந்தைகளின் சுதந்திரம்

ஒரு பூங்காவில் இப்படி அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். "தயவு செய்து புற்களை மிதிக்காதீர்கள்' என்று. யாரும் அதை சட்டை செய்யவில்லை.
குழந்தைகளின் சுதந்திரம்

ஒரு பூங்காவில் இப்படி அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். "தயவு செய்து புற்களை மிதிக்காதீர்கள்' என்று. யாரும் அதை சட்டை செய்யவில்லை. எல்லாருமே புற்களின் மீது நடந்து அதை நாசப்படுத்திவிட்டார்கள். பூங்காவில் மீண்டும் புல்தரை தயார் செய்தார்கள். ஆனால், அறிவிப்பு பலகையை மட்டும் மாற்றிவிட்டார்கள்.
 "தயவு செய்து புற்களை மிதியுங்கள்!' என்று.
 ஆனால் ஒருவர் கூட அதை மதித்து, புற்களை மிதித்து நடக்கவில்லை. மனிதர்கள் சுபாவமே இப்படித்தான். "செய்யாதே!' என்றால் செய்வார்கள். "செய்!' என்றால் செய்யமாட்டார்கள். குழந்தைகள் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? அவர்கள் வழியில் சென்றுதான் அவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டும்.
 குழந்தைகளுக்கு நல்லதைச் சொன்னாலும் நயமாய்ச் சொல்லுங்கள். கடுமையாகச் சொன்னால் குழந்தைகள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் சுபாவத்திலேயே முரண்டு பிடிப்பார்கள். கட்டுப்பட்டிருப்பதைக் குழந்தைகள் எப்போதும் விரும்புவதில்லை.
 குழந்தைகளை அச்சுறுத்திப் பணிய வைக்க முடியாது. "உன் அறையை சுத்தமா வச்சுக்கோ...இல்ல...சாப்பாடு கிடையாது!'' என்று நீங்கள் சொன்னால், அதைக் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் "உன் அறையை இன்னைக்கு சுத்தம் செய்துவிடு! அப்படிச் செய்தால் பத்து ரூபாய் தருவேன்'' என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் அறை "பளிச்' என்றாகிவிடும்.
 சில பெற்றோர் கண்கொத்திப் பாம்பாய் தங்கள் பிள்ளைகளின் நடத்தையைக் கவனிப்பார்கள். அவர்களுடைய சிறிய தவறுகளையும் பூதக்கண்ணாடி வைத்துப் பார்ப்பார்கள்; சிடுசிடுப்பார்கள்; எரிந்து விழுவார்கள். குழந்தை சாப்பாட்டு மேசைக்கு வரும்போது இடித்துக் காட்டுவார்கள். தங்கள் கோபத்தை முடிந்தபோதெல்லாம் காட்டிக் கொண்டே இருப்பார்கள். இதனால் குழந்தை மனஉளைச்சலுக்கு ஆளாகும். தன்மீது தானே கோபம் கொள்ளும். விளைவு? தேர்வில் மதிப்பெண் குறையும், தீய நண்பர்களின் சகவாசத்தில் மகிழும். தீய பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ளும். வீட்டை விட்டு வெளியேறவும், சில நேரங்களில் தற்கொலைக்கு முயல்வதற்கு கூட பெற்றோரின் கோபம் காரணமாகும்.
 "நீறில்லா நெற்றி பாழ்' என்னொரு சொலவடை உண்டு. "அன்பில்லா நெஞ்சம் பாழ்' என்பதும் பொருந்தும். பிள்ளைகளிடம் அன்பாயிருங்கள். அன்பு காட்டக் கற்றுக்கொடுங்கள்.
 உங்கள் குழந்தை தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தால், "உன் ஃபிரண்ட் ரமேஷ் எப்படிப் படிக்கிறான்! நீயும் இருக்கியே...'' என்று மட்டம் தட்டாதீர்கள். அது குழந்தையின் பழகும் திறனைப் பாதித்துவிடும். தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி, தன்னம்பிக்கையைக் குலைக்கும். பிறகு எதற்கெடுத்தாலும் மற்றவரோடு ஒப்பிட்டுப் பார்த்து பெருமூச்சுகளை வெளியேற்றுவரே தவிர, சுயமுன்னேற்றத்துக்கான வழிகளை ஆராயமாட்டார்கள்.
 உங்கள் பிள்ளையின் நண்பன் ரமேஷ் படிப்பில் கெட்டிக்காரனாயிருக்காலம். ஆனால் உங்கள் பிள்ளை விளையாட்டில் சூரன் என்று வைத்துக் கொள்ளுங்கள். சீக்கிரமே ஒரு கிரிக்கெட் வீரனாகி, இந்திய அணியில் இடம் பிடித்தால்...அப்போது நீங்கள் பெருமைப்படமாட்டீர்களா?
 - சரஸ்வதி பஞ்சு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com