சிலம்பம் ஒலிம்பிக் செல்ல வேண்டும்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பத்தை மூன்று வயது முதல் கற்று வருகிறார் ஆர்.சூர்யா.
சிலம்பம் ஒலிம்பிக் செல்ல வேண்டும்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பத்தை மூன்று வயது முதல் கற்று வருகிறார் ஆர்.சூர்யா. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த இவர் சிலம்பத்தில் பல்வேறு இமயங்களைத் தொட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகளுக்கு நடுவராகவும் பணியாற்றி வருகிறார். இவரது குடும்பத்தினரும் சிலம்பம் பயிற்சியில் தேர்ந்தவர்களே. கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வரும் இவர், 300-க்கும் மேற்பட்டோருக்கு இந்தக் கலையை பயிற்றுவித்து வருகிறார். காலையில் 6 மணிக்கு விடியும் இவரது பொழுதுகள் ரயிலில் கல்லூரிக்குப் பயணம், கல்லூரி முடிந்ததும் அதே கல்லூரியில் மாணவிகளுக்கு சிலம்பப் பயிற்சி கற்றுக் கொடுத்தல், மீண்டும் வீடு திரும்பி சிலம்பக்கூடத்தில் இரவு 9 மணி வரை சிலம்பம் கற்றுக் கொடுத்தல், இதற்கு நடுவில் பள்ளிகளில் சிலம்பம் வகுப்புகள் எடுத்தல்...இவை அனைத்தும் போதாதென்று சிலம்பத்தை மூலை முடுக்களில் எல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணி, சிலம்பக் கலை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சிலம்பக் கலையில் அவரது 20 ஆண்டு கால பயணம் குறித்து கேட்க விழைந்து அவரைச் சந்தித்தோம்.
 அவருடனான உரையாடலிலிருந்து:
 "நான் பிறப்பதற்கு முன்பே என் அப்பா ராஜேந்திரன் இறந்துவிட்டார். என்னையும் என் அக்கா சந்தியாவையும் அம்மா சுதாதேவிதான் கூலி வேலைக்குச் சென்று படிக்க வைத்தார். என் தந்தையின் மறைவுக்குப் பிறகு எங்கள் குடும்பத்துக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்து என்னையும் சிலம்பக் கலைக்குள் ஈடுபடுத்தியவர் என் தாய்மாமா வி.அரிதாஸ் தான். அவர் சுப்ரமணிய ஆசான் என்பவரிடம் சிலம்பம் கற்றுகொண்டிருந்தார். அப்போது என்னையும் மூன்று வயதிலேயே அதே ஆசானிடம் பயிற்சிக்காக சேர்த்துவிட்டார். அப்படிதான் சிலம்பம் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்.
 இதனையடுத்து சுப்ரமணிய ஆசான் சிலம்பக்கூடம் என்ற பயிற்சி மையத்தை என் தாய்மாமா நிறுவினார். அவர் தலைமையில் சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறேன். 14 ஆண்டுகளாக சிலம்பம் கற்றுக்கொடுத்து வருகிறேன். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை என அனைவருக்கும் சிலம்பம் பயிற்றுவிக்கிறேன்.
 சென்னை ராணி மேணி கல்லூரியில் எம்.பில் வரலாறு படித்து வருகிறேன். அதில் "தற்காப்பு கலைகள் சிலம்பம்' என்ற தலைப்பில் ஆய்வுப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறேன்.
 கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் இருப்பதைப் போன்று (பிளாக் பெல்ட்) சிலம்பத்தில் படிநிலைகள் கிடையாது. ஒருவர் எத்தனை தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கிறார்களோ அதனைக் கொண்டே அவரது தகுதி தீர்மானிக்கப்படுகிறது. எனவே, பிற தற்காப்புக் கலைகள் போன்று இதற்கும் படிநிலைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். கல்லூரியில் மேற்கொண்டிருக்கும் ஆய்வுப்பணியை நிறைவு செய்து, அதனை ஒரு புத்தகமாக வெளியிட்டால் அதுவும் இந்த முயற்சிக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.
 20 ஆண்டு காலத்தில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். 2002-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் 30 - 34 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். அதே போட்டியில் 34 - 38 கிலோ எடைப்பிரிவில் என் சகோதரி சந்தியா தங்கப்பதக்கம் வென்றார். அதன்பின்பு தேசிய அளவில் 10 போட்டிகளில் பங்கேற்று, பத்துப் போட்டிகளிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளேன். மாநில அளவில் 25 போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.
 சிலம்பக் கலையின் பிற அம்சங்களான கத்தி, வேல்கம்பு, மான்கொம்பு, சுருள்வாள், தீப்பந்தம், புலிவேஷம் உள்ளிட்டவற்றிலும் தேர்ச்சி பெற்றுள்ளேன். அதை பயிற்றுவித்தும் வருகிறேன்.
 5 ஆயிரம் ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த கலையை முன்னெடுத்துச் செல்ல யாரும் முன்வருவதில்லை. ஒரு கலையாக இதனை பார்த்து ரசிப்பதோடு அப்படியே விட்டுவிடுகிறார்கள். இதனால் இந்தக் கலையைப் பயிற்சி செய்து வரும் பல வீரர்களுக்கு முறையான அங்கீகாரம் இல்லை.
 இருப்பினும் சிலம்பக் கலையை வளர்ப்பதற்காக முகாம்கள் நடத்தியும், சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் சிலம்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலம்பம் என்ற வீர விளையாட்டை ஒலிம்பிக் போட்டி வரை கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் இலக்கு!'' என்றார்.
 -ஜெனி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com