ப்ரியா ஆர்மி!

பிரபல மலையாளத் திரைப்படம் "பிரேமம்' படத்தின் நடிகை சாய் பல்லவி, "ஜிமிக்கி கம்மல்' பாடலுக்காக ஆடிய ஷெரில் இருவரும் கேரளம், தமிழகம் முழுவதும் பேசப்பட்டவர்கள்
ப்ரியா ஆர்மி!

பிரபல மலையாளத் திரைப்படம் "பிரேமம்' படத்தின் நடிகை சாய் பல்லவி, "ஜிமிக்கி கம்மல்' பாடலுக்காக ஆடிய ஷெரில் இருவரும் கேரளம், தமிழகம் முழுவதும் பேசப்பட்டவர்கள். இந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.

ஆனால் ஒரு வித்தியாசம். தமிழகம், கேரளத்தைத் தாண்டி ப்ரியா இந்தியா முழுவதும் எல்லா செய்தி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கொண்டாடப்படுகிறார். இத்தனைக்கும் ப்ரியா, இளைய தலைமுறை பிளஸ் டூ மாணவ மாணவிகளாய் நடிக்கும் "ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் நாயகி அல்ல.

சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர்தான் ப்ரியா. ஆனால் அவரது திறமையைப் பார்த்த இயக்குநர் திரைக்கதையை மாற்றி அமைத்து சின்ன பாத்திரத்தை முக்கிய பாத்திரமாக மாற்ற...குறிப்பாக "மாணிக்க மலராய பூவி...' பாட்டில் ப்ரியா புருவங்களை வில்லாக வளைத்து கண்ணடிக்கும் காட்சி இந்திய இளைஞர்களின் இதயங்களை அலேக்காக தூக்கிச் சென்றுவிட்டது.

விளைவு?

எங்கு பார்த்தாலும் ப்ரியாவின் வீடியோ தூள் பரத்துகிறது. மீம்ஸ்களும் ட்ரோல்களும் சமூக வலைதளங்களைக் கலக்குகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் விஜய், அஜீத்...இவர்களை ப்ரியா நடித்திருக்கும் வீடியோவில் சேர்த்துக் காண்பித்து ஓட்டோ ஓட்டு என்று ஓட்டுகிறார்கள். இன்று ப்ரியாவை சமூக வலைதளங்களில் தொடர்பவர்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகம்.

ஒமர் லூலு இயக்கத்தில் மார்ச் 3-இல் வெளியாகவிருக்கும் "ஒரு அடார் லவ்' படத்துக்கு "ஜிமிக்கி கம்மல்' புகழ் ஷான் ரஹ்மான்தான் இசையமைத்துள்ளார். இந்த மாதம் 9-ஆம் தேதிதான், யு-டியூப் தளத்தில் "மாணிக்க மலராய பூவி' என்ற பாடல் பதிவேற்றம் செய்யப்பட்டது. சில நிமிடங்களிலே இந்த வீடியோ வைரலானது. 25 நொடிகள் ஓடும் இந்தப் பாட்டை இதுவரை 60 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். ஆக, ப்ரியா அகில இந்திய டிரெண்டிங்காக மாறியுள்ளார்.
 படு ஹிட்டாக மாறியிருக்கும் இந்தப் பாடல், "ஒரு அடார் லவ்' படத்துக்காக எழுதப்பட்ட பாடல் அல்ல; இந்தப் பாடல் எழுதி வெளியிட்டு 40 ஆண்டுகள் ஆகின்றன. மலபார் பகுதி மாப்பிள்ளை பாட்டு மெட்டில் எழுதியவர் ஜப்பார் என்பவர். இன்று சவுதி அரேபியாவில் மளிகைக் கடையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார் என்பது சோகமான விஷயம். பாட்டு அப்போதும் ஹிட்டானது. ஆனால் பாட்டு எழுதியவருக்கு பயன் இல்லாமல் போய்விட்டது.

இப்போது அந்தப் பாட்டின் ரீ- மிக்சிங், மெகா ஹிட்டாகியுள்ளது.

அந்தப் பாடல் பிரபலமானதற்கு மற்றொரு முக்கியக் காரணம் ப்ரியா பிரகாஷ் வாரியர். "கத்ரினா கைஃப் போன்ற பிரபல நடிகைகள் இத்தனை ஆண்டுகளாகக் காட்டாத குறும்பான, காதல் உணர்வுகளை ப்ரியா முதல் படத்தில் சில நொடி காட்சிகளில் காட்டி அசத்தியிருக்கிறார்' என்று வடநாட்டு நெட்டிசன்கள் ப்ரியாவை புகழ்ந்து தள்ளுகின்றனர். கூடிய விரைவில் பிரியா ஆர்மி அகில இந்திய அளவில் தொடங்கப்படலாம்!

கேரளம் திருச்சூரைச் சேர்ந்த சேர்ந்த ப்ரியா பிரகாஷ் வாரியர் பி.காம் முதலாமாண்டு மாணவி. பிளஸ் டூ படிக்கும்போதே நடிக்க வாய்ப்பு வந்ததாம். தேர்வு காரணம் நடிக்க முடியவில்லையாம். இப்போது கிடைத்த வாய்ப்பில் ப்ரியா பின்னி எடுத்திருக்கிறார்!


 - சுதந்திரன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com