முள்ளங்கி ஸ்பெஷல்!

முள்ளங்கி அல்வா, முள்ளங்கி வடை, முள்ளங்கி புட்டு, ஸ்டஃப்டு முள்ளங்கி பன், முள்ளங்கி சாதம், முள்ளங்கி ஊறுகாய்

முள்ளங்கி அல்வா

தேவையானவை:
துருவிய முள்ளங்கி - 1 கிண்ணம்
வெல்லம் - 1/2 கிண்ணம்
கருப்பட்டி - 1/2 கிண்ணம்
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை
முந்திரி, பாதாம் - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
செய்முறை: வாணலியில் நெய் விட்டு முந்திரி, பாதாமை வறுத்துக் கொள்ளவும். பின்பு அதில் முள்ளங்கியைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு சிறிது சிறிதாக நெய்விட்டு வதக்கவும். வெல்லம், கருப்பட்டியை நன்றாகக் கரைத்து வடிகட்டி, மற்றொரு வாணலியில் பாகு காய்ச்சி முள்ளங்கி கலவையில் சேர்க்கவும். வாணலியில் ஒட்டாத பதம் வந்ததும், ஏலக்காய்த் தூள் தூவி இறக்கவும். சுவையான முள்ளங்கி அல்வா தயார். சர்க்கரை நோய், சிறுநீர் குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

முள்ளங்கி வடை

தேவையானவை:
துருவிய முள்ளங்கி - 1 கிண்ணம்
கடலைப் பருப்பு - 2 கிண்ணம்
வெங்காயம் - 1
வற்றல் மிளகாய் - 3
இஞ்சி - 1 துண்டு
சோம்பு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா - ஒரு கைப்பிடி அளவு
எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: கடலைப் பருப்பை 45 நிமிஷம் ஊற வைக்கவும். துருவிய முள்ளங்கியில் நீரை வடிகட்டவும். ஊறிய பருப்புடன், இஞ்சி, சோம்பு, வற்றல் மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அதனுடன் புதினா, கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். இவற்றுடன் துருவிய முள்ளங்கி, உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வடையாகத் தட்டி போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். இந்த வடையுடன் முருங்கைக் கீரை, வெந்தயக்கீரை சேர்த்தும் செய்யலாம். 

முள்ளங்கி புட்டு

தேவையானவை:
துருவிய முள்ளங்கி - 1 கிண்ணம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
கடலைப் பருப்பு - 1/2 கிண்ணம்
சோம்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயம் சேர்க்கவும். பின்பு அதில் முள்ளங்கி சேர்த்து நன்கு வதக்கவும். 5 நிமிஷம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின்பு 1/2 மணி நேரம் ஊற வைத்த பருப்பு, இஞ்சி, சோம்பு, மிளகாய், மிளகாய் வற்றல் ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து முள்ளங்கியுடன் சேர்த்து, உப்பு போட்டு நன்கு கிளறி, உதிரியாக வந்ததும் இறக்கவும்.

ஸ்டஃப்டு முள்ளங்கி பன்

தேவையானவை:
துருவிய முள்ளங்கி - 1 கிண்ணம்
பன் - 2
வெங்காயம் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா - சிறிதளவு
எள் - சிறிதளவு
வெண்ணெய் - 2 தேக்கண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பின்பு துருவிய முள்ளங்கி, மிளகாய்த் தூள், சாட் மசாலா சேர்த்து, கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கி இறக்கவும். பின்பு தோசைக்கல்லில் வெண்ணய் தடவி, பன்னை இரண்டாக வெட்டி வைத்து, நடுவில் இந்தக் கலவையை வைத்து மூடி, எள் தூவி திருப்பிப் போட்டு எடுக்கவும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

முள்ளங்கி சாதம்

தேவையானவை:
உதிரி சாதம் - 1 கிண்ணம்
துருவிய முள்ளங்கி - 1 கிண்ணம்
பச்சைப் பட்டாணி - 1/2 கிண்ணம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் - தலா 2
கொத்தமல்லி - 1 கைப்பிடி அளவு
புதினா - 1 கைப்பிடி அளவு
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
முந்திரி - சிறிதளவு
மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
வெண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் வெண்ணெய் போட்டு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் தாளித்து, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதக்கியதும் துருவிய முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, கொத்தமல்லி, புதினா, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, 3 முதல் 5 நிமிஷம் மூடி வேக வைக்கவும். பின்பு இந்தக் கலவையுடன் சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும். வறுத்த முந்திரி சேர்த்து அலங்கரிக்கவும்.

முள்ளங்கி ஊறுகாய்

தேவையானவை:
துருவிய முள்ளங்கி - 1 கிண்ணம்
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
கெட்டியாகக் கரைத்த புளித்தண்ணீர் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கல் உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - சிறிதளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத் தூள் தாளித்து, அதனுடன் முள்ளங்கியைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதனுடன் மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும். அதனுடன் புளித்தண்ணீர் சேர்க்கவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்துவிட்டு, வறுத்து அரைத்து வைத்துள்ள கடுகு, வெந்தயத்தைச் சேர்க்கவும். முள்ளங்கி ஊறுகாய் தயார்.

இந்த வாரம் சமையல் குறிப்புகளை வழங்குபவர் பத்மபிரியா குமரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com