சுவாரசிய சவால்கள்!

இந்தியாவின் வடக்கு, வடகிழக்கு பகுதிகளில் பிரபலமாக உள்ள அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பன்மொழி கிராமியப் பாடகி கல்பனா பட்டோவரி.
சுவாரசிய சவால்கள்!

இந்தியாவின் வடக்கு, வடகிழக்கு பகுதிகளில் பிரபலமாக உள்ள அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பன்மொழி கிராமியப் பாடகி கல்பனா பட்டோவரி. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு இந்திய மொழிகளில் உள்ள கிராமியப் பாடல்களை ஆய்வு செய்வதோடு, புரிந்து கொள்ள முடியாத பாரம்பரிய மிக்க பாடல்களை இசை வடிவம் கொடுத்து மக்களிடம் அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இவரது முயற்சியை பல்வேறு இசைக் கலைஞர்களும் பாராட்டி வரும் வேளையில் "பேகம் ஜான்', "ரா...ராஜ்குமார்' போன்ற பாலிவுட் படங்களில் பாட கிடைத்த வாய்ப்பு இவரது புகழை மேலும் உயர்த்தியுள்ளது. இவரது ஆர்வத்துக்கு காரணம்
என்னவென்று தெரிந்து கொள்ளும் நோக்கில் அவரைச் சந்தித்தோம்:
கிராமியப் பாடல்களை ஆய்வு செய்து இசையுடன் அவைகளை அறிமுகப்படுத்த வேண்டுமென்ற ஆசை எப்படித் தோன்றியது?
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த எனக்கு இங்கு புரிந்து கொள்ள இயலாத நிலையில் உள்ள கிராமியப் பாடல்களை உயிர்ப்பிக்க வேண்டுமென்றே எண்ணம் தோன்றியது. வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காணும் இந்த நாட்டில் வித்தியாசமான கலாசாரங்களைக் கொண்ட பல்வேறு மக்களும், மாநில இசைக் கலைஞர்களும் தற்போது என்னுடைய முயற்சியைப் பாராட்டுவது பெருமையாக உள்ளது.
இதற்கு தூண்டுதலாக இருந்தது யார்?
என்னுடைய தந்தை பிபின் பட்டோவரி அஸ்ஸாமில் பிரபலமான கிராமியப் பாடகர். இங்கு கிராமிய இசையில் பிரபலமான கம்ருபியா மற்றும் கோல்போரியா ஆகிய இரு எளிய தத்துவங்களை என்னுடைய தந்தை எனக்கு நான்கு வயதிலேயே கற்பதற்கான பயிற்சியளித்தார். ஒரு குறிப்பிட்ட மொழியில்தான் பாடவேண்டுமென்ற வரம்பு ஏதும் எனக்கில்லை. வங்காளம், போஜ்புரி, மராத்தி, ராஜஸ்தானி, தமிழ் போன்ற மொழிகளில் உள்ள கிராமியப் பாடல்களைக் கற்று பாடத் தொடங்கினேன். பல்வேறு மொழிகள், பண்புகளை அறிந்து கொண்டதன் மூலம் ஒரு புதிய உலகத்தை என்னால் காண முடிந்தது. கடந்த ஆண்டுகளில் நான் இசையை மட்டும் கற்கவில்லை. அந்தந்த மாநிலத்தின் கலாசாரத்தையும் பண்பையும் கிரகித்துக் கொண்டேன்.
இந்திய மொழிகளில் அழிந்து வரும் சில மொழிகளையும் உயிர்ப்பித்து அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். இதுகுறித்து சொல்லுங்களேன்?
அஸ்ஸாம் மாநிலத்தில் பல வட்டார மொழிகள் அழியத் தொடங்கியுள்ளன. இது பிற மாநிலங்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதானமாகப் பேசப்படும் மொழி தவிர வட்டார மொழிகளும் பழக்கத்தில் இருக்கும். அதே போன்று கிராமியப் பாடல்களும் இருக்கும். அவைகளுக்கு இசையின் மூலம் உயிரூட்டத் தொடங்கியுள்ளேன். இன்றைய தினத்தில் ஏறக்குறைய முப்பது இந்திய வட்டார மொழிகளில் ஆய்வு செய்து வருகிறேன். இது வருங்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
யார் உங்கள் முன்னோடி?
பூபென் ஹஸாரிகா மற்றும் பிக்காரி தாக்கூர். இவர்களுடைய பாடல்கள் எப்போதுமே இந்தச் சமூகத்தில் நடக்கும் தவறுகளைப் பிரதிபலிப்பதாகவே இருப்பதோடு கேட்பவர்கள் மனதையும் ஊடுருவிச் செல்லும்.
உங்கள் பயணத்தில் இதுவரை சவால்களைச் சந்தித்துண்டா?
கடந்த ஆண்டுகளில் பல்வேறு சவால்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளேன். ஆனால் இவை என்னுடைய பயணத்தை சுவாரசியமாக்கியதோடு மறக்க முடியாத அனுபவங்களையும் கொடுத்துள்ளது. பிற மொழிகளில் பாடும்போது தவறின்றி உச்சரிப்பதுதான் பெரிய சவாலாகும். அதற்காக அந்தந்தப் பகுதி மக்களை மீண்டும் மீண்டும் சந்தித்து சரியான உச்சரிப்பைக் கேட்டுத் தெரிந்து கொள்வதன் மூலம் அந்த மொழியின் பெருமையையும் உணர முடிகிறது. இதன் மூலம் சுலபமாக
கிரகிக்கவும் முடிகிறது.
-அ.குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com