ஸ்வீடனுக்காக களமிறங்கும் தமிழக மங்கை!

2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இறகுப் பந்து போட்டியில் ஐரோப்பிய நாடான ஸ்வீடன் நாட்டுக்காக விளையாடுவதற்கு தயாராகி வருகிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த அஸ்வதி பிள்ளை(17). 
ஸ்வீடனுக்காக களமிறங்கும் தமிழக மங்கை!

2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் இறகுப் பந்து போட்டியில் ஐரோப்பிய நாடான ஸ்வீடன் நாட்டுக்காக விளையாடுவதற்கு தயாராகி வருகிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த அஸ்வதி பிள்ளை(17). 
விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்திருந்த தகவல் கிடைத்தையடுத்து, தனது தந்தை வினோத் பிள்ளையுடன் அங்குள்ள ஓர் இறகுப் பந்து கிளப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அஸ்வதி பிள்ளையை, பயிற்சியின் இடைவெளியில் சந்தித்தோம். 
ஸ்வீடன் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பைப் பெற்று எப்படி என்ற கேள்வியோடு அவருடன் நடத்திய உரையாடலிலிருந்து...
உங்கள் குடும்பம் குறித்து?
எங்களது சொந்த ஊர் குமரி மாவட்டம் தக்கலை அருகேயுள்ள இரணியல் கோணம். எனது தந்தை வினோத் பிள்ளை. தாய் காயத்ரி. சகோதரர் தீபக் (13). 
இறகுப் பந்தில் ஆர்வம் எப்படி வந்தது ?
எனது தந்தை எலக்ட்ரிக்கல் என்ஜினியர் மட்டுமல்ல, இறகுப் பந்து விளையாட்டில் ஆர்வமும் கொண்டவர். எனது தந்தைக்கு பெங்களூருவில் ஐடி துறையில் வேலை கிடைத்த நிலையில் அங்கு வசித்து வந்தோம். அங்குள்ள இறகுப் பந்து கிளப்பிற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எனது தந்தை விளையாடச் செல்லும் போது என்னையும் அழைத்துச் செல்வார். என்னையும் விளையாடுமாறு உற்சாமூட்டுவார் இதையடுத்து எனக்கும் இறகுப் பந்து விளையாட்டில் ஆர்வம் தொற்றிக் கொண்டது. 
ஸ்வீடன் நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு எப்படி கிடைத்தது ?
பெங்களூரில் வசித்து வந்தபோது எனது தந்தைக்கு ஐரோப்பிய நாடான ஸ்வீடன் நாட்டில் ஐடி துறையில் வேலை கிடைத்து. 2009-ஆம் ஆண்டு ஸ்வீடன் நாட்டுக்குச் சென்றோம். ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கோல்ம் நகரில் வசித்து வருகிறோம். அங்குள்ள டேபி இறகுப் பந்து கிளப்பிற்கு விளையாடச் செல்வோம். அங்கு எனது தந்தையுடன் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அந்நாட்டு இறகுப் பந்து தலைமை பயிற்சியாளர்களில் ஒருவர் என்னைப் பார்த்து விட்டு எனது தந்தையிடம் ஸ்வீடன் நாட்டுக்காக விளையாட, என்னை தயார்படுத்த சம்மதமா எனக் கேட்டார். அந்நாட்டுக்காக விளையாட வேண்டுமென்றால் ஸ்வீடன் நாட்டின் குடியுரிமை பெற வேண்டியது அவசியம். 
இதற்கு எனது தந்தை இணங்கியதையடுத்து அந்நாட்டில் வெளிநாட்டினர் குடியுரிமைக்கான நிபந்தனைகளை தளர்த்தி, 4 ஆண்டுகளில் அதாவது 2013-ஆம் ஆண்டு எங்கள் குடும்பத்திற்கு அந்நாட்டிற்கான குடியுரிமை வழங்கப்பட்டது. இதற்கிடையே தொடர் பயிற்சியில் ஈடுபட்டு முன்னணி வீராங்கனையாக மாறினேன். தற்போது எனக்கு இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த வில்லியாண்டோ என்பவர் பயிற்சியாளராக உள்ளார். ஸ்வீடனில் நேஷனல் சாம்பியன்ஷிப் அன்டர் 13, 15 மற்றும் 17 ஆகிய விளையாட்டு பிரிவுகளில் மகளிர் ஒற்றையர் ஆட்டங்களில் விளையாடி தங்கப் பதக்கங்கள் பெற்றுள்ளேன். ஸ்வீடனுக்கு வெளியே டென்மார்க், இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, ஸ்விட்சர்லாந்து, பல்கேரியா, போலந்து, பெல்ஜியம், செக்கோஸ்லோவேகியா, ஜெர்மனி, இத்தாலி, இந்தோனிஷியா, நார்வே, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் விளையாடியுள்ளேன். இதில் பல ஆட்டங்களில் வெற்றியும் பெற்றுள்ளேன். ஒற்றையர் ஆட்டங்களிலேயே அதிகமாக விளையாடி வருகிறேன். 
இறகுப் பந்தில் உங்கள் ரோல் மாடல் யார் ?
இந்தியாவில் எனது ரோல் மாடலாக ஸ்ரீகாந்த் உள்ளார். உலக அளவில் எனது ரோல் மாடல் தாய்லாந்து வீரர் ரிச்நோக். 
தற்போது ஸ்வீடனிலிருந்து எத்தனை பேர் 2020 ஒலிம்பிக் போட்டிக்கு தயார் செய்யப்படுகிறார்கள் ?
ஸ்வீடனிலிருந்து தற்போது 3 பெண் வீராங்கனைகள் உள்பட 6 பேர் தயார் செய்யப்படுகிறார்கள். அதில் ஒற்றையர் ஆட்ட வீராங்கனையாக நான் முன்னணியில் உள்ளேன். இதனால் 2020 ஒலிம்பிக்கில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன். 
தற்போது ரேங்கிங்கில் எந்த இடத்தில் உள்ளீர்கள்?
தற்போது உலக அளவில் சீனியர் பிரிவில் 236-ஆவது இடத்தில் உள்ளேன். ஒன்றரை ஆண்டுகளுக்குள்ளாக 100-ஆவது இடத்தில் வந்து விடுவேன். 
- ஜே. லாசர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com