பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க முடியாது!  - பி.வி.சிந்து

கிரிக்கெட் மோகத்திலிருந்த இந்தியாவை பேட்மிண்டன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் "வெள்ளி மங்கை' பி.வி.சிந்து.
பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க முடியாது!  - பி.வி.சிந்து

கிரிக்கெட் மோகத்திலிருந்த இந்தியாவை பேட்மிண்டன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் "வெள்ளி மங்கை' பி.வி.சிந்து. 2016 ரியோ ஒலிம்பிக்கில் அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை பேட்மிண்டன் பக்கம் திருப்பியுள்ளது என்கிறார்கள் விளையாட்டு வல்லுநர்கள்.
2016-ஆம் ஆண்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் பெருமைப்படுத்திய சிந்துவுக்கு, வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான "அர்ஜூனா' விருதும் வழங்கப்பட்டது. 
அர்ஜூனா விருதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் சிந்துவின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அந்தச் சந்திப்பில், ஒரு விசிட்டிங் கார்ட்டை எடுத்து பத்திரிகையாளர்களிடம் காட்டி ஒரு கதை சொன்னார் சிந்துவின் அம்மா பி.வி.விஜயா. 
அந்தக் கதை இப்படியாக இருந்தது....
சிந்துவுக்கு அப்போது ஒன்பது வயது. சிந்துவின் அப்பா கைப்பந்து வீரர் பி.வி.ரமணாவுக்கு அர்ஜூனா விருதை இந்திய அரசு வழங்கி சில நாள்களே ஆகியிருந்தன. 
அர்ஜுனா விருது பெற்றதும், அதையும் சேர்த்து, பி.வி.ரமணா - ARJUNA AWARD WINNER என ஒரு விசிட்டிங் கார்ட் அடித்து வைத்திருந்தார் அவர். ஒருநாள், அவருடைய விசிட்டிங் கார்ட்டை எடுத்த சிறுமி சிந்து, அதில் பி.வி.ரமணா என்ற பேரை மட்டும் அழித்துவிட்டு, பி.வி.சிந்து - ARJUNA AWARD WINNER என எழுதினாராம். 
இந்தக் கதையை பத்திரிகையாளர்களிடம் கூறி, "என் மகள் அதை அறிந்து செய்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவள் அர்ஜூனா விருது பெறும் நாளில் இந்த விசிட்டிங் கார்ட்டை பத்திரிகையாளர்களுக்கு காட்டுவதற்காக வைத்திருந்தேன்'' என்றார். 
"அந்தச் சம்பவத்தை அறிந்து செய்தீர்களா இல்லை அறியாது செய்தீர்களா'' என்ற கேள்வியுடனே பேட்டியை ஆரம்பித்தேன். 
அறிந்து செய்தீர்களா?
அறிந்தே செய்தேன்...அப்பாவுக்கு விருது கிடைத்தபோது அவர் ஏதோ சாதித்துள்ளார் என்பது புரிந்தது. அதனால், சாதனையின் கனம் புரியவில்லை. நண்பர்கள், உறவினர்களின் பாராட்டு மழையில் அப்பா நனைந்தார். ஆனால் அதே சாதனையை நானும் நிகழ்த்த வேண்டும் என நினைத்தேன். "உன்னால் முடியும்' என்றார் அப்பா. சிந்தனைதானே எல்லாவற்றுக்கும் அடிப்படை? " நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்' என்ற விவேகானந்தரின் வாக்கை அப்பா அடிக்கடி சொல்வார். 
இந்தியாவெங்கும் வாழும் சிறு பெண்கள் உங்களை ரோல் மாடலாகப் பார்க்கிறார்களே?
ரியோ ஒலிம்பிக்கில் கிடைத்த வெற்றி எனக்கு மட்டும் கிடைத்த வெற்றி இல்லை; ஒட்டுமொத்த தேசத்தின் பெண்களுக்கும் கிடைத்த வெற்றி. "எங்கோ ஒரு மூலையில் இருந்து வந்த சிந்துவால் சாதிக்க முடியும் என்றால் ஏன் என்னால் முடியாது' என இந்திய பெருந்தேசத்தின் கடைக்கோடிப் பெண்ணையும் சிந்திக்க வைத்த வெற்றி அது. 
இப்போதெல்லாம், பெண் குழந்தைகளை அதிகாலையில் பெற்றோரே பேட்மிண்டன் பயிற்சிக்கு அழைத்துச் செல்வதைப் பார்க்கிறேன். "சிறுமிகளை வீட்டில் இருந்து பேட்மிண்டன் கோர்ட்டுக்கு கொண்டு வந்ததில் உன் பங்கும் இருக்கிறது' என்பார்கள். அப்போதெல்லாம் பெருமையாக இருக்கும். 
கிரிக்கெட்டை தவிர்த்து, ஏனைய விளையாட்டுக்கள் மீது எப்படி கவனம் செலுத்த வைப்பது?
கிரிக்கெட் காய்ச்சலில் இருந்த தேசம் இப்போதுதான் ஏனைய விளையாட்டுகள் மீது கவனம் செலுத்துகிறது. கிரிக்கெட் மோகத்தால் கடுமையாக ஆள்கொள்ளப்பட்ட இந்தியா போன்ற தேசத்தில், பிற விளையாட்டுகளில் நிகழ்த்தப்படும் சாதனைகளே அந்த விளையாட்டுகள் மீது மக்களை காதல் கொள்ள வைக்கும். சாக்ஷி மாலிக்கின் ஒலிம்பிக் பதக்கம் மல்யுத்தத்தின் பக்கம் மக்களை ஈர்க்கவில்லையா? அதுபோலத்தான். 
பலருக்கு ரோல் மாடலாக உள்ள உங்களின் ரோல் மாடல் யார்? 
என் குருநாதர் புல்லேலா கோபிசந்த் தான் என் ரோல் மாடல். பேட்மிண்டன் மீது எனக்கு பெருங்காதல் வர அவர்தான் காரணம். குருவே, ரோல் மாடலாக அமைந்ததால், வெளியில் ஒரு ரோல் மாடலைத் தேட வேண்டிய தேவை வரவில்லை. இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான பிரமாண்டமான ஆளுமைகள் உள்ளனர். நம் நாட்டில் ரோல் மாடல்களுக்கு பஞ்சமில்லை. 
அப்பா, அம்மா கைப்பந்து வீரர்கள். அக்கா கூடைப்பந்து வீராங்கனை. நீங்கள் மட்டும் பேட்மிண்டன் வீராங்கனை...
நான் பேட்மிண்டனைத் தேர்ந்தெடுக்க சொந்த உந்துதலே காரணம். சிறு பெண்ணாக வீட்டுக்கருகில் உள்ள சிறுமிகளுடன் பேட்மிண்டன் விளையாடுவதைப் பார்த்த அப்பா, பயிற்றுநர் ஒருவரிடம் சேர்த்து விட்டார். 
பிறகு தனது இன்னொரு நண்பரான கோபிசந்திடம் சேர்த்து விட்டார். கோபிசந்தின் பயிற்சி நிலையம் வீட்டில் இருந்து 27 கி.மீ தொலைவில் இருந்தது. தினம்தோறும் காலையும் மாலையும் பயணிக்க வேண்டும். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. நாளடைவில் அந்தக் கஷ்டங்கள் பழகிவிட்டன. 
உங்களுடைய சாதனைகளை எப்படித் திட்டமிடுகிறீர்கள்?
நீண்டகாலத் திட்டங்கள் என்று எனக்கு எதுவுமே இருந்ததில்லை. அடுத்த போட்டியில் ஜெயிப்பது மட்டுமே எனது இலக்கு. சின்னச் சின்ன இலக்குகளாக வாழ்க்கையைப் பிரித்ததுதான் என்னுடைய வெற்றிக்கு பிரதான காரணம் என நினைக்கிறேன். 
சிந்து ரியோ ஒலிம்பிக்குக்கு முன் - பின்?
விளையாட்டு உலகத்துக்கு மட்டும் தெரிந்த என்னை முழு இந்தியாவுக்கும் ரியோ ஒலிம்பிக் தான் கூட்டிச் சென்றது. இறுதிப் போட்டியன்று கோடிக்கணக்கான மக்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். எல்லோராலும் நேசிக்கப்படுவது பெரிய கொடுப்பினை. அதை ரியோ ஒலிம்பிக் எனக்கு தந்தது. ஒலிம்பிக்குக்கு பிறகு பொறுப்புகள், எதிர்பார்புகள் என எல்லாமே அதிகரித்தன. எல்லா போட்டியிலும் நான் ஜெயிக்க வேண்டும் என சாதாரண மக்கள் விரும்ப ஆரம்பித்தார்கள். இதனால் மக்களை ஏமாற்றக் கூடாது என்ற பெரிய பொறுப்பு வந்துள்ளது. 
சென்னைப் பொண்ணாகிவிட்டீர்களே?
சென்னை சிமாஸர்ஸ் அணிக்காக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். சென்னை என்னை அன்புடன் வரவேற்று அரவணைத்தது. பல வெளிநாட்டு வீரர்களை அங்கே சந்தித்தேன். அருமையான நகரம். 
வெளிநாட்டு சக போட்டியாளர்களுடன் போட்டியிடுவது குறித்து...
நம்முடைய உணவுப் பழக்கவழக்கங்களை விட மேலை நாட்டவர்களின் உணவுப் பழக்கங்கள் விளையாட்டுக்கு உகந்தவை. ஆனால், விளையாட்டில் வெற்றி பெற மன வலிமைதான் மிக மிக முக்கியம். அது நம்மவர்களிடம் நிறையவே உள்ளது. போட்டி நடக்கும் நேரத்தில் யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள்தான் வெற்று பெறுவார்கள். 
பேட்மிண்டனுக்கு அடுத்தபடியாக பிடித்த விளையாட்டு?
டென்னிஸ். பிடித்த வீரர் ரபேல் நடால்
அண்மையில் வெளியிடப்பட்ட உங்களது அதிகாரப்பூர்வ செயலி குறித்து...
அனைத்து ரசிகர்களையும் ஒரே குடைக்குள் ஒருங்கிணைக்கும் முயற்சியாக அந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தச் செயலி மூலம் ரசிகர்கள் நேரடியாக என்னுடன் உரையாடலாம். 
எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்களே? இந்தச் சிரிப்புக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளதே?
இதைப் பாராட்டாக எடுத்துக் கொள்கிறேன். "உன் விளையாட்டை விட உன் சிரிப்புக்குத்தான் ரசிகர்கள் அதிகம்' என அப்பா கிண்டலடிப்பார். 
உங்கள் வாழ்க்கை திரைப்படமாகிறதே?
ஆம். பிரபல நடிகர் சோனு சூட் தயாரிக்கிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. என் வாழ்க்கையில் அறியப்படாத பக்கங்களை இந்தத் திரைப்படம் சொல்லும். 
பெண்களின் முன்னேற்றத்துக்காக ஏதாவது செய்யும் திட்டம் உள்ளதா?
பெண்களை விளையாட்டின் பக்கம் திருப்ப வேண்டும். அதிக பெண்கள் விளையாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வேன். பெண்களை வீட்டுக்குள் இனியும் பூட்டி வைக்க முடியாது. அவர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். அதைத் தடுக்கக் கூடாது. 
- அருளினியன்
படம்: ரி.ராமகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com