பெண்ணியவாதியாக பார்வதி மேனன்!

தமிழ்த் திரையுலகில் "பூ' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பார்வதி மேனன், பூகம்பமாக மாறியிருக்கிறார். கேரளத்தின் இன்றைய ஒட்டுமொத்த பரபரப்பும் அவர்தான். பத்திரிகைகளில்
பெண்ணியவாதியாக பார்வதி மேனன்!

தமிழ்த் திரையுலகில் "பூ' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பார்வதி மேனன், பூகம்பமாக மாறியிருக்கிறார். கேரளத்தின் இன்றைய ஒட்டுமொத்த பரபரப்பும் அவர்தான். பத்திரிகைகளில்...தொலைக்காட்சி சானல்களில்...எங்கும் எதிலும் பார்வதி மேனன்.
கேரளத்தில் பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். இந்தச் சம்பவத்துக்கு பிறகு பல நடிகைகள் தாங்களும் இதே போன்று பலவித பாலியல் பிரச்னைகளைச் சந்தித்துள்ளதாக வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கினர். 
முதலில் தொடங்கியவர் தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளில் நடிக்கும் பார்வதி மேனன். தமிழில் தனுஷுடன் "மரியான்' படத்தில் நடித்திருக்கிறார். "பெங்களூர் டேய்ஸ்' மலையாளப் படம் பார்வதியை கேரளத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் உச்சத்தில் நிறுத்தியது. கேரளத்தின் முன்னணி நடிகையும் பார்வதிதான். மலையாள படவுலகில் இன்றைய ஒகி புயலும் பார்வதிதான். 
"மலையாள பட உலகில் பட வாய்ப்புகள் தருவதாகக் கூறி பலர் தொந்தரவு செய்ததாக'' குற்றம் சாட்டி அதிர்ச்சி தந்தார் பார்வதி. 
"சீனியர் நடிகர்கள், இயக்குநர்கள் பலர் என்னிடம் நேரடியாகவே கேட்பார்கள். "சினிமா என்றால் அப்படித்தான் இருக்கும்'என கூறி அழைப்பார்கள். அந்த வாய்ப்புகளை நான் நிராகரித்துள்ளேன். இப்படித்தான் பட வாய்ப்பு பெற வேண்டும் என்றால் அது எனக்கு வேண்டாம்'' என்றாராம். திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் போக்குக்கு எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் பார்வதி ஒரு பெண்ணியவாதியாக அவதாரம் எடுத்துள்ளார்.
அண்மையில் கேரளத்தில் நடைபெற்ற திரைப்பட விழாவில், "கசபா' படத்தில் பெண்ணை இழிவுசெய்யும் காட்சியில் அருவருப்பான வசனங்கள் பேசி நடித்ததை, முன்னணி நடிகரான மம்மூட்டி தவிர்த்திருக்கலாம்'' என்று கருத்து தெரிவித்துள்ளார் பார்வதி.
"அறிவுரை சொல்லும் அளவுக்கு பெரிய ஆளா இந்தப் பார்வதி'' என்று மம்முட்டியின் ரசிகர்கள் பார்வதி மேனனை சமூக வலைதளங்களில் கலாய்க்கத் தொடங்கினர். அது இறுதியில் விரசமான விமர்சனங்களாக மாறின. 
உடனே, பார்வதி மேனன் கேரள காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், வடக்கஞ்சேரியைச் சேர்ந்த பிரிண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பார்வதியை விமர்சிப்போர் கைது செய்யப்படுவர்கள் என்றும் கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. 
பார்வதி ஒரு நடிகை என்பதையும் தாண்டி தானும் ஒரு பெண் என்ற அடிப்படையிலேயே தனது கருத்துகளைச் சொல்லியிருந்தார். அந்தக் கருத்துகளுக்கு கேரளப் பெண்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு வெற்றி படம் மூலம் வரும் பாராட்டுகளை விட பல மடங்கு பாராட்டுக்கள் பார்வதியை வந்தடைந்துள்ளன. 
- கண்ணம்மா பாரதி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com