பொங்கல் சிறப்பு உணவுகள்

வரகரிசி பருப்புப் பொங்கல், பொங்கல் சாம்பார், திணை அரிசி சர்க்கரைப் பொங்கல், மொச்சைக்காய் கறி 

வரகரிசி பருப்புப் பொங்கல்

தேவையானவை:
வரகரிசி - 500 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
முந்திரி - 50 கிராம்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வரகரிசி, துவரம் பருப்பு, பாசிப்பு பருப்பு ஆகியவற்றை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும். அடுப்பில் நெய்விட்டு மிளகு, சீரகம் முந்திரியை வறுக்கவும், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாயையும் நெய்யில் வதக்கவும். வதக்கிய அனைத்தையும் பொங்கலுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறி, 5 நிமிடம் கொதிக்கவிடவும். மீதம் உள்ள நெய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

பொங்கல் சாம்பார்

தேவையானவை:
பாசிப்பருப்பு - 2 கையளவு
பீன்ஸ்- 10 
கேர்ட் - 1
காளிப்ளவர் - சில பூக்கள்
பச்சை மிளகாய்- 2
மிளகாய்த் தூள்- 1/4 தேக்கரண்டி
தனியாத் தூள்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
வெங்காயம் - 1 
தக்காளி - 2
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: பாசிபருப்பை வேக வைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், பீன்ஸ்,கேரட், காளிப்ளவர் பூக்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் உப்பு சேர்த்து, தண்ணிர் ஊற்றி வேக வைக்கவும். காய்கள் வெந்ததும் பாசிப்பருப்பை அதனுடன் கலந்து, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

திணை அரிசி சர்க்கரைப் பொங்கல்

தேவையானவை:
திணை அரிசி - 500 கிராம்
பாசிப்பருப்பு - 100 கிராம்
வெல்லம் - 750 கிராம்
ஏலக்காய்த் தூள் - 2 தேக்கரண்டி
திராட்சை, முந்திரி - 50 கிராம்
நெய் - 200 மில்லி
செய்முறை: திணை அரிசி மற்றும் பாசிப்பருப்பை கழுவி சுத்தம் செய்து, குழைய வேக விடவும். வெல்லத்தில் அரைக் கிண்ணம் தண்ணீர் விட்டு, பாகு காய்ச்சி, மண் இருந்தால் வடிகட்டவும். காய்ச்சிய பாகை வேகவைத்த பொங்கலில் ஊற்றவும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கிளறி, அடுப்பில் 5 நிமிடம் கொதிக்க விட்டு மீதம் உள்ள நெய்யையும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

மொச்சைக்காய் கறி

தேவையானவை:
உரிக்காத முழு பச்சை மொச்சை - 1 கிலோ
மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 1/2 தேக்கரண்டி
சோம்பு - 2 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
நறுக்கிய வெங்காயம் - 1 கிண்ணம்
எண்ணெய் - 50 மில்லி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: மொச்சைக் காயை உரித்து, உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, தேங்காய்த் துருவல், சோம்பு, வெங்காயம், மிளகாய்த் தூள் அனைத்தையும் போட்டு, அதனுடன் வேக வைத்த மொச்சையுடன் சேர்த்து தேன் பதம் வரும் வரை வதக்கி இறக்கவும். இது சர்க்கரைப் பொங்கலுக்கு சரியான சைட் டிஷ்!

கற்கண்டு பொங்கல்

தேவையானவை: 
கற்கண்டு - 250 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
பச்சரிசி - 500 கிராம்
நெய் - 300 மில்லி
பால் - 1 கிண்ணம்
ஏலக்காய்த் தூள் - 1 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை - சிறிதளவு
செய்முறை: பச்சரிசியை பால், தண்ணீர் சேர்த்து குழைய வேக விடவும். சர்க்கரையையும் கற்கண்டையும் அரைக் கிண்ணம் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். பின்னர் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து பொங்கலுடன் சேர்த்து கற்கண்டு பாகு ஏலக்காய்த் தூள், நெய் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

கதம்ப காய்கறி கூட்டு

தேவையானவை:
கேரட், பீன்ஸ், அவரைக்காய், சேப்பக்கிழங்கு, பூசணிக்காய், பரங்கிக்காய் - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
துவரம் பருப்பு - 100 கிராம்
புளி - எலுமிச்சம்பழம் அளவு
கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை: அனைத்து காய்கறிகளையும் சற்று நீள நீளமாக நறுக்கி பருப்புடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழையாமல் வேக வைக்கவும். பின் புளியைக் கரைத்துவிட்டு, சாம்பார் பொடியைச் சேர்க்கவும். தேங்காய்த் துருவலை வெறும் கடாயில் வறுத்து, மிக்ஸியில் பொடித்து காய்கறி கலவையுடன் சேர்க்கவும். நல்லெண்ணெயைக் காயவிட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கூட்டுடன் கலந்து, ஒரு கொதிவிட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

இந்த வாரம் சமையல் குறிப்புகளை வழங்குவர் ராஜேஸ்வரி ரவிக்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com