யோகாவில் ஒரு கின்னஸ் சாதனை!

கடந்த டிசம்பர் மாதம் கடைசி வாரம், சென்னை அண்ணாநகரில் உள்ள டி.கே. கல்யாண மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது
யோகாவில் ஒரு கின்னஸ் சாதனை!

கடந்த டிசம்பர் மாதம் கடைசி வாரம், சென்னை அண்ணாநகரில் உள்ள டி.கே. கல்யாண மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அங்கு தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சிக்கோ, விற்பனை கண்காட்சிக்கோ அந்தக் கூட்டம் திரண்டு வரவில்லை. யோகா பயிற்றுநரான கவிதா பரணிதரன்(37), 170 மணி நேரம் தொடர்ந்து யோகா பயிற்சி மேற்கொண்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாதனை அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. இதற்கு முன்னர், மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த பிரண்டியா பாட்டீல் என்பவர் 103 மணி நேர தொடர் பயிற்சி செய்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. 
"என் மகள் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் பயோடெக்கில் எம்.எஸ். முடித்தவர். ஆனால், சிறு வயதில் இருந்தே அவருக்கு யோகாவில் ஆர்வம் அதிகம். கடந்த 18 ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அதனால், சென்னை திரும்பியதும் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகமும், ஆசனா ஆண்டியப்பன், அவரது சீடர் வி.கே.ராமன் ஆகியோரும் இணைந்து நடத்திய படிப்பில் சேர்ந்து, 2015-இல் "யோகா கலைமாமணி' பட்டம் பெற்றார். அவருக்கு நாங்களும், கணவர் பரணிதரனும் உறுதுணையாக இருந்து வருகிறோம்'' என்கிறார் கவிதா பரணிதரனின் தந்தை மோகன்.
கவிதாவின் மகன் ரித்திக்குக்கு மூன்றரை வயது. குழந்தை பிறப்பதற்காக யோகா பயிற்சியை மேற்கொண்டதன் விளைவாக, சிசேரியனை தவிர்த்து சுகப்பிரசவம் மூலமாக குழந்தை பெற்றார் கவிதா. அதை மற்ற பெண்களுக்கும் கற்றுத் தர விரும்பிய கவிதா, நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளை அணுகினார். தற்போது அந்த மருத்துவமனைகளில் யோகா பயிற்சியளித்து வருகிறார். இதன் காரணமாக, அந்த மருத்துவமனைகளில் நடைபெற்ற 80 சதவீதமாக இருந்த சிசேரியன் பிரசவங்கள், தற்போது 20 சதவீதமாகக் குறைந்துள்ளன.
"கவிதாவின் யோகா ஆர்வத்தை இத்துடன் நிறுத்தவில்லை. ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்ற தாகம் அவருக்கு இருந்தது. நாங்களும் உற்சாகப்படுத்தினோம். அதன் விளைவாக, டிசம்பர் 23-ஆம் தேதி காலை 7 மணிக்கு யோகா சாதனை முயற்சியைத் தொடங்கினார். 27-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்துவிட்டார்'' என்று உற்சாகத்துடன் கூறுகிறார் மோகன். தொடர்ந்து பல்வேறு யோகாசனங்கள் இடம்பெற்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யோகா நிலைகளை செய்து காட்டிய கவிதா பரணிதரன், 8-ஆவது நாளில் 170 மணி நேர சாதனையைப் படைத்தார். அவருக்கு கின்னஸ் புத்தக அதிகாரிகள் சான்றிதழ் அளித்து கெüரவித்தனர். முந்தைய சாதனையை முறியடித்து, சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதே ஒரு சாதனை தானே?.
சந்திர.பிரவீண்குமார்
படங்கள்: ராதாகிருஷ்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com