எனக்கு பணம் முக்கியமல்ல!

எதையும் வெளிப்படையாக விமர்சிப்பது, தனக்கென்று கடைப்பிடித்து வரும் கொள்கைகளை விட்டுக் கொடுக்காதது போன்ற காரணங்களால் குறைவான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து
எனக்கு பணம் முக்கியமல்ல!

எதையும் வெளிப்படையாக விமர்சிப்பது, தனக்கென்று கடைப்பிடித்து வரும் கொள்கைகளை விட்டுக் கொடுக்காதது போன்ற காரணங்களால் குறைவான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நந்திதா தாஸ், கலை சினிமா மற்றும் அழகு குறித்த தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்:
"பாலிவுட்டைப் பொருத்தவரை திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் பணம் சீக்கிரமாகவே கிடைத்துவிடும். அதிலும் விளம்பரப் படங்களில் நடிக்கும்போது அதிகமாகவே பணம் கிடைக்கும். சமூகத்துடன் எனக்குள்ள அக்கறை, தொடர்பு காரணமாக விளம்பரப் படங்களில் நடிக்க நான் ஒப்புக் கொள்வதில்லை. ஒரு விளம்பரப் படத்தில் நடிப்பதன் மூலம் இரண்டு படங்களில் நடிக்கும் ஊதியத்தைப் பெற முடியும். ஆனால் இப்படி சுலபமாக சம்பாதிக்கும் பணம், நல்ல பணமல்ல என்பது என் அபிப்ராயம்.
உங்களுடைய தேவை போதுமானதாக இருக்கும்போது அதிக பணத்தை எதிர்பார்ப்பது சரியல்ல. ஆடம்பரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தால் அதிக பணத்தைச் சம்பாதிக்கத் தோன்றும். பின்னர் அதுவே வழக்கமாகிவிடும் என்பதால் இந்த ஆசைக்கு இடம் கொடுக்க நான் விரும்பவில்லை. ஒருவேளை எனக்கு வயதாகி வருவதால் இப்படித் தத்துவம் பேசுவதாக நினைக்க வேண்டாம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள முடியாவிட்டாலும், நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ்ந்தால் போதும். வயதாகும்போது தலைமுடி நரைப்பது வழக்கமானதுதான். நரைமுடியுடன் இருக்க எனக்கு விருப்பம் என்றாலும், கருப்புச் சாயம் பூசுவதைத் தவிர்க்க முடியவில்லை. இது வாழ்க்கைக்கு முக்கியமல்ல என்றாலும் சமூக தோற்றத்துக்காக செய்ய வேண்டியுள்ளது.
சமூக வலைதளங்கள் நம்முடைய வாழ்க்கையை மிகவும் பாதித்துள்ளன. உங்களை நீங்களே எடுத்துக் கொள்ளும் செல்ஃபியை வலைதளங்களில் பதியவிட்டு பிறர் விருப்பத்தைக் கேட்பது தவறு. நீங்கள் அழகாக இருப்பதாகக் கருதினால் மற்றவர்கள் விமர்சனத்தைக் கேட்க வேண்டிய அவசியம் என்ன? உங்களை நீங்களே நம்பவில்லை என்றுதானே அர்த்தம்?
சினிமா துறையைப் பொருத்தவரை அழகுக்கு எப்போதுமே முக்கியத்துவம் தருவதுண்டு. நான் மேக்அப் போட்டுக் கொள்வதை ஆரம்பத்திலிருந்தே விரும்பியதில்லை. என் இயற்கை அழகுடன் நடிக்கவே விரும்பினேன். "இந்தத் தோற்றத்துடன் நீங்கள் எப்படி நடிக்க வந்தீர்கள்?'' என்று பலர் கேட்பதுண்டு. நான் சினிமாவுக்கு வந்ததே எதிர்பாராததுதான். அதற்கு பின்னரே நடிப்பு என்பது சுவாரசியமானதாக மாறியது. என் மீது பரிதாபப்படும் சிலர், "ஷபானா ஆஷ்மி, ஸ்மிதா பாட்டீல் போன்று கமர்சியல் படங்களிலும் நடித்து பணம் சம்பாதிப்பதில் உங்களுக்கென்ன பிரச்னை? புகழ் இருக்கும்போதே பணம் சம்பாதிக்கலாமே'' என்று கேட்பதுண்டு. நடிப்பு என்பது வெறும் பாடலையோ, நடனத்தையோ அடிப்படையாகக் கொண்டதல்ல. எப்போதும் என்னை முன்னிலைப் படுத்துவதையே விரும்புகிறேன். எப்போதும் செய்தியாளர்களைச் சந்திப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். என்னைப் பொருத்தவரை நான் மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்.
கடந்த காலங்களில் நான் நடித்த "ஃபயர்', "பைராக்' போன்று புரட்சிகரமான கருத்துகளைக் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி, வரவேற்பைப் பெற்றன. இப்போது அதுபோன்ற படங்கள் தயாரிப்பதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் மீது தாக்குதல்கள் நடைபெறுகின்றன. திரைப்படங்களுக்காக மக்களைக் கொல்லவும் தயாராக இருக்கின்றனர். எதற்காக இந்தக் கோபம் என்று தெரியவில்லை. மக்கள் படத்தை பார்ப்பதற்கு முன்பே பிரச்னைகள் கிளம்புகின்றன. இதற்கு அரசியல் கட்சிகளும் பின்புலமாக செயல்படுகின்றன. இத்தகைய போக்கு மாற வேண்டும்'' என்றார் நந்திதாதாஸ்.
"சங்கல்ப் குளோபல் சம்மீட்' கருத்தரங்கில் பேசியது
- பூர்ணிமா
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com