"டூடுல்' துறையில் ஜொலிக்கும் மங்கை!

நவீன வசதியுடன் கூடிய செல்லிடப்பேசிகளின் வருகையால் புகைப்படம் எடுப்பது என்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது.
"டூடுல்' துறையில் ஜொலிக்கும் மங்கை!

நவீன வசதியுடன் கூடிய செல்லிடப்பேசிகளின் வருகையால் புகைப்படம் எடுப்பது என்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. முகநூல், சுட்டுரை, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் புகைப்படங்களின் கூடாரமாகிவிட்டது. அதிக மெகாபிக்ஸல் வசதியுடன் சில ஆயிரம் விலையில் செல்லிடப்பேசிகள் கிடைத்தாலும், மிக அதிக ரசனையுடன் டிஎஸ்எல்ஆர் கேமராக்களில் புகைப்படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.
 புகைப்படத் துறையில், இயற்கை காட்சி, வைல்ட் லைஃப், ஸ்டீர்ட், ஃபுட் ஃபோட்டோகிராபி என பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதில், அதிகம் கவனம் பெறாமல் இருப்பது டூடுல் ஃபோட்டோகிராபி.
 டூடுல் ஃபோட்டோகிராபி என்பது நாம் சாதாரணமாக எடுக்கும் புகைப்படங்களில் சில வரைகலை மென்பொருள்களைப் பயன்படுத்தி அதில் ஓவியத்தை புகுத்துவது என்று கூறலாம். இதைச் செய்வதற்கு அதிக பொறுமை தேவை. நேரமும் எடுத்துக்கொள்ளும். ஓவியம் வரைவதில் நிபுணத்துவம் பெற்றிருந்தால் டூடுல் ஆர்ட் மிக எளிதில் வசப்படும்.
 தற்போது, டூடுல் ஆர்ட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி இந்தக் கலையைப் பிரபலப்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த இளம்பெண் பானுப்பிரியா. அவர் பதிவேற்றும் புகைப்படங்களுக்கு அதிக வரவேற்பும் கிடைத்து வருகிறது.
 அவரிடம் கலந்துரையாடியதிலிருந்து...
 "பிறந்தது திண்டுக்கல். எனது பள்ளி, கல்லூரி அனைத்தும் கோவையில்தான். காட்சித் தொடர்பியல் (விஷுவல் கம்யூனிகேஷன்) படித்துவிட்டு வரைகலை நிபுணராக பணிபுரிந்து வருகிறேன். காட்சித் தொடர்பியலில் புகைப்படக் கலையும் ஒரு பாடமாக வரும். அப்போது புகைப்படம் எடுக்க கற்றுக்கொண்டேன். கல்லூரி இறுதி ஆண்டு ப்ராஜக்டிலும் புகைப்படத் துறையையே தேர்வு செய்தேன்.
 படித்து முடித்துவிட்டு சென்னையில் 2 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு கோவை திரும்பினேன். இங்கு வரைகலைப் பணியைத் தொடர்கிறேன். கோவையில் பணிபுரிந்து வரும் நிறுவனத்தில் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஓரிடத்தில் அமர்ந்து வேலை பார்த்து சலித்துவிட்டதால், அவ்வப்போது வெளியூர் பயணமாகி புகைப்படங்களை எடுத்து வருகிறேன். வரைகலை பணியையும் தொடர்ந்து வருகிறேன்.
 கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது புகைப்படத்தில் டூடுல் ஆர்ட்டை சேர்த்து முகநூலில் வெளியிட்டேன். அதற்கு பரவலான வரவேற்பு கிடைத்தது. இருப்பினும், அதில் நான் அதிக கவனம் செலுத்தவில்லை.
 சென்னையில் புகைப்படக் குழு ஒன்று ஒவ்வோர் ஆண்டும் புகைப்படக் கண்காட்சியை நடத்துவார்கள். இந்த முறை அந்தக் கண்காட்சியில் ஏதாவது வித்தியாசமாக முயற்சி செய்யலாம் என்று தோன்றியது.
 அதற்காகவே அதிகம் அறியப்படாத டூடுல் போட்டோகிராபியைத் தேர்வு செய்து தினமும் ஒரு புகைப்படம் என்ற கணக்கில் 30 தினங்களுக்கு டூடுல் புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்து வருகிறேன்.
 ஓவியம் வரையத் தெரிந்திருந்தால் டூடுல் ஆர்ட் எளிமையாக இருக்கும். வரையத் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. ஒரு புகைப்படத்தை எடுத்துவிட்டு கொஞ்சம் யோசித்தாலே போதும். ஆனால், வரைகலை மென்பொருள்கள் குறித்து அடிப்படை அறிவு இருப்பது அவசியம்.
 சிலர் செல்லிடப்பேசி செயலிகளைப் பயன்படுத்தி புகைப்படங்களில் டூடுல் ஆர்ட்டை சேர்ப்பார்கள். ஆனால், அதில் நாம் நினைத்ததை கொண்டுவர முடியாது. எனக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடித்தமான ஒன்று என்பதால் டூடுல் ஆர்ட்டில் நான் நினைத்ததைக் கொண்டுவர முடிகிறது. முகநூலில் நான் பதிவேற்றிய டூடுல் புகைப்படங்களைப் பார்த்து சில வாய்ப்புகள் கிடைத்தன. இதன்மூலம் நிச்சயமாக வருமானம் ஈட்ட முடியும். ஆனால், தற்போது அதைப் பயன்படுத்தி எனக்கு வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லை'' என்கிறார் பானுப்பிரியா.
 - க.தி.மணிகண்டன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com