பெண்ணாக இருப்பதால் எழுத முடியாததும் உண்டு - கவிஞர் அனார்

'ஆத்மாநாம்' விருதைப்பெற சென்ற மாதம் சென்னை வந்திருந்தார் அனார். சிசுக்கொலை குறித்த இவரது "பிளேடு' சிறுகதை, வாசிப்பவரைத் திடுக்கிட வைக்கும்; பரிதவிக்க வைக்கும்.
பெண்ணாக இருப்பதால் எழுத முடியாததும் உண்டு - கவிஞர் அனார்

'ஆத்மாநாம்' விருதைப்பெற சென்ற மாதம் சென்னை வந்திருந்தார் அனார். சிசுக்கொலை குறித்த இவரது "பிளேடு' சிறுகதை, வாசிப்பவரைத் திடுக்கிட வைக்கும்; பரிதவிக்க வைக்கும். சிறந்த சிறுகதையாளராக மாற வேண்டிய அனாரை கவிதை உலகம் கவர்ந்து கொண்டுவிட்டது.
 கவிதையுலகில் கால்தடம் பதித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார் அனார்:
 "அந்தப் பருவமே ஒரு விளையாட்டாக இருந்தது. ஒரு முதிர்ந்த பெண் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிப்பாடி எனது ஒரு காதிலும்... முதிர்ந்த ஆலிம் ஒருவர் குர்ஆனை ஓதி ஓதி இன்னொரு காதிலும் சொல்லித் தந்தார்கள். அந்தக் காலகட்டத்தில், எங்கள் கிராமங்களை அச்சம் பீடிக்கத் தொடங்கியது. இரவில் பயம்... பகலில் பதற்றம்... பீதி... ஊரே திடீரென தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது. நாட்கள் நிரந்தரமின்மை ஆயின. ஆம்! இலங்கையின் உள்நாட்டுப் போர் ஆழமான வடுக்களை வழங்கியது.
 அந்த நாட்களில் என்னை இறுகப் பிடித்திருந்த கனமான தனிமையை உதறுவதற்காக கொய்யா மரத்திடம் முறையிட்டேன். ஊஞ்சல் ஆடும்பொழுது தொட்டுத் தடவிச் சென்ற காற்றுடன் ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டேன். எந்த ஓர் இலக்கியப் பரிச்சயமும் அப்போது எனக்கிருக்கவில்லை. உணர்வுகள் வார்த்தைகளாய் முட்டி மோதி வெளியே வந்தபோது அதில் கவிதையின் படிமம் இருப்பதை உணர்ந்தேன். அந்த முதல் கவிதையை இலங்கை வானொலிக்கு அனுப்பி வைக்க அது ஒலிபரப்பானது. வானொலியில் அந்தக் கவிதையை ஒரு பெண் வாசித்தார். வீட்டில் இருந்த கட்டுப்பாடு காரணமாக, வேறு யார் காதுகளில் விழுந்து வைக்கும் முன்பு விழுந்தடித்து ஓடிப்போய் வானொலியின் சத்தத்தைக் குறைத்து, ஸ்பீக்கரில் கன்னம் புதைத்து, என் கவிதை வாசிப்பைக் கேட்டு முடித்தேன்.
 அடுத்தடுத்து கவிதைகளை வீட்டில் யாருமறியாமல் எனது தம்பிக்கு லஞ்சம் கொடுத்து தபாலில் அனுப்பிக் கொண்டிருந்தேன். சில தருணங்களில் தபால்தலை வாங்க பணமிருக்காது. ஏற்கெனவே வந்த கடித உறைகளில் அஞ்சல் அலுவலக முத்திரை விழாமல் தப்பிக்கும் தபால்தலைகளை கிழியாமல் பிரித்து மீண்டும் ஒட்டி அனுப்பி விடுவேன். கவிதைகளை வீட்டில் யாருக்கும் தெரியாமல் பத்திரிகைகளுக்கும் வானொலிக்கும் அனுப்பி வைக்கும் அனுபவங்கள் அன்றைக்கு சாகசமாகவே அமைந்தன. போதுமான சிறகுகள் முளைத்த பறவை எப்படிப் பறக்காமல் இருக்கும்... என்னைப் பொருத்தவரை மொழி ஒரு சிறகு... கவிதை ஒரு வகைச் சுதந்திரம்... இப்படித்தான் நானும் கவிதை வானில் பறக்கத் தொடங்கினேன்.
 இலங்கைச் சமூகம் பலவிதமான இம்சைகளுக்குள் சிக்கியிருந்த கொந்தளிப்பான காலத்தில் நான் கவிதை எழுதத் தொடங்கி இருந்தேன். சொல்வதற்கு அதிகமிருந்தன. ஆனால் சொல்ல முடியாத இறுக்கம் நிலவியது. அந்த பயங்கரமான உண்மையின் வெம்மை தாள முடியாது நான் சொற்களில் அபயம் தேடினேன். தமிழ் சொற்கள் என்னைக் காப்பாற்றின.
 ஒரு பெண் எழுதுவது அல்லது சிந்தனைத் தளத்தில் செயல்படத் தொடங்குவது, தார்மீகக் குரலை எழுப்புவது எல்லாம் இந்தச் சமூகத்தில் எப்போதுமே இலகுவாக இருந்ததில்லை. எல்லா வகையான கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்ட நிலையில் பலத்த முன்யோசனைகளோடும் கத்தி மேல் நடக்கும் கவனத்தோடும் சொற்களைக் கோர்த்தேன்.
 எழுதுவதால் ஒழுக்க ரீதியாக தாக்கப்படும் அவலம் ஆண்களுக்கு இல்லை. நான் பெண்ணாக இருப்பதன் காரணமாகவே சில கவிதைகளை எழுத முடிந்துள்ளது. இன்னும் சில கவிதைகளை எழுதவே முடியாமல் போயுள்ளது. ஒரு பெண் கவிதையைத் தேர்வு செய்வது தனது அரசியலையும் தேர்வு செய்வது போலாகும். இந்தச் சூழ்நிலையில்தான் "சுலைஹா' கவிதையை எழுதினேன். "பிளேடு' கதையையும் எழுதினேன். கண்டனம், விமர்சனம் என்ற வன்முறையான கூச்சல்களுக்கு மத்தியில் தான், பெண் தன் குரலை வலிமையாக உயர்த்த வேண்டியிருக்கிறது. சுயமும் தன்னம்பிக்கையுமுள்ள பெண்கள் போலித்தனமான அவலச் சத்தங்களை, கணக்கிலெடுப்பதில்லை'' என்கிறார் அனார்.
 - பிஸ்மி பரிணாமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com