விவசாயிகளான வெளிநாட்டு பெண்கள்!

பாரம்பரிய விவசாயத்தை விட்டுவிட்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் கணினி முன்பு அமர விரும்பும் பல இளைஞர்கள் நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், வெளிநாட்டிலிருந்து
விவசாயிகளான வெளிநாட்டு பெண்கள்!

பாரம்பரிய விவசாயத்தை விட்டுவிட்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் கணினி முன்பு அமர விரும்பும் பல இளைஞர்கள் நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், வெளிநாட்டிலிருந்து வேளாண் பணிகளைச் செய்வதற்கு இரு இளம்பெண்கள் தமிழகம் வந்துள்ளனர்.
 திருவள்ளூர் மாவட்டம் கசுவா கிராமத்தில் உள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்தில் இருவரும் தங்கி விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இயற்கை விவசாயம், கோசாலையில் பசுக்களைக் கவனித்தல், பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தல் போன்ற பல்வேறு பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கும் அவர்களின் பணிகளைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
 இவர்களில் ஒருவர் செவிலியராக விரும்பும் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்த க்ளோவி எலிசபெத். மற்றொருவர் வரைகலைப் பட்டப்படிப்பில் சேரவிருக்கும் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹன்னா ராஸ். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கல்லூரிக்குள் நுழையும் முன்பு கிடைந்த ஓராண்டு விடுமுறையை, பயனுள்ளதாகக் கழிக்கும் நோக்கத்துடன் வந்துள்ளனர்.
 தமிழக பெண்களைப் போன்றே புடவை அணிந்து, வேளாண் பண்ணையில் களை எடுத்தல், காய்கறிகள் பயிரிடுதல், வயல்வெளிகளில் உழவுப்பணி ஆகிய பணிகளைச் செய்கின்றனர். பண்ணையரிவாள் கொண்டு கால்நடைகளுக்கான புல் தீவனங்களை அறுத்துக் கட்டுக்கட்டி தலையில் சும்மாடு அணிந்து சுமந்து வந்து, கோசாலையில் உள்ள பசுக்களுக்கு அளிக்கின்றனர்.
 மேலும், சேவாலயா சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கும் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கின்றனர். பாடம் நடத்தும்போது கேள்விகள் கேட்டு பதிலளிக்கும் மாணவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி உற்சாகப்படுத்துகின்றனர்.
 இந்த அனுபவங்கள் குறித்து க்ளோவி மற்றும் ஹன்னா கூறுகையில், ""இங்குள்ள விவசாய முறைகள் வித்தியாசமாக உள்ளது. எங்கள் நாடுகளில் கோதுமை, கேரட், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர் போன்றவற்றை பயிரிடுவர். ஆனால் இங்கு ஒரே பயிரை மீண்டும் மீண்டும் விளைவிக்காமல், மாற்றுப்பயிராக வேறு பொருள்களையும் விளைவிக்கின்றனர். களையெடுத்தல், மாடுகள் கட்டி உழவு செய்தல், காய்கறிகள் பறிப்பது, மாடுகளுக்கு புல் வெட்டுதல் போன்ற பணிகளில் இங்குள்ள பெண்களுடன் சேர்ந்து ஈடுபடுவது அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது.
 மாணவர்களுக்கு ஆங்கிலம் பயிற்றுவிப்பதன் மூலம் வித்தியாசமான அனுபவம் கிடைக்கிறது. இங்கு பள்ளிகளில் உள்ள கரும்பலகை, சாக்பீஸ் துண்டுகள் ஆகியவை எங்களுக்கு புதுமையாக உள்ளன. தமிழ் மொழியையும் கற்று வருகிறோம். நாடு திரும்புவதற்குள் தமிழை முழுமையாகக் கற்க வேண்டும்.
 எங்கள் பாரம்பரிய உடைகளைத் தவிர்த்து புடவை அணியக் கற்றுக்கொண்டோம். கை, கால்,கழுத்து, காதுகளில் ஆபரணங்களை அணிவதால் அழகாக தோற்றம் அளிப்பதாக உணர்கிறோம்.
 இந்தக் கிராமத்தில் கிடைக்கும் அனுபவங்கள் எங்கள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்'' என்கின்றனர்.
 - பாண்டியன்
 படங்கள்:கே.வெங்கடேஷ்வர்லு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com