இளமை மாறாத குரல்!

வாணி ஜெயராமுக்கு தற்போது வயது 72. 1971-ஆம் ஆண்டு வசந்த் தேசாய் இசையமைப்பில் குல்சார் எழுதிய "போலோ ரே பப்பிஹரா' பாடல் மூலம் ஹிந்தி திரையுலகில் பிரபலமானார்.
இளமை மாறாத குரல்!

வாணி ஜெயராமுக்கு தற்போது வயது 72. 1971-ஆம் ஆண்டு வசந்த் தேசாய் இசையமைப்பில் குல்சார் எழுதிய "போலோ ரே பப்பிஹரா' பாடல் மூலம் ஹிந்தி திரையுலகில் பிரபலமானார். அந்த நேரத்தில் புதியவர்களுக்கு பாட வாய்ப்பளிக்கத் தயங்கிக் கொண்டிருந்த ஹிந்தி திரையுலகில் ஒரு தென்னிந்திய பெண், ஒரே பாடலின் மூலம் 5 விருதுகளைப் பெற்றது சாதனையாகக் கருதப்பட்டது. 47 ஆண்டுகளுக்கு முன் பாடிய அதே சுதியில் இன்றும் பாட முடியும் என்று கூறும் வாணி ஜெயராமுக்கு, இந்த ஆண்டு சிறந்த பின்னணிப் பாடகிக்காக விருதை வட அமெரிக்க திரைப்பட கூட்டமைப்பு வழங்கியுள்ளது. மேலும் சென்னை மலையாளிகள் கூட்டமைப்பு முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு "சங்கரிஷ்டா புலஸ்கார்' விருது வழங்கி கெüரவித்துள்ளது.
 வாணி ஜெயராமின் இயற்பெயர் கலைவாணி. உடன் பிறந்தோர் 9 பேர். மூன்று வயதிலேயே கேட்கும் பாடல்கள் என்னென்ன ராகங்கள் என்பதைக் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு திறமையை வளர்த்தவர். இவரது தாயார் பத்மாவதி. வாணியின் சகோதரிக்கு இசைப் பயிற்சியளிக்க வந்த கடலூர் சீனிவாச அய்யங்கார், எதையும் உடனுக்குடன் கிரகிக்கும் வாணியின் திறமையைப் பார்த்து அவரது ஐந்தாவது வயதில் தீட்சிதர் கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுத்தார். தனது எட்டாவது வயதில் வானொலியில் பாடும் வாய்ப்பைப் பெற்ற வாணி, டி.ஆர்.பாலசுப்ரமணியம் மற்றும் ஆர்.எஸ்.மணி ஆகியோரிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தில் பயிற்சி பெற்றார்.
 அன்றைய காலகட்டத்தில் இலங்கை வானொலியில் புதன்கிழமை தோறும் ஒலிபரப்பான "பினாகா கீத்மாலா' இசை நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். வாணியும் ஆவலோடு அந்த நிகழ்ச்சியைக் கேட்பதோடு, அதில் ஒலிபரப்பாகும் பாடல்களை அப்படியே பாடுவதுண்டு. என்றாவது ஒருநாள் தானும் பின்னணிப் பாடகியாக வேண்டுமென்ற நம்பிக்கை அவருக்கிருந்தாலும், அவரது பெற்றோரின் ஆதரவு கிடைக்கவில்லை.
 "ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா'வில் வேலை கிடைத்து பணிக்குச் சென்று கொண்டிருந்த நேரத்தில், வாணிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. பெற்றோர் விருப்பப்படி ஜெயராமைத் திருமணம் செய்துகொண்ட வாணி, கணவருடன் மும்பையில் குடியேறினார். வாணியின் இசை ஆர்வத்தை அறிந்த ஜெயராம், இசைக் கலைஞர் உஸ்தாத் அப்துல் ரகுமான்கானிடம் பயிற்சி பெற அனுமதித்தார். தன் கணவரின் ஒத்துழைப்புடன் பல இசை நிகழ்ச்சிகளில் வாணி பங்கேற்கத் தொடங்கினார்.
 வாணியின் இனிமையான குரலைக் கேட்ட பிரபல இசையமைப்பாளர் வசந்த் தேசாய், மராத்தி பாடல்களைப் பாட வாய்ப்பளித்தார். 1971-ஆம் ஆண்டு ரிஷிகேஷ் முகர்ஜி "குட்டி' என்ற படத்தை இயக்கியபோது, வசந்த் தேசாய் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்படத்தில் வாணிக்கு பின்னணி பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் பாடிய "போலோ ரே பப்பி ஹரா' மிகவும் பிரபலமாக, ஹிந்தி திரையுலகில் தொடர்ந்து ஒ.பி.நய்யார், நவுஷத், மதன் மோகன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி போன்ற பிரபல இசையமைப்பாளர்களிடமிருந்து வாய்ப்புகள் கிடைத்தன.
 குல்சார் இயக்கிய "மீரா' படத்துக்கு பண்டிட் ரவிசங்கர் இசையமைத்தபோது, படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தையும் பாட வாணிக்கு வாய்ப்பளித்தார். கர்நாடக சங்கீதத்துடன் ஹிந்துஸ்தானி சங்கீதம், கஜல், பஜன் போன்றவற்றையும் பாட பயிற்சி பெற்றிருந்ததால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் பாடும் திறமை வாணிக்கு இருந்தது. ஜெயதேவாவின் "கீத கோவிந்தா' நிகழ்ச்சிக்காக ஒடிசி பாணியில் பிரபுல்லா காருடன் இணைந்து பாடியுள்ளார்.
 1976-ஆம் ஆண்டு "அபூர்வ ராகங்கள்' படத்தில் இவர் பாடிய "ஏழு ஸ்வரங்களுக்குள்' என்ற பாடலுக்காக தேசிய விருது பெற்றார். தொடர்ந்து 1980, 1982-ஆம் ஆண்டுகளில் "சங்கராபரணம்', "சுவாதி கிரணம்' படங்களில் பாடிய பாடல்களுக்காக அடுத்தடுத்து தேசிய விருது பெற்றார்.
 "47 ஆண்டுகளாக தொடர்ந்து பாடி வரும் என்னுடைய குரல் இன்றும் இளமையாக இருப்பது கடவுள் தந்த வரம்'' என்று கூறும் வாணி ஜெயராம், பாடிய "ஹம் கோ மான் கி சக்தி தேனா' என்ற பள்ளிக்கூட வழிபாட்டுப் பாடலை இன்றும் பல மாணவர்கள் பாடி வருவது சிறப்புக்குரியது.
 - பூர்ணிமா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com