ராணுவக் கல்லூரியின் முதல் பெண் முதல்வர்!

புனேவிலுள்ள ராணுவ மருத்துவக் கல்லூரி 1948-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சுமார் 70 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்தக் கல்லூரியின் முதல்வராக முதன்முதலாக பெண் ஒருவர்
ராணுவக் கல்லூரியின் முதல் பெண் முதல்வர்!

புனேவிலுள்ள ராணுவ மருத்துவக் கல்லூரி 1948-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சுமார் 70 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்தக் கல்லூரியின் முதல்வராக முதன்முதலாக பெண் ஒருவர் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், மாதுரி கனித்கர், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். தனது பெயரைக் காட்டிலும் அதிக நீளமான மருத்துவப் பட்டங்களைப் பெற்றவர். எம்.பி.பி.எஸ்., எம்டி (குழந்தைகள் நலம்), டிஎன்பி (குழந்தைகள் நலம்), குழந்தைகள் சிறுநீரகவியல் துறையில் ஃபெலோஷிப், மருத்துவக் கல்வியில் சர்வதேச ஃபெலோஷிப் என இவர் பெற்ற பட்டங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.
 ராணுவத்திலும் தனது முத்திரையைப் பதித்தவர் இவர். ராணுவத்தில் அமைதிப் பணிகளுக்கான விஷிஸ்ட் சேவா பதக்கம் பெற்றவர், இன்று ராணுவ மருத்துவக் கல்லூரிக்கே முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆணாதிக்கம் நிறைந்த துறைகளில் ராணுவமும் ஒன்று, அந்தத் துறையில் கோலோச்சி வரும் மேஜர் ஜெனரல் மாதுரி கனித்கர், பல பெண்களுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளார்.
 புனேவிலுள்ள ஒரு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாதுரி, அப்போதே மருத்துவம் படிக்க வேண்டுமென்று திட்டமிட்டார். தேசிய ராணுவ அகாதெமியில் பயிற்சி பெறும் பலர் இவருக்கு நண்பர்களாக இருந்தனர். ராணுவப் பயிற்சியில் இருப்போர் பிறரைக் காட்டிலும் தனித்தன்மையுடனும், ஸ்மார்ட்டாகவும் இருப்பதையும் கவனித்தார். மேலும் அவரது அறையில் தங்கியிருந்த தோழிக்கு விமானப்படை பின்புலம் இருந்தது. எனவே, அந்தத் தோழி புனேயிலுள்ள ராணுவ மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார். அப்போதுதான் ராணுவ மருத்துவக் கல்லூரியைப் பற்றி கேள்விப்பட்டார் மாதுரி. தன் தோழியுடன் அந்தக் கல்லூரிக்கு சென்றபோது, ராணுவத்துக்கே உரிய தூய்மை, ஒழுங்கு ஆகியவை அங்கு இருப்பதைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார். தானும் அதே கல்லூரியில் சேர வேண்டும் என்று முடிவெடுத்தார்.
 ராணுவக் கல்லூரியில் சேர நினைத்த மாதுரி, சந்தர்ப்ப சூழ்நிலையால் புனேவிலுள்ள வேறு ஒரு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அவர் மனது முழுவதும் ராணுவக் கல்லூரியிலேயே இருந்தது. ராணுவக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்று வீட்டில் அடம்பிடித்தார்.
 "என் அப்பா ஒரு நிபந்தனையுடன் ராணுவக் கல்லூரியில் படிக்க அனுமதி அளித்தார். அதாவது படித்து முடித்த பின்னர் நான் ராணுவத்திலேயே பணியாற்ற வேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை. சந்தோஷமாக ராணுவ கல்லூரிக்குச் சென்றேன். அங்குதான் என் வருங்கால கணவரையும் கண்டறிந்தேன் (மாதுரியின் கணவர் லெப்டினட் ஜெனரல் ராஜீவ் கனித்கர். இவர்களுக்கு நிகில் என்ற மகனும், விபூதி என்ற மகளும் உள்ளனர்).
 ஒரு நல்ல மருத்துவராக வேண்டும் என்று எண்ணத்துடனேயே சிரத்தையுடன் படித்து வந்தேன். படித்து முடித்த பின்பு லக்னௌவில் ராணுவ பயிற்சிக்கு வந்தேன். அங்கு அதிகாலை முதல் தீவிரப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். 5 கி.மீ. ஓட்டம், கயிறு ஏறுதல், அகழிக்குள் குதிப்பது முதல் துப்பாக்கிச் சுடும் பயிற்சி, ராணுவ அணிவகுப்பு என அனைத்திலும் உற்சாகமாகப் பங்கேற்றேன்.
 ஆனால் ராணுவத்தில் அதிக அளவில் பெண்கள் உயர் பதவிகளை அலங்கரிப்பதில்லை. என்னுடன் 20 பெண்கள் தேர்ச்சி பெற்று, இன்டர்ன்ஷிப்புக்குச் சென்றோம். அதனைத் தொடர்ந்து சிலர் திருமணத்தின் காரணமாக ராணுவத்தைக் கைவிட்டனர், சிலர் ஐந்தாறு ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பணியைத் துறந்தனர். ஒரு சிலரே தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றி வந்தோம். அவர்களில் நான் மட்டுமே இன்று வரை ராணுவத்தில் தொடர்கிறேன்.
 என்னுடைய பல தோழிகள் இந்தத் துறையைக் கைவிடுவதற்கு பெண்கள் நலன் தொடர்பான கொள்கைகள் ராணுவத்தில் இல்லாததே என்று கருதுகிறேன். கணவர் ஓரிடத்தில், மனைவி மற்றோரிடத்தில், இரவுப் பணிகள், இதற்கிடையில் குழந்தைகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். இவை அனைத்தையும் சமநிலைப்படுத்துவது சற்று சிரமமான காரியம்தான்.
 பயிற்சி நிறைவடைந்ததும் முதன்முதலாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நியமனம் செய்யப்பட்டேன். அங்கு மருத்துவமனை கிடையாது. ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் உண்டு அதில்தான் செல்ல வேண்டும். தாற்காலிக கூரை அமைக்கப்பட்ட முகாம் ஒன்று மருத்துவமனையாகச் செயல்பட்டது. அங்குதான் தங்கியிருந்தேன். நான் பெண் என்றதும், என்னுடைய உயர் அதிகாரிகள் அந்தப் பகுதியில் உள்ள பிரதான தலைமை அலுவலகத்தில் தங்குமாறு அறிவுறுத்தினர்.
 அதை மறுத்துவிட்டேன். நான் என் சக வீரர்களுடனேயே தங்கியிருக்க விரும்புகிறேன். நாளைக்கே போர் தொடங்கினால், இவர்களுடன் நான் செல்ல வேண்டாமா? என்று கேட்டேன். ஒரு பெண் அதிகாரியை அந்த இடத்தில் பொருத்திப் பார்க்க என்னுடன் பணியாற்றியவர்களுக்கும் சிரமமாகத்தான் இருந்தது. நாள்கள் செல்லச் செல்ல என்னை ஒரு பெண் என்று பார்ப்பதை விடுத்து, அதிகாரியாகப் பார்க்கத் தொடங்கினர்.
 அதனைத் தொடர்ந்து, அஸ்ஸôம், குவாஹாட்டி, அருணாசலப் பிரதேசம் முதல் தென்னிந்தியா, வடஇந்தியா என பல்வேறு இடங்களில் பணியாற்றினேன். நானும் கணவரும் வேறு வேறு இடங்களில் பணியமர்த்தப்பட்டதால், விடுமுறை நாள்களில்தான் சந்தித்துக் கொள்வோம். எங்களுடைய 35 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் 12 ஆண்டுகள் மட்டுமே இணைந்து ஒரே இடத்தில் பணியாற்றினோம்.
 என் இரண்டு பிள்ளைகளும் எங்கள் நிலையை புரிந்து வைத்திருந்தனர். சில நேரங்களில் அவர்களுடன் இருக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியின் காரணமாக, வேலையை விட்டு விட்டு உங்களுடனேயே இருந்துவிடவா? என்று பிள்ளைகளிடம் கேட்பேன். அதற்கு, "அப்படி மட்டும் செய்து விடாதீர்கள். எங்களுக்கு முழு நேர அம்மா தேவையில்லை!'' என்பார்கள்.
 குடும்பத்தினரின் ஆதரவின் காரணமாக, பல்வேறு படிப்புகளைத் தொடர்ந்து படித்தேன். ராணுவத் துறையிலேயே முதல் குழந்தைகள் நல சிறுநீரகவியல் நிபுணராக உருவானேன். எனது விடுமுறைகளைச் சேர்த்து வைத்து குறுகிய கால பயிற்சிகளில் சேர்ந்து படித்தேன். சிங்கப்பூர், இங்கிலாந்திலும் சென்று குறுகிய கால பயிற்சிகளை முடித்தேன். அதன் மூலம் பல்வேறு ராணுவ மையங்களில் குழந்தைகளுக்கான ரத்த சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவினேன். இதனை அடிப்படையாகக் கொண்டு புனே ராணுவ மருத்துவக் கல்லூரியில் புதிய படிப்பு தொடங்கப்பட்டது. இன்று என்னுடைய ஐந்து மாணவர்கள் குழந்தைகள் சிறுநீரகவியல் துறையில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
 தற்போது ராணுவ மருத்துவக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளேன். இந்தக் கல்லூரியில் இருந்து பெற்றதை, திருப்பிச் செலுத்துவதற்கான நேரமாக இதனைக் கருதுகிறேன். ராணுவப் பயிற்சி, கல்வி மற்றும் விளையாட்டு, கலை உள்ளிட்ட அனைத்தையும் சமநிலைப்படுத்த முயற்சித்து வருகிறேன். ஓட வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது'' என்கிறார் மாதுரி.
 - ஜெனி
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com