புதுவாழ்வு அளிக்கும் மல்லிகா!

புதுக்கோட்டை மாவட்டம் - வீரப்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த காலாடிப்பட்டி சத்திரம் இன்று மல்லிகாவினால் அடையாளம் காட்டப்படுகிறது.
புதுவாழ்வு அளிக்கும் மல்லிகா!

புதுக்கோட்டை மாவட்டம் - வீரப்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த காலாடிப்பட்டி சத்திரம் இன்று மல்லிகாவினால் அடையாளம் காட்டப்படுகிறது. சின்னஞ்சிறு கிராமம் என்றாலே அங்கு வாழும் மக்களுக்குப் போதிய கல்வி அறிவு இருக்காது என்ற எதார்த்த நிலையிலும் அவர்களுக்கு எல்லா விதத்திலும் சேவைகள் புரிந்துவரும் மல்லிகா, வயதுக்கு ஏற்றார் போல் உயரம் இல்லாத மாற்றுத்திறனாளி. 
தனது குறை காரணமாக முப்பது வயது வரை வெளியே வராமல் ஒதுங்கியே இருந்தவர் பிறகு பொது வாழ்வுக்கு தன்னை அர்பணித்துக் கொண்டார். 
மல்லிகா கூறுகிறார்:
"எனக்கு மறுவாழ்வு தந்தது தமிழக அரசின் "புது வாழ்வு திட்டம்'தான். ஐந்து ஆண்டுகளாக நான் எனது கிராம மக்களின் நல்வாழ்வுக்காக சேவை செய்து வருகிறேன். எனது முக்கியப் பணி, மக்களிடையே குறிப்பாக சிறு வயதினரிடையே சுத்தம், சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைப் புரிய வைப்பதுதான். அதில் வெற்றியும் அடைந்திருக்கிறேன். 
நாங்கள் ஒன்பது சகோதர சகோதரிகள். அப்பா சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். எங்கள் குடும்பத் தொழில் விவசாயம். அப்பா காலமானதும் விவசாயத்தை அம்மாவும், அண்ணன்களும் செய்து எங்களைக் காப்பாற்றினார்கள் நான் பிறக்கும் போதே குறையுடன்தான் பிறந்தேன். உடல் வளர்ச்சியில்லை. அந்தக் குறை எனக்கு பிறகு பிறந்த தம்பிக்கும் தொற்றிக்கொண்டது. சின்ன வயதிலியே என் உருவத்தில் இருக்கும் வேறுபாடு எனக்குத் தெரிந்தது. அதனால் வெளியே போகவே பயமாக இருக்கும். பிற சிறுமிகள் போல உயரமாக இல்லையே என்று ஏங்குவேன். வெளியே போனால் என்னை பிற சிறுவர்கள் இளக்காரமாகப் பார்ப்பதைப் பார்த்து அழுதிருக்கிறேன். மன வேதனைப்பட்டிருக்கிறேன். அதனால் பள்ளி செல்வதைத் தவிர, வெளியில் போவதை வெகுவாகக் குறைத்துக் கொண்டேன். வீட்டிலேயே அடைந்து கிடப்பேன். முப்பது வயதில் திடீரென்று ஒரு மின்னல் என்னுள் தோன்றியது. இப்படியே இருந்துவிட்டால் எனக்கும் பயனில்லை...பிறருக்கும் பயனில்லாமல் போவேன் என்று தோன்றியது. 
என்னால் பிறருக்கு உதவ முடியும். ஆனால் அதை எப்படிச் செய்வது என்று யோசித்தேன். அப்போதுதான் அரசின் புது வாழ்வு திட்டம் பற்றி அறிந்தேன். அதில் சேர்ந்து பயிற்சி பெற்றால் சமூக சேவை செய்யலாம் என்றும் புரிந்து கொண்டேன். வேறு எதையும் சிந்திக்காமல் அந்தத் திட்டத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். 
உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படும் புதுவாழ்வு திட்டம், மனிதவள மேம்பாட்டுக்கும், தன்னார்வத்தைத் தூண்டி ஆற்றலை வெளியே கொண்டுவந்து வருவாயை ஈட்டவும், பெருக்கவும் உதவுகிறது. இந்தத் திட்டம் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் ஏழை மக்களின் வாவாழ்வாதாரத்தைப் பெருக்க வழிவகுப்பது தான் இந்தத் திட்டம். 
இந்தத் திட்டம் பற்றித் தெரிந்து கொள்ள, மதுரையில் ஒரு மாதம் பயிற்சி பெற்றேன். பின்பு இந்தத் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது தொடர்பான பயிற்சிகளைப் பெற்றேன். பிறகு எனது ஆர்வம் காரணமாக "பிசியோதெரபி' பயிற்சியையும் மேற்கொண்டேன். "பிசியோதெரபி' தேவைப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். எனது ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் எட்டு கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் வசிக்கும் எல்லா மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் வாழ்வாதாரம் சீராக இருக்க என்னால் ஆன தொண்டுகளைச் செய்து வருகிறேன். 
மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை எப்படிப் பெறுவது குறித்த விழிப்புணர்வை அளித்து சலுகைகள் கிடைக்க உதவி செய்து வருகிறேன். மனு எழுதுவது, அதனை எந்த அலுவலகத்தில் சமர்ப்பிப்பது போன்றவை குறித்த தகவல்கள் எனக்குத் தெரியும். அதனால் எனது ஒன்றியத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதேனும் தேவைகள் அல்லது சந்தேகம் ஏற்பட்டால் என்னை அணுகுவார்கள். 
அரசிடம் இருந்து சலுகைகள் பெறுவது, உதவித் தொகைகள் பெறுவது, அடையாள அட்டை பெறுவது, இவை பெறுவதற்கு வேண்டிய அரசு சான்றிதழ்களைப் பெற்றுத் தருவது போன்றவற்றுக்கு புதுக்கோட்டை வரை செல்ல வேண்டிவரும். அடுத்த தெருவுக்குப் போகாமல் முடங்கிக் கிடந்த நான், இப்போது புதுக்கோட்டை வரை போய் வருவது எனக்கே ஆச்சரியத்தைத் தருகிறது. 
எனது பொருளாதாரத் தேவைக்காக, நூறு நாள் வேலைத் திட்டத்தின் பணியாற்றுகிறேன். எனது உருவம் காரணமாக உடல் உழைப்பு, பாரம் சுமப்பது போன்ற வேலைகளைச் செய்ய இயலாது என்பதால், நூறு நாள் வேலைத் திட்டப் பதிவேட்டினைப் பேணுவது, எழுத்து வேலைகள் ஆகியற்றைச் செய்து வருகிறேன்.
எங்கள் பகுதியில் செயல்பட்டு வரும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து கழிப்பிடம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே பரப்பி வருகிறேன். சுகாதாரம் தொடர்பான அறிவுரைகளை சிறுவர்களிடம் தினமும் சொல்லி வருகிறேன். இந்த விழிப்புணர்வு அளிக்கும் செயல்பாடுகளுக்கு எனக்கு பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. பள்ளிகளில் விழிப்புணர்வு சொற்பொழிவுகளையும் ஆற்றி வருகிறேன்.
சென்ற ஆண்டு கடைசியில் டாடா தேசிய இணைய கல்விக் கழகத்தின் 11-ஆவது பட்டமளிப்பு விருது விழா சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்தியாவின் ஒன்பது மாநிலங்களில் இருந்து 34 பெண்கள் உள்பட 74 களப்பணியாளர்கள், சமூக சேவகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கெüரவிக்கப்பட்டனர். தமிழகத்தின் சார்பாக விருதும் பாராட்டும் பெற எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. 
எனக்கும் ஒரு மகன் இருக்கிறான். என் தங்கை மகனை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். அவன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். அவனைப் படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்த வேண்டும்'' என்கிறார் மல்லிகா.
-கண்ணம்மா பாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com