மண்பாண்ட சமையலில் அசத்தும் உணவகம் 

திருச்சி புத்தூர், ஆபீசர் காலனியில் அமைந்திருக்கிறது செல்லம்மாள் உணவகம். இந்தக் கடையில் கீரைதான் சிறப்பே. 
மண்பாண்ட சமையலில் அசத்தும் உணவகம் 

திருச்சி புத்தூர், ஆபீசர் காலனியில் அமைந்திருக்கிறது செல்லம்மாள் உணவகம். இந்தக் கடையில் கீரைதான் சிறப்பே. தினசரி 5 வகை கீரைகள் மெனுவில் கட்டாயம் இருக்கும். மண்பானையில் பொங்கியெழும் கைகுத்தல் அரிசிச் சோற்றின் வாசம் நம்மை கமகமவென வரவேற்கிறது. வரிசையாக ஏழெட்டு மண் அடுப்புகள். உணவுகளைச் சமைக்க புளியமர விறகு. ஒவ்வோர் அடுப்பிலும் மண் சட்டி. இடுப்புயர மண் பானைகள், வெந்து பொங்குவதைக் கிண்டிவிடுவதற்கென மர அகப்பைகள், காய்கறிகள், பல வகைக் கீரைகள் என கண்முன்னே ஆரோக்கியம் தெரிகிறது.
 இந்த உணவகத்தின் உரிமையாளரான செல்லா என்கிற செல்வி சொல்கிறார்:
 ""என் சொந்த ஊர் துறையூர் பக்கத்துல உப்பிலியாபுரம் கிராமம். பி.ஏ. படிச்சிருக்கேன். கல்யாணமானதில் இருந்து திருச்சிலதான் வாழ்க்கை. முதலில் மகளிர் விடுதி தொடங்கினேன். வீட்டை விட்டு வெளில தங்கறவங்க முதல்ல மிஸ் பண்றது வீட்டுச் சாப்பாடுதானே. அதனால விடுதியில தங்கியிருந்த பெண்களுக்கு வீட்டுச் சாப்பாடு செய்து கொடுத்தேன்.
 சுவை, மணத்தை விட ஆரோக்கியம்தான் எனக்கு முக்கியம். சமைக்கும் உணவில் அதுதான் பிரதானம். சோறை குறைவாகவும் காய்கறி கீரைகளை அதிகமாகவும் சாப்பிட வைப்பேன். இது எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. "நீங்க உணவகம் தொடங்கலாமே'ன்னு பல பேர் சொன்னாங்க. அப்பதான் சமையல் சார்ந்த சேவையா 5 வருஷங்களுக்கு முன்னாடி இந்த உணவகத்தை ஆரம்பிச்சேன்.
 சமைப்பதில் தொடங்கி பரிமாறுகிற வரை எல்லாவற்றுக்கும் மண்பாண்டங்களையே பயன்படுத்துவதுதான் செல்லம்மாள் உணவகத்தின் சிறப்பு. வேலை பார்ப்பவர்கள் அனைவருமே பெண்கள். அன்பான உபசரிப்புக்கும் இங்கு குறைவிருக்காது!
 எங்க வீட்ல மண் பாத்திரங்கள்லதான் சமைச்சுக்கிட்டிருந்தோம். இதனால காய்கறி, கீரைகளோட கலர் மாறாம இருக்கிறதையும், இயற்கையான சுவை அப்படியே இருக்கறதையும் தெளிவா உணர முடிஞ்சது. ஹோட்டல்லயும் அதையே முயற்சி செஞ்சோம்.
 வீட்ல சின்ன அளவுல சமைக்கிறதுக்கும் ஹோட்டல்ல பெரிய அளவுல சமைக்கிறதுக்கும் நிறைய சவால்கள் இருந்தது. மண்பாண்டங்களுக்கு வாழ்நாள் குறைவு. கவனமா கையாளணும். சமைக்கிறப்ப விரிசலோ ஓட்டையோ விழலாம். சமைச்சு முடிச்சதும் பல நேரங்களில் மண்பாண்டங்கள் கசியும். சமைக்கிறப்பவே பாத்திரம் உடைஞ்சு மொத்தமும் வீணாகறதும் நடக்கும். இதையெல்லாம் மீறி மக்களுக்கு சுவையான, சத்தான சாப்பாடு கொடுக்கணும் என்ற எண்ணத்துலதான் மண்பானை சமையலைச் செய்யறோம்.
 தினமும் அம்மியில் அரைத்த மசாலாவில் செய்த 6 வகையான குழம்புகள், 5 வகைக் கீரைகள், 7 வகையான பொரியல்கள், விதவிதமான பச்சடி, துவையல், இரண்டு வகை ரசம், கூட்டு. எங்களது ஸ்பெஷல் என வாழைப்பூ உருண்டை குழம்பையும் புளிச்ச கீரையையும் சொல்லலாம்.
 காலை 4:30 மணிக்கே அரைத்தல், இடித்தல் வேலை களைகட்டும். 10 மணிக்கெல்லாம் பரபரப்பா சமையல் வேலை ஆரம்பமாயிடும். மதிய உணவு மட்டும்தான் தர்றோம். மிளகு குழம்பு, கொள்ளுத் துவையல், மல்லித் துவையல், இடித்த பொடி, செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், கைக்குத்தல் அரிசி சாதம், அவல் பாயாசம், சுட்ட அப்பளம்னு அத்தனையும் ஆரோக்கிய சமையல். இதுபோக சிறுதானிய உணவுகளும் மெனுவில் உண்டு'' என்கிறார்
 ஒருவரே இத்தனையையும் ருசிக்க முடியுமா என்கிற கேள்விக்கும் செல்வியிடம் பதில் இருக்கிறது.
 ""நிச்சயமா இவ்வளவு பொரியல் கீரையையும் ஒருத்தரால சாப்பிட முடியாது. தவிர, எல்லாருக்கும் எல்லா காய், கீரைகளும் பிடிக்கும்னும் சொல்ல முடியாது. ஃபுல் மீல்ஸ் என்ற பேரில் பிடிக்காததையும் தேவையில்லாததையும் இலையில் வெச்சு வீணாக்கறதுல எங்களுக்கு உடன்பாடில்லை. அதனால் எல்லா காய், கீரைகளையும் கொஞ்சம் கொஞ்சமா குவளைல வச்சு வாடிக்கையாளர்களோட இருக்கைக்கு எடுத்துட்டுப் போய் காட்டுவோம். யாருக்கு என்ன தேவையோ அதை மட்டும் ஆர்டர் பண்ணி சாப்பிடலாம்.
 மெனு கார்டுல ஒரு உணவோட பேரை மட்டும் படிச்சுட்டு தேர்வு பண்றதுக்கும், ஒரு உணவை கண்ணால பார்த்து வாங்குறதுக்கும் வித்தியாசம் இருக்கில்லையா?
 350 கிராம் அளவுள்ள சாதம் ரூ.15 மட்டுமே. குழம்பு வகையறாக்கள் ஒரு கிண்ணம் ரூ.15. சாம்பார், ரசம், கீரை, பொரியல் போன்றவை ஒவ்வொன்றும் தலா ரூ.10. இங்கு பணிபுரியும் அத்தனை பெண்களும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். உணவையும் விருந்தோம்பலையும் உண்மையாக நேசித்துச் செய்கிறவர்கள்.
 புகைப்போக்கி அடுப்புகளை வெச்சு திறந்த வெளிலதான் சமைக்கிறோம். மிளகாய், மல்லி, பருப்பு தானிய வகைகளை நாங்களே அரைச்சு, இடிச்சு உணவில் சேர்க்கிறோம். செக்கில் ஆட்டி எடுக்கற நல்லெண்ணெயில்தான் முழுக்க முழுக்க சமையல் செய்யறோம்.
 குடிநீரும் மண் குவளையில்தான். அதுவும் ஓமமும் சீரகமும் கலந்து காய்ச்சி ஆற வைத்த குடிநீர்!'' என்கிறார் செல்வி.
 திருச்சி புத்தூர் சென்றால் இந்த அனுபவத்தைப் பெறலாம்!
 - காஞ்சனா இராசகோபாலன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com