35 பெண் ஓவியக் கலைஞர்களின் கைவண்ணத்தில் மியூரல் மகாபாரதம்!

35 பெண் ஓவியக் கலைஞர்களின் கைவண்ணத்தில் மியூரல் மகாபாரதம்!

பிரபல கேரள மியூரல் ஓவியரான பிரின்ஸ் தொன்னக்கல் தலைமையில் அவருடைய 35 மாணவிகள் இணைந்து நம்முடைய இதிகாசமான மகாபாரதத்தை 113 மியூரல் ஓவியங்களாகப் படைத்துள்ளனர்.

பிரபல கேரள மியூரல் ஓவியரான பிரின்ஸ் தொன்னக்கல் தலைமையில் அவருடைய 35 மாணவிகள் இணைந்து நம்முடைய இதிகாசமான மகாபாரதத்தை 113 மியூரல் ஓவியங்களாகப் படைத்துள்ளனர். இதற்கு "பகவத் மியூரல்' என பெயரிட்டுள்ளனர். சென்னை லலித் கலா அகாதெமியில் 10 நாள்கள் நடைபெற்ற இந்த கண்காட்சி குறித்து 35 ஓவியர்களில் ஒருவரான விஜயநிர்மலா ரமேஷ் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
 "எங்களது குரு பிரின்ஸ் தொன்னக்கல் அவர்களின் பல வருட கனவு இந்த மியூரல் மகாபாரதம். மகாபாரதத்தில் இருந்து முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை எடுத்து அதனை அடிப்படையாகக் கொண்டு 113 ஓவியங்கள் வரையப்பட்டிருக்கிறது. அதில் 112 ஓவியங்களை ஒரு தொகுதியில் 35 ஓவியம் என மூன்று தொகுதிகளாக எங்களது குரு அவுட் லைன் வரைந்து கொடுக்க, அதற்கு நாங்கள் 35 பேரும், வண்ணம் தீட்டியுள்ளோம்.
 ஒவ்வொரு 35 ஓவியம் வரையப்பட்டதும், எங்களுடைய 35 பேரின் பெயர்களையும் துண்டு சீட்டில் எழுதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் 3 ஓவியங்கள் வீதம் வண்ணம் தீட்டக் கொடுத்தார். பெண்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஈடுபட வேண்டும் என்று நினைத்து எங்களுக்கு இந்த பிரஜாக்ட்டை கொடுத்தார். அவரது கனவிற்கு எங்களால் ஆன பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது.
 எங்கள் 35 பேரில் அதிகபட்ச பெண்கள் கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள். சென்னையிலிருந்து என்னுடன் சேர்த்து 8 பெண்கள் வரைந்திருக்கிறோம். ஒருவர் தில்லி, ஒருவர் துபாயைச் சேர்ந்தவர். நாங்கள் 35 பேரும் ஒன்று சேர்ந்து இந்த மியூரல் மகாபாரதத்தை 4 ஆண்டுகளாக உருவாக்கியிருக்கிறோம். இந்த ஓவியங்கள் அனைத்தும் வெவ்வேறு இடங்களில் இருந்து வண்ணம் தீட்டியதால், வித்தியாசம் தெரியாமல் ஒன்று போல இருக்க வேண்டும். இதற்காகவே அடிப்படை நிறங்களான பஞ்சவர்ணம் நிறத்தையே பெரும்பாலும் உபயோகப்படுத்தியிருக்கிறோம். 113-ஆவது ஓவியமான விஸ்வரூப காட்சியை எங்கள் குருவே வரைந்து அவரே வண்ணமும் தீட்டியிருக்கிறார்.
 இது கோயில் கலை என்று சொல்லலாம். தஞ்சாவூர் ஓவியம், சிறப்பங்கள் போன்று இது ஒரு வகையான ஓவியம். இந்த வகையான கேரளா மியூரல் ஓவியங்கள் முன்பெல்லாம் கோயிலில் மட்டும்தான் இருக்கும். கேரளாவில் உள்ள காலடி, குருவாயூர், பத்மநாபசாமி கோயில் போன்ற மிக பழைமையான கோயில்களில் மட்டும்தான் இந்த வகையான ஓவியங்களை காணமுடியும். அங்கெல்லாம் கிளிஞ்சல்கள், வேம்பு போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை வண்ணங்களை கொண்டு வண்ணம் தீட்டியுள்ளனர். அவை பார்ப்பதற்கு மிக அழகாகவும், மிக நேர்த்தியாகவும் இருக்கும்.
 இத்தனை அற்புதமான ஓவியங்கள் வெளிவுலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மகாபாரத தீமை மியூரல் ஓவியங்களாக வரைந்திருக்கிறோம்'' என்றார் விஜய நிர்மலா.
 - ஸ்ரீதேவிகுமரேசன்
 படங்கள் : சாய் வெங்கடேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com