நாட்டிய உலகில் 62 ஆண்டுகள்!

பரதநாட்டிய கலையின் பிரதிநிதி, வித்தகர், நடன இயக்குநர், எழுத்தாளர், சங்கீத வித்வான், இசையமைப்பாளர், ஆய்வாளர், ஆசிரியை, கற்சிலைகளில் கண்ட கவிதைகளை நாட்டியத்தில் பிரதிபலித்தவர் என
நாட்டிய உலகில் 62 ஆண்டுகள்!

பரதநாட்டிய கலையின் பிரதிநிதி, வித்தகர், நடன இயக்குநர், எழுத்தாளர், சங்கீத வித்வான், இசையமைப்பாளர், ஆய்வாளர், ஆசிரியை, கற்சிலைகளில் கண்ட கவிதைகளை நாட்டியத்தில் பிரதிபலித்தவர் என பல்வேறு திறமைகளை கொண்ட பத்மா சுப்ரமணியம் நாட்டிய உலகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு 62 ஆண்டுகள் ஆகின்றன.
கடந்த 62 ஆண்டுகளில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, தொழில், நடனம் ஆகியவை தனக்கும், தன் குடும்பத்தாருக்கும் இடையே இணைக்கப்பட்டதாக கருதும் பத்மா சுப்ரமணியம், சுதந்திர போராட்ட வீரரும், பிரபல இயக்குநருமான கே. சுப்பிரமணியத்தின் புதல்வியாவார். அவர் இயக்கிய "கீத காந்தி' படத்தின் மூலம் பத்மா, மக்களின் பார்வைக்கு வந்தார்.
1942- ஆம் ஆண்டு கே. சுப்ரமணியம் நிறுவிய "நிருத்யோதயா' நடன பள்ளி, 2017-ஆம் ஆண்டு 75-ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது. அறக்கட்டளையாக தொடங்கப்பட்ட இந்தப் பள்ளி, இன்று பத்மா சுப்பிரமணியத்தின் மேற்பார்வையில் சிறந்த நடன கலாசாலையாக விளங்குகிறது.
நிருத்யோதயாவில் இருந்த கவுசல்யா என்ற ஆசிரியையிடம் நடனம் பயிலத் தொடங்கிய பத்மா, பின்னர் குரு வழுவூர் ராமையாப்பிள்ளையிடம் முறைப்படி பரதம் பயின்று, 1956-ஆம் ஆண்டு அரங்கேற்றம் செய்தார்.
நாட்டியத்தின் மீது தன் மகளுக்கு இருந்த ஆர்வத்தை கண்ட சுப்பிரமணியம், பின்னர் தண்டாயுதபாணி பிள்ளையிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவர் மூலமாக பரத நாட்டியத்தின் அடிப்படையான 150 அபிநயத்தையும் கற்றுக் கொண்ட பத்மா, தனது 14-ஆவது வயதிலேயே நிருத்யோதயாவில் நடனம் பயில வந்த மாணவிகளுக்கு பயிற்சியளிக்கத் தொடங்கினார்.
சிறுவயதிலிருந்தே பத்மாவுக்கு கோயில்களில் காணப்படும் நடன சிலைகள் மீது ஆர்வமிருந்தது. அவரது சகோதரர் பாலகிருஷ்ணன், கோயில்களை பற்றிய ஆவணப்படங்களை எடுத்து வந்ததால் அவருக்கு உதவியாளராக பணியாற்றத் தொடங்கினார். இந்திய நடனங்களில் நாட்டிய சாஸ்திரப்படி அமைப்பட்டுள்ள கோயில் சிலைகளைப் பற்றி ஆய்வு நடத்தும் போது, காஞ்சி பெரியவர் அறிவுரையின் பேரில் சதாராவில் உள்ள நடராஜர் கோயில்களுக்குச் சென்று, அங்குள்ள சிலைகளை பற்றி 108 விதமான சிலை வடிவங்களைப் பற்றி குறிப்புகள் எழுதினார்.
அடுத்து இவருக்கு "மீனாட்சி கல்யாணம்' என்ற நாட்டிய நாடகத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நாட்டிய நாடகம் இன்றளவும். ரசிகர்களின் வரவேற்புகிணங்க நடத்தப்படுகிறது. நாட்டியத்திற்கு இசை மிகவும் அவசியமாகும். பத்மாவின் அம்மா மீனாட்சி, பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் இருந்ததால் பத்மாவும் அவர் மூலம் இசையைக் கற்றுக் கொண்டார். சலீல் சவுத்ரியுடனான சந்திப்பு, இவருக்கு சங்கீத பயிற்சியளிக்கும் குருவாகும் வாய்ப்பை அளித்தது.
பாடகியும், கர்நாடக மற்றும் கிராமிய இசை ஆராய்ச்சியாளுமான இவரது மன்னி சியாமளா பாலகிருஷ்ணன், பத்மாவுடன் இணைந்தது பெரும்பலமாக இருந்தது. சியாமளாவின் இசையை மட்டுமின்றி, அவரது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் நடனங்களை இயக்கும் வாய்ப்புகளை பெற்றார். தானாகவே இசையமைக்கும் திறமையை பெற்ற பத்மா கூடவே நாட்டிய நாடகங்களுக்கு தேவையான சிலை அலங்காரம், ஒப்பனை, நகைகள், ஆடைகளைத் தேர்வு செய்யுமளவுக்கு தகுதி பெற்றார். இதற்கு கோயில் சிறபங்கள் பெருமளவில் உதவின. அனைத்து இந்திய நடனங்களுக்கும் அடிப்படையாக நீண்ட காலமாக மறக்கப்பட்டிருந்த பரதமுனியின் மார்கத்தை அறிமுகப்படுத்தினார்.
இவர் முதன் முதலாக தயாரித்த "கிருஷ்ணாய தூப்யம் நமஹ' என்ற நாட்டிய நாடகத்தில் பல்வேறு கதாபாத்திரங்களை இவரே ஏற்றிருந்தார். முதன் முதலாக வர்ணத்திற்கு மெட்டமைத்து தந்தார். புஷ்பாஞ்சலி என்ற நடனத்தை அறிமுகப்படுத்திய முதல் நடன கலைஞரும் இவரே மீரா பஜனுக்கும் இசையமைத்துள்ளார்.
பரிசோதனை முறையில் ஜடாயுமோட்சத்தை அரங்கேற்றிய பத்மா, பின்னர் ஜப்பானிய இசையமைப்புடன் கூடிய "கஜேந்திர மோட்சத்தை' அரங்கேற்றினார். நிருத்யோதயா சார்பில் தூர்தர்ஷனுக்காக 13 பகுதிகள் கொண்ட "பாரதிய நாட்டிய சாஸ்திரா' என்ற ஆவணப் படமொன்றை தயாரித்து கொடுத்தார் இதற்குதான் படித்தவற்றையும், ஆய்வுகளையும் பயன்படுத்தினார்.
தன்னுடைய நடன நிகழ்ச்சிகளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தியதோடு நடனக் கலை குறித்து கருத்தரங்கு, நிகழ்ச்சிகளை நேரிலும் நடத்தி காட்டியுள்ளார். நடனக்கலை குறித்த தன் ஆய்வுகளை புத்தகமாகவும் எழுதி வெளியிட்டுள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷன், சங்கீத நாடக அகாதெமி விருது, கலைமாமணி, காளிதாஸ் சன்மானம், ஃபகுகா ஆசிய கலாசார விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ள பத்மா சுப்பிரமணியம், தற்போது போபால் பாரதபவன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பரதமுனிக்காக கோயில் கட்டியுள்ள ஒரே நடன கலைஞரும் இவர்தான். அந்த கோயில் வளாகத்திலேயே தன் ஆய்வுகட்டுரைகள், ஆவணங்கள் ஆகியவைகளை வைத்திருப்பதுடன் அதை தன்னுடைய வாசக சாலையாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளார். ""நடன கலைஞர்களும், தத்துவ மேதைகளும் ஒன்று கூடி மனித நல்லிணக்கத்திற்காக உதவும் வகையில் ஆசிய கலாசார மேடை ஒன்றை அமைக்க வேண்டுமென்பது என் கணவாகும்'' என்கிறார் பத்மா சுப்பிரமணியம்.
- பூர்ணிமா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com