எனது இலக்கு 2020 - ஒலிம்பிக்தான்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துருக்கி நாட்டில் எர்சுரம் என்ற பகுதியில் உள்ள பாலன்டோகன் ஸ்கீ சென்டரில், இன்டர்நேஷனல் ஸ்கீயிங் பெடரேஷன் நடத்திய "ஆல்பைன் இஜ்பெர் 3200 கப்'' போட்டியில் வெண்கல பதக்கத்தைப்
எனது இலக்கு 2020 - ஒலிம்பிக்தான்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் துருக்கி நாட்டில் எர்சுரம் என்ற பகுதியில் உள்ள பாலன்டோகன் ஸ்கீ சென்டரில், இன்டர்நேஷனல் ஸ்கீயிங் பெடரேஷன் நடத்திய "ஆல்பைன் இஜ்பெர் 3200 கப்'' போட்டியில் வெண்கல பதக்கத்தைப் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை அடைந்திருக்கிறார் 21 வயதான அன்சல் தாக்கூர்.
மணாலியில் புர்ணா என்ற கிராமத்தை சேர்ந்த அன்சல் தாக்கூர், ஐந்து வயதிலிருந்தே ஸ்கீயிங் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டில் தனக்கு ஆர்வம் ஏற்பட்டு பயிற்சி பெறத் தொடங்கியதாக கூறுகிறார். "வின்ட்டர் கேம்ஸ்' பெடரேஷன் ஆஃப் இந்தியாவில் அதிகாரியாக பணியாற்றும் இவரது தந்தை ரோஷன் தாக்கூர்தான் இவருக்கு பனிச்சறுக்கு விளையாட்டில் ஆர்வமூட்டினாராம். 11 -வது வயதிலேயே முதன்முறையாக லெபனானில் நடந்த ஆசியன் ஸ்கீசாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அனுபவமும் இவருக்குண்டு. அன்சலின் உறவினர் 2006 -ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் முன்னாள் பனிச்சறுக்கு சாம்பியன் ஹீராலால், இவருக்கு சர்வதேச அளவில் பனிச்சறுக்கு போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு பயிற்சியளித்தாராம். கூடவே இவரது மூத்த சகோதரர் இமாம்ஷா தாக்கூரும் பயிற்சி பெற்றுள்ளார்.
தென்கொரியாவில் நடந்த வின்ட்டர் ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற பின்னரே, இந்தியாவில் இவரது புகழ் பரவியது, வெற்றிப்பெற்ற மறுநாள் காலை எழுந்தபோது, பிரதமர் நரேந்திரமோடி, விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜவர்தன் சிங் ஆகியோர் அனுப்பிய வாழ்த்துகளோடு, இவரது தோழிகள் சிலர், அன்சல் போட்டியில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் அனுப்பியது அன்சலை ஆச்சரியப்பட வைத்ததாம். "இந்த பாராட்டுகளை நான் எதிர்பார்க்கவே இல்லை'' என்கிறார் அன்சல்.
சண்டிகர் கல்லூரியொன்றில் பட்டப்படிப்பு படித்து வரும் அன்சலுக்கு ஒரே நேரத்தில் படிப்பிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்துவது சிரமமாக இருக்கிறதாம். துருக்கி போட்டியில் பங்கேற்றபோது, கல்லூரி தேர்வுகளை இழக்க வேண்டியதாகிவிட்டதாம். இருப்பினும் எப்படியும் படிப்பை முடிப்போம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.
சிறுவயதிலேயே பனிச்சறுக்கு விளையாட்டில் ஆர்வமேற்பட்டதற்கான காரணத்தை அவரே விவரிக்கத் தொடங்கினார். 
"பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபாடு ஏற்பட்டதற்கு நான் மணாலியில் பிறந்ததும் காரணமாக இருக்கலாம். எப்போதும் பனிப் பொழிவையும் குளிரையும் அனுபவித்த எனக்கு பனிச்சறுக்கு விளையாட்டில் ரோல் மாடலாக இருந்தவர் என் தந்தைதான். இருமுறை ஒலிம்பிக்ஸில் ஸ்கீயின் விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்ற டெட்லிரகடியும் எனக்கு வழிகாட்டிதான். அவரை சந்திக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு 2015-ஆம் ஆண்டு நிறைவேறியது மறக்க முடியாததாகும். அமெரிக்க உலக கோப்பை ஆல்பைன் ஸ்கீ ரேஸர் மைக்கலோ ஷிப்ரினும் எனது ரோல் மாடல் ஆவார்.
பனிச்சறுக்கு விளையாட்டிற்கும், மற்ற விளையாட்டு வீரர்களை போல் உடற்பயிற்சி செய்வதோடு, பனிச்சறுக்கு பயிற்சியும் பெறுகிறேன். சில நேரங்களில் ஜிம்மிற்கு செல்வதுண்டு. நம்முடைய நாட்டில் விளையாட்டுத் துறையில் அடிப்படை வசதிகளோ, விழிப்புணர்வோ, ஆதரவோ இல்லை. இருப்பினும் 2012 -ஆம் ஆண்டு இந்தியா சார்பில் இன்ஸ்பிரேக்கில் நடந்த வின்ட்டர் யூத் ஒலிம்பிக்ஸிலும், ஆல்பைன் ஸ்கீயில் பெண்கள் பிரிவு போட்டிகளிலும் பங்கேற்க அனுப்பப் பட்டேன்.
என்னுடைய அடுத்த குறிக்கோள் 2020-ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ்தான். தென் கொரியாவில் நடக்கவுள்ள 2018-ஆம் ஆண்டு வின்ட்டர் ஒலிம்பிக்ஸ் போட்டியிலும் கலந்து கொள்வதால், அதற்கான பயிற்சிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளேன். இதுவரை நான் எடுத்துக் கொண்ட பயிற்சிகளைவிட சற்று கடினமாக இருக்கும். ஒலிம்பிக்ஸில் வெற்றி பெறுவது முக்கியமல்லவா? என்கிறார் அன்சல் தாக்கூர்.
- பூர்ணிமா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com