திரையுலகின் சாதனை பெண்கள்!

திரையுலகின் சாதனை பெண்கள்!

வாழ்க்கையில் பல சோதனைகளில் இருந்து மீண்டவர் சௌகார் ஜானகி. மணவாழ்க்கை சரியாக இல்லை.

• பிரபல பாடகி வாணி ஜெயராம் 1980-ஆம் ஆண்டில் பதினைந்து நாட்களில் மூன்று விருதுகள் பெற்று சாதனை படைத்தார். ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழக அரசின் பரிசு, 19-ஆம் தேதி ஃபிலிம் ஃபேர் இதழின் பரிசு, 24 -ஆம் தேதி தேசிய விருது. வாணி ஜெயராம் ஒரு சிறந்த ஓவியர். நன்றாக கவிதைகள் எழுதுவார். ஒரு கவிதை தொகுப்பு வெளிவந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, போஜ்புரி, வங்காளம் ஆகிய மொழிகளில் பாடியிருக்கிறார்.

• வாழ்க்கையில் பல சோதனைகளில் இருந்து மீண்டவர் சௌகார் ஜானகி. மணவாழ்க்கை சரியாக இல்லை. போராடிப் போராடி பிரபல நடிகையானார். 82 வயதிலும் "புங்ககதப்' என்ற கன்னட படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் நடித்துள்ளார்.

• காலஞ்சென்ற பிரபல நடிகை பானுமதி பல திறமைகள் கொண்டவர். சிறந்த நடிப்புத்திறன், நன்றாக பாடுவார். கடைசி வரை பிறர் தனக்கு பின்னணி குரல் கொடுப்பதை அவர் விரும்பவில்லை. சிறந்த எழுத்தாளர், அவர் எழுதிய "அதிதகாரு' என்ற தெலுங்கு நாவலுக்கு ஆந்திர சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. இயக்குநர், தயாரிப்பாளர், இசை யமைப்பாளர், பின்னணி பாடகி, ஸ்டூடியோ முதலாளியாகவும் இருந்தார்.

• நடிகை ஹேமமாலினியை டைரக்டர் ஸ்ரீதர் தன்னுடைய "வென்னிற ஆடை' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார். ஆனால், அவருடைய நடிப்பு பிடிக்காததால் அவரை நீக்கிவிட்டு அந்த பாத்திரத்தில் நிர்மலாவை நடிக்க வைத்தார். ஹேமமாலினி அதற்காக சோர்ந்து போய் விடவில்லை. மும்பைக்கு பறந்தார். அங்கு பிரபல இந்தி நடிகையாக வெற்றிக்கொடி நாட்டினார். தற்போது 65 வயதாகிறது. நடனம் ஆடுவதை நிறுத்தவில்லை. இவர் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

• பிரபல பாடகி எஸ். ஜானகி தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், ஒடிசி மொழிகளில் சுமார் 48,000 பாடல்கள் பாடியிருக்கிறார். தமிழகம், கேரளம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து மொத்தம் 32 விருதுகள் பெற்றிருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட "பத்மபூஷன்' விருதை ஏற்க மறுத்துவிட்டார். அவருக்கு தற்போது வயது 78. ""இனிமேல் பாடமாட்டேன்'' என்று அறிவித்துவிட்டார்.

• சிறுவயதில் நகைச்சுவை நடிகை மனோரமாவை வறுமை வாட்டி வதைத்தது. மணவாழ்க்கையும் அவருக்கு சரியாக அமையவில்லை. பலத்த போராட்டங்களுக்கு பிறகு பிரபல நகைச்சுவை நடிகையானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 1500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். "பத்மஸ்ரீ' பட்டம் பெற்றார். சொந்த குரலில் பாடி நடித்தார்.
- அனிதா ராமச்சந்திரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com