வால்டாக்ஸிலிருந்து மாஸ்கோ வரை...!

வால்டாக்ஸிலிருந்து மாஸ்கோ வரை...!

தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு வானம்தான் கூரை. ஒண்ட இடம் இல்லாமல் இருக்கும் போது விளையாட மைதானத்திற்கு எங்கே போவது ..? தெருவோரக் குழந்தைகளுக்கு

தெருவோரம் வசிக்கும் குழந்தைகளுக்கு வானம்தான் கூரை. ஒண்ட இடம் இல்லாமல் இருக்கும் போது விளையாட மைதானத்திற்கு எங்கே போவது ..? தெருவோரக் குழந்தைகளுக்கு வீடு, உணவு, கல்வி, உடை மட்டும் அந்நியமல்ல விளையாட்டும்தான். சென்னையில் செயல்பட்டுவரும் "கருணாலயா' தெருவோரம் வீடில்லாமல் வாழ்ந்து வரும் குழந்தைகளுக்கு பள்ளியில் சென்று கல்வி கற்க உதவுவதுடன் விளையாடவும் கற்றுத் தருகிறார்கள். இப்படி "கருணாலயா' உருவாக்கிய தெருவாழ் குழந்தைகளுக்கான கால்பந்து அணி சென்ற மாதம் மாஸ்கோவில் நடந்த சர்வதேச தெருவோர குழந்தைகளுக்கான உலக கால்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டு திரும்பியுள்ளது. இந்த அணியின் தலைவியான சங்கீதா சென்னை ராணிமேரி கல்லூரியில் உடல் பயிற்சி பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். துணைத் தலைவியான ஷாலினி பிளஸ் டூ படிக்கிறார்.
 கால்பந்தாட்ட அணியின் தலைவி
 சங்கீதா கூறுகையில்:
 "எங்கள் மேல் குவிந்திருக்கும் இருள் மறைந்து எங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் படராதா... என்ற ஏக்கத்தில்தான் பந்தை உதைத்து தள்ளுகிறோம். சென்ற மே மாதம் ரஷ்யாவில் மாஸ்கோ நகரத்தில் நடந்த சர்வதேச தெருவோர குழந்தைகளுக்கான கால்பந்து விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் நாங்கள் சென்று வந்தோம். உலக அரங்கில் செயல்பட்டுவரும் "குழந்தைகளைக் காப்போம்' (நஹஸ்ங் ற்ட்ங் ஸ்ரீட்ண்ப்க்ழ்ங்ய்) அமைப்புடன் இணைந்து தெருவாழ் குழந்தைகளின் நலனுக்காக செயல்படும் அமைப்புகள் அணிசேர்ந்து நடத்தும் சர்வதேச கால்பந்து போட்டியில் இருபதிற்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. அதில் என் தலைமையிலான சென்னை அணி, இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்தது.
 நான் வசித்து வருவது சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு ஒண்டு குடிசையில். மூன்று தலைமுறையாக அங்குதான் வசித்து வருகிறோம். பொருளாதார பிரச்னை காரணமாக ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு கடையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தேன். அம்மா வீட்டு வேலைக்குச் சென்று வருகிறார். அப்பா எங்களை விட்டு சென்றுவிட்டார். அந்த சூழ்நிலையில்தான் கருணாலயா அமைப்பினர் என்னை சந்தித்தனர். எனது நிலைமை தெரிந்து கொண்ட கருணாலயா அமைப்பினர் "கால் பந்து விளையாட ஆர்வம் உண்டா?' என்று கேட்டார்கள். "ஆர்வம் இருக்கிறது' என்றேன். "படிக்க தினமும் பள்ளிக்கூடம் போக வேண்டும். அப்போதுதான் கால்பந்து விளையாட பயிற்சி பெற முடியும். அதுதான் நிபந்தனை..' என்றார்கள். ஏற்றுக் கொண்டேன். படிப்பிற்கும், விளையாட்டிற்கும் "கருணாலயா' உதவி செய்ய எனது பயணம் தொடர்ந்தது. சிறுவயதில், கிழிந்த துணிகளைப் பந்தாகச் சுற்றி காலால் உதைத்து தெருவில் விளையாடுவேன். நிஜமான பந்தைக் கண்டதும் ஆர்வம் தொற்றிக் கொள்ள பந்தைக் கைகளால் ஏந்திக் கொண்டேன். பந்தை உதைக்க மனம் வரவில்லை.
 குடிசையில் விளக்கு வசதியில்லை. தெரு விளக்குதான் எல்லாவற்றிற்கும். தெருவோர விளக்குகள் வெளிச்சத்தின் கீழே அமர்ந்து சாலையில் பறக்கும் வாகனங்கள்.. அவை கக்கும் புகை... கொசுக்கடி... மழை.. இவற்றிற்கிடையில் பாடம் படிக்கிறேன். என்னால் இயன்ற அளவுக்குப் படித்து பத்தாம் வகுப்பு தேர்வில் 351 மதிப்பெண்கள் எடுத்தேன்.
 "கருணாலயா கால்பந்தாட்டக் குழு, 2015-ஆம் ஆண்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்த "குடிசை வாழ் குழந்தைகளக்குக்கான கால்பந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டது. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடியதற்காக எனக்கு விருது கிடைத்தது. அந்த விருதுதான் எனக்கு கால்பந்தாட்டத்தில் உற்சாகம் ஏற்பட காரணமாக அமைந்தது.
 ஸ்காட்லாந்தில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற வீடில்லா குழந்தைகளுக்கான கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியும் கலந்து கொண்டது. அந்த அணியில் எனக்கும் இடம் கிடைத்தது. தமிழ்நாட்டிலிருந்து எனக்கு மட்டுமே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்காட்லாந்து பயணத்திற்குப் பின் எனக்கு வாழ்க்கையின் மேல் நம்பிக்கை ஏற்பட்டது. முயற்சி செய்தால் அதற்கேற்ற பலன் கிடைக்கும் என்று புரிந்து கொண்டேன். டிராயர் அணிந்து நான் கால்பந்து விளையாடுவதை சக குடிசைவாசிகள் மனதளவில் ஏற்றுக் கொள்ளவில்லை. எனது வெளிநாடு பயணம் மூலம் அவர்கள் கண்ணோட்டம் மாறியது. என்னை பற்றி பெருமையாக பேசவும் தொடங்கினார்கள்.
 பக்கத்து ஊருக்கு கூட பஸ்ஸில் போக இயலாத நிலைமையில் இருக்கும் எங்களுக்கு, விமானம் ஏறி மாஸ்கோ நகரம் சென்று உலக கால்பந்தாட்டம் நடந்த மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு கனவில் கூட கிடைக்காது. அந்த வாய்ப்பை கருணாலயாவும் கால்பந்தாட்டமும் நனவாக்கிக் கொடுத்திருக்கிறது'' என்கிறார் சங்கீதா.
 கால்பந்தாட்ட அணியின் துணைத் தலைவி
 ஷாலினி கூறுகையில்:
 "கால்பந்தாட்டத்தில் ஒவ்வொருவரும் முக்கியம். யாருக்கும் யாரும் குறைந்தவர்கள் இல்லை. சரி நிகர் சமம். கால்பந்தாட்டத்தில் பந்தை உதைத்து உதைத்து எப்படியாவது கோல் போட வேண்டும். அதுதான் லட்சியம். கால்பந்தாட்டத்தில் விதிகள் இருப்பது போல் வாழ்க்கைக்கும் விதிகளை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதுதான் வெற்றியிடம் நம்மைக் கொண்டு செல்லும் என்பது இப்போது புரிய ஆரம்பித்திருக்கிறது.
 பெற்றோர் அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. அந்த நெருக்கடியில், முப்பத்திரண்டு வயதான ஒருவருக்கு பதிமூன்று வயதான என்னைத் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தார்கள். அதனால் வீட்டை விட்டு ஓடிவந்து சென்னை தெருவோரங்களில் அடைக்கலம் புகுந்தேன். குழந்தைத் திருமணத்திலிருந்து தப்ப முடிந்தாலும் எதிர்காலம் கேள்விக்குறியானபோது, கருணாலயா தொண்டு நிறுவன அமைப்பினர் எனக்கு ஆதரவு தந்தனர். பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். கால்பந்தாட்டமும் அறிமுகமானது. பள்ளிப் படிப்பும் கால்பந்தாட்டமும் எனக்கு நம்பிக்கையைத் தந்துள்ளன. மாஸ்கோவில் வைத்து இந்தி நடிகர் அபிஷேக் பச்சனைச் சந்திக்கும் வாய்ய்பு கிடைத்தது. எங்களின் பின்னணியைக் கேட்டறிந்து இந்தியக் குழுவைப் பாராட்டினார்'' என்கிறார் ஷாலினி.
 வழக்கறிஞர் பால் சுந்தர் சிங் கூறுகையில்:
 கருணாலயா கால்பந்தாட்ட அணியில் பங்கேற்ற அனைவருமே தெருவோரக் குழந்தைகள் தான். அதனால் பாஸ்போர்ட் பெறுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. காரணம், அவர்கள் வீட்டை விட்டு ஓடி வந்திருப்பதாலும், தெருவோரம் வாழ்வதாலும் பிறப்பு சான்றிதழ் இருப்பதில்லை. பல முயற்சிகளுக்குப் பிறகு மாஸ்கோ பயணம் தெரு வாழ் குழந்தைகளுக்கு சாத்தியமானது. டில்லியிலிருந்து மாஸ்கோவிற்குப் பறக்க ஆகும் செலவை ரஷ்ய விமான நிறுவனம் ஏரோ ஃபுளொட் ஏற்றுக் கொண்டது. கருணாலயா அலுவலகம் தண்டையார்பேட்டையில் உள்ளது. கால்பந்தாட்டத்தில் பயிற்சி தர கண்ணதாஸ், ஆல்ராய் கோச்சுகள் இருக்கிறார்கள். மாஸ்கோவில் நடந்த போட்டியில் எங்கள் அணி மெக்சிகோ அணியை தோற்கடித்தது. அடுத்த ஆண்டில் தெருவாழ் சிறுவர்களுக்காக கிரிக்கெட் அணியை உருவாக்க உள்ளோம்'' என்கிறார் சுந்தர் சிங்.
 - பிஸ்மி பரிணாமன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com