வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த தாய்மை!

டென்னிஸ் விளையாட்டில் சர்வதேச அளவில் பல வெற்றிகளை கண்ட சானியா மிர்சா, 2010 - ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட பின்,
வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த தாய்மை!

டென்னிஸ் விளையாட்டில் சர்வதேச அளவில் பல வெற்றிகளை கண்ட சானியா மிர்சா, 2010 - ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட பின், இப்போது தாய்மை அடைந்திருப்பதை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியதோடு, தன் எண்ணங்களையும் இங்கு பகிர்ந்து கொள்கிறார்:
 "நான் தாய்மை அடைந்தது என்னைப் பற்றியும், என் கணவர் சோயிப் மாலிக்கை பற்றியும் பரவியிருந்த பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். டென்னிஸ் விளையாட்டில் ஈடுபட்டுள்ள நான், பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் விளையாட்டு வீரரை திருமணம் செய்து கொண்டதும் எங்கள் திருமணம் நீண்ட காலம் நீடிக்காது என்று நினைத்தவர்களும் உண்டு. எட்டாண்டுகளுக்கு பின் நான் தாய்மை அடைந்திருப்பது எனக்குள் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது.
 திருமணமாகும் போதே நாங்களிருவரும் அவரவர் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதென தீர்மானித்து விட்டோம். துபாயில் எங்களுக்கு ஒரு வீடு உள்ளது. பெரும்பாலான நேரங்களில் நாங்களிருவரும் அங்கு சேர்ந்து தங்குவதுண்டு. தொலை தூர திருமணங்களில் சாதக - பாதங்கள் இருப்பதுண்டு. ஆனால் ஒன்றாக இருக்கும்போது நிலைமை மாறுபடலாம். என்னைப் பொருத்தவரை தம்பதியர் சில காலம் தனித்தனியே இருந்து ஒன்று சேருவது ஆரோக்கியமானதென்று கருதுகிறேன். எட்டாண்டுகளை கடந்துவிட்ட நாங்கள் எதிர்காலத்தையும் சிறப்பாக கடப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.
 நாங்கள் இருவருமே பிரபலங்கள் என்பதால் எங்கள் திருமணம், தாமதமான தாய்மை குறித்து மக்களிடையே பலவித கருத்துகள் தோன்றியிருக்கலாம். இது இயற்கையானதுதான். எங்கள் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள ஆவல் இருக்கலாம். ஆனால் எங்களுக்கு தேவை என்ற நேரத்தில்தான் குழந்தைகளை பெறமுடியும். என்னுடைய விருப்பப்படிதான் நான் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன். அதன்படியே இப்போது தாய்மை அடைந்துள்ளேன்.
 எங்களைப் பற்றிய தகவல்களையோ, புகைப்படங்களையோ வெளியிடுவதில்லை. எங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவே உள்ளது. தாய்மை அடைந்ததற்காக என்னுடைய கனவுகளையோ, விளையாடுவதையோ விட்டுவிடமாட்டேன். கடந்த ஆண்டு முழங்காலில் காயம் ஏற்பட்டபோதுதான் என்னால் டென்னிஸ் விளையாட முடியாமற் போயிற்று. நேரம் வரும்போது நானும், சோயிப்பும் பெற்றோர் ஆகலாமென்று தீர்மானித்திருந்தோம். இப்போதுதான் அதற்கு காலம் கனிந்தது. குழந்தை பிறந்தபின்னர் மீண்டும் நான் டென்னிஸ் ஆட வருவேன். பல டென்னிஸ் வீராங்கனைகள் குழந்தை பிறந்த பிறகும் ஆட வந்துள்ளனர். வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தை பிறப்புக்கு பின்னர் மீண்டும் வேலைக்கு திரும்புவதில்லையா? இதற்காக குழந்தையைப் புறக்கணித்துவிட்டு டென்னிûஸ தொடரவும் விரும்பவில்லை,.
 இன்று இந்திய பெண்கள் டென்னிஸ், பேட்மின்டன், குத்துச் சண்டை, மல்யுத்தம் என பல விளையாட்டுத் துறைகளில் பதக்கங்களை வாங்கி குவிக்கத் தொடங்கியுள்ளனர். இன்று மட்டுமல்ல, நீண்ட காலமாகவே கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்குத்தான் பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. மேரிகோம், சாக்ஷி மாலிக், பி.வி.சிந்து போன்றவர்களைப் பற்றிய தகவல்கள் இந்தநாடு பெருமை கொள்ளும் வகையில் இப்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகின்றன. இதே போல் சமூக வலைதளங்களில் வெளியாகும் பல கருத்துகளுக்கு நான் தனிப்பட்ட முறையில் பதலளிக்கவும் விரும்பவில்லை பொது மக்கள் பார்வையில் நாங்கள் இருப்பதால், எங்களைப் பற்றி நல்லதையோ, தவறையோ சொல்லக்கூடும். அதனால் நடுநிலைமையாக பதிலளிக்கவே விரும்புகிறேன்.
 முதன்முதலாக நான் ஆசிய போட்டியில் பதக்கம் பெற்றபோது என் வயது 15 விளையாட்டு வீரர்களுக்கு சினிமா நட்சத்திரங்களைப் போல் நீண்ட கால வாழ்க்கை கிடையாது. வெகு சீக்கிரத்திலேயே நான் விளையாட்டுத் துறைக்கு வந்துவிட்டதால், என்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவே சுயசரிதையை எழுதினேன். சுயசரிதை எழுதுகிற வயதா இது என்று பலர் கேட்டனர். என் குடும்பத்தினர், ரசிகர்களுக்காக மட்டுமல்ல எனக்காக எழுதப்பட்ட சுயசரிதை அது. மீண்டும் மற்றுமொரு புத்தகத்தையும் எழுதப்போகிறேன்'' என்கிறார் சானியா.
 - பூர்ணிமா
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com