மாணவி... மனைவி... கேப்டன்... அழகி..!

ஷாலினி சிங்கின் வாழ்க்கையில்தான் எத்தனை மாற்றங்கள்... திருப்பங்கள்.. நாட்டின் எல்லையில் வீரமரணம் அடைந்த கேப்டனின் மனைவியாக
மாணவி... மனைவி... கேப்டன்... அழகி..!

ஷாலினி சிங்கின் வாழ்க்கையில்தான் எத்தனை மாற்றங்கள்... திருப்பங்கள்.. நாட்டின் எல்லையில் வீரமரணம் அடைந்த கேப்டனின் மனைவியாக இருந்தவர், கணவனின் பெயர் சொல்ல ராணுவத்தில் சேர்ந்து கேப்டன் ஆனதென்ன.. பிறகு ராணுவத்திலிருந்து விடை பெற்று "திருமதி இந்தியா'வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதென்ன..! இத்தனைத் திருப்பங்களைச் சந்தித்த ஷாலினி சிங் மனம் திறக்கிறார்:
"எனக்கு திருமணமானபோது வயது பத்தொன்பதுதான். இந்திய ராணுவத்தில் மேஜராக இருந்த அவினாஷ் சிங்குடன் 1997-இல் திருமணம் நடந்தது. திருமணம் ஆனாலும் படிப்பை நிறுத்தவில்லை. தொடர்ந்து படிக்க கணவர் அனுமதித்திருந்தார். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கழிந்து 1999 -இல் மகன் துருவ் பிறந்தான். 
கணவர் காஷ்மீர் எல்லை பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். எப்போதாவதுதான் தொலைபேசியில் பேச முடியும். 2000 -ஆம் ஆண்டில் அலைபேசி பரவலாக இல்லை. தவிர.. அலைபேசியின் விலை அன்று ஆகாச விலை. எல்லை பகுதியில் ஆயிரம் வீரர்களுக்கு ஒரே ஒரு தொலைபேசி பூத். நீண்ட கியூவில் காத்திருந்து சில நிமிடங்கள் பேசுவார். அதுவும் சரிவரக் கேட்காது. ஆனாலும் பேசுவோம். துருவ்வின் மழலைச் சத்தம் கேட்டு அவினாஷ் பூரித்துப் போவார். அப்படியே நாட்கள் ஓடியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.
"மாணவி, மனைவி, தாய், மருமகள் என்று ஒவ்வொரு நாளும் பல பொறுப்புகளில் கடமை செய்துகொண்டிருந்தேன். 2001 செப்டம்பர் 28 -இல் எனக்கு வந்த தொலைபேசி அழைப்பு எல்லாவற்றையும் புரட்டி அலங்கோலமாக்கியது. பயங்கரவாதிகள் நாலு பேரை தனியாளாகச் சுட்டுக் கொன்ற அவினாஷின் மார்பில் எதிரியின் குண்டு பாய்ந்தது. உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகத் எனக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது. எனது நெஞ்சிலும் குண்டு பாய்ந்ததாக வலித்தது. உலகமே இருண்டது. இருபத்தொன்பதாவது வயதில் கணவர் வீர மரணம் அடைந்தார். அப்போது எனக்கு வயது இருபத்துமூன்று. நான் கணவரை இழக்க.. துருவ் அப்பாவை இழந்தான். சோகம் எங்கள் இருவருக்கும் சேர்ந்தே வரும் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. 
அந்த இளம் வயதில் வாழ்க்கை திடீரென்று அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. பலரும் வருவார்கள். ஏதோ சொல்வார்கள். போவார்கள். இவை எல்லாம் கனவில் நடப்பதாய் எனக்குத் தோன்றும். நாட்கள் போகப்போக... இழப்பு எப்படியானது என்று தெரியாமலேயே துருவ் எப்போதும் போல் மடியில் விளையாடிக் கொண்டிருந்தான். மகனுக்காக நான் மன தைரியத்துடன் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். 
நானும் கணவரைப் போல் ராணுவத்தில் சேர்ந்தால் என்ன என்று நினைத்தேன். முது நிலை படிப்பைப் பாதியில் விட்டு விட்டு ராணுவத்தில் சேர நடத்தப்படும் தேர்வுக்கு என்னைத் தயார் செய்தேன். தேர்வில் வெற்றி பெற்றேன். நேர்முகத் தேர்வு அலகாபாத்தில் நடந்தது. நான் துருவ் எனது பெற்றோர்கள் அலஹாபாத் சென்றோம். அவர்கள் வெளியில் துருவுடன் தங்க நான் பயிற்சி முகாமில் தங்க வேண்டிய கட்டாயம். பகலில் பயிற்சி தேர்வு இடைவேளையில், முகாமிற்கு வெளியே வந்து துருவ்வை சந்தித்துவிட்டுப் போவேன். இப்படி ஒரு வாரம் துருவ்வை விட்டுப் பிரிந்து இருந்தேன். கடைசியில் ராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்ந்தேன். 
ஆறுமாதம் பயிற்சிக்கு சென்னைக்கு அனுப்பினார்கள். துருவ்வை விட்டு ஆறு மாதம் பிரிந்திருக்க வேண்டிய கட்டாயம். ராணுவ உடையை அணிந்தேன். செருப்பு போய் பூட்ஸ் வந்தது. 
பயிற்சி முடிந்ததும் 2002 செப்டம்பர் 7-இல் ராணுவத்தில் அதிகாரியாக நியமிக்கப்பட்டேன். சில மாதம் கழித்து எனது கணவருக்கு "கீர்த்தி சக்கரா' விருது வழங்கப்பட்டது. என் கணவர் சார்பில், ராணுவ அதிகாரியான நான் ராணுவ சீருடையில் அன்றைய ஜனாதிபதி டாக்டர் கலாமிடமிருந்து பெற்றுக் கொண்டேன். அந்த நாளை என்னால் மறக்க முடியாது. 
ஆறு ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரிந்தேன். இடையில் எனக்குத் தூணாக நின்ற அப்பாவும் காலமானார். துருவ்விற்கு பதினாறு வயது நிறைவாகிவிட்டது. நானும் ராணுவத்திலிருந்து ஓய்வினைப் பெற்றுக் கொண்டேன். கணவரின் தீரச் செயலுக்கு அரசு அறிவித்த தொகை இன்னமும் கிடைக்கவில்லை. அதற்காகப் போராடி வருகிறேன். "படித்த, அதிகாரியாகப் பணி புரிந்த என்னால் அரசு அறிவித்த சன்மானத்தை வாங்குவதில் சிக்கல் உள்ளது. தாமதம் உள்ளது. சாதாரண படைவீரர் ஒருவரின் மனைவி என்ன பாடு பட வேண்டுமோ' என்று நினைக்கும் போது வருத்தமாக உள்ளது.
தற்சமயம் டில்லியில் வசித்து வருகிறோம். நான் ஒரு வேலையையும் தேடிக் கொண்டிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன், திருமதி இந்தியா அழகிப் போட்டியின் விளம்பரம் பார்த்து " என்னதான் நடக்கிறது.. என்று பார்ப்போமே' என்று கலந்து கொண்டேன். எனக்கு வயது இப்போது முப்பத்தொன்பது. பல்வேறு சுற்றுகள். வெவ்வேறான கேள்விகள். என்னை ‘Classic Mrs India 2017 Queen of Substance’ ஆகத் தேர்ந்தெடுத்தார்கள். எனக்கு கிரீடம் அணிவித்த தருணத்தில் "உங்களது இப்போதைய லட்சியம் என்ன..'' என்று கேட்டார்கள். "மகன் துருவ்வை அப்பா மாதிரி புகழ் பெற்றவனாக ஆக்கவேண்டும். '' என்கிறார் கேப்டன் ஷாலினி சிங்.
- கண்ணம்மா பாரதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com