முடியாதது எதுவுமில்லை!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுதில்லி ராஷ்டிரபதி பவனில் ஒரு விழா நடந்தது. ஐஸ்வர்யா ராய், எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முறையாக ஏறிய வீராங்கனை பச்சேந்திரி பால், ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ் போன்ற
முடியாதது எதுவுமில்லை!

இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுதில்லி ராஷ்டிரபதி பவனில் ஒரு விழா நடந்தது. ஐஸ்வர்யா ராய், எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முறையாக ஏறிய வீராங்கனை பச்சேந்திரி பால், ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ் போன்ற புகழ்பெற்ற சாதனைப் பெண்மணிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த சாதனைப் பெண்மணிகளுள் ஒருவராக அமர்ந்திருந்தார் மஞ்சு தேவி. படிப்பறிவில்லாத அந்தப் பெண் ஒரு சுமைதூக்கும் தொழிலாளி.
 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் ரயில்நிலையத்தில் 2013-ஆம் ஆண்டிலிருந்து சுமை தூக்குபவராக வேலை செய்கிறார் மஞ்சு தேவி. அந்த ரயில்வே ஸ்டேஷனின் முதல் பெண் போர்ட்டர் மட்டுமல்ல அவர், வடமேற்கு ரயில்வேயிலும் அவர்தான் முதல் பெண் சுமைதூக்கும் தொழிலாளி.
 டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடக்கும் விழாவுக்கு அவருக்கு அழைப்பு வந்தபோது, "அய்யய்யோ... நானா என்னால் முடியாது. அங்கே வந்து போக எல்லாம் என்னால் முடியாது. எனக்கு மூன்று குழந்தைகள். அவர்களை விட்டுவிட்டு என்னால் வர முடியாது'' என்று மறுத்திருக்கிறார். அருகில் இருந்தவர்கள் எல்லாரும் பேசி அவரைச் சம்மதிக்க வைத்து டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அவருக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் "சாதனைப் பெண்மணி' விருது கொடுக்கவே டெல்லிக்கு அழைத்திருந்தார்கள்.
 மஞ்சு தேவியின் சொந்த ஊர் ஜெய்ப்பூர் அல்ல. ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சுந்தர்புரா என்கிற கிராமம்தான் அவருடைய சொந்த ஊர். எதற்கு ஜெய்ப்பூருக்கு வந்தார்?
 மஞ்சு தேவியின் கணவர் மகாதேவ் ஜெய்ப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் சுமைத்தூக்கும் தொழிலாளி. நீண்ட காலமாக கல்லீரலில் பாதிப்பு. ஐந்தாண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார். அப்போது மஞ்சு தேவிக்கு வயது 33. "மூன்று குழந்தைகள். கல்வியறிவில்லை. குழந்தைகளை எப்படிக் காப்பாற்றுவது? என்ன வேலை செய்வது?' கவலையில் மூழ்கி இருந்த மஞ்சுவின் கண்களில் பட்டது கணவர் மகாதேவின் போர்ட்டருக்கான அனுமதி, அடையாளவில்லை. அதன் எண் 15.
 "நான் போர்ட்டர் வேலை செய்தால் என்ன?'
 மஞ்சு தேவி உடனே ரயில்வே சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களைப் போய் பார்த்தார். அவரால் போர்ட்டர் வேலை செய்ய முடியுமா? என்று முதலில் சந்தேகத்துடன் பார்த்த சங்கத்தினர், மஞ்சுதேவியின் மன உறுதியை அதற்கும் மேலாக அவருடைய அழுகையைப் பார்த்து வேறு வழியின்றி ரயில்வே அதிகாரிகளிடம் அழைத்துச் சென்றனர்.
 "ரயில்வேயில் பெண் போர்ட்டர்களே இல்லையே?'' கைவிரித்தனர் அதிகாரிகள். மஞ்சு தேவி கெஞ்சினார். வேறு வழியின்றி அனுமதி கொடுத்தனர். ரயில்வேயில் சுமைதூக்கும் பெண் தொழிலாளி என்பவரே இல்லையாதலால், அவர்களுக்கென யூனிபார்மும் இல்லை. அதற்குப் பிறகு, அதிகாரிகள் கலந்து பேசி யூனிபார்மை முடிவெடுத்திருக்கிறார்கள். ஏதோ ஒரு வேகத்தில் மஞ்சுதேவி வேலைக்கு வந்துவிட்டாரே தவிர, போர்ட்டர் வேலை செய்வதில் ஆயிரம் சிரமங்கள் இருந்தன. 100க்கும் அதிகமான ஆண் போர்ட்டர்கள் மத்தியில் ஒரு பெண் போர்ட்டர்.
 "அவர்களுக்கு மத்தியில் உட்கார்வதற்கே முதலில் உடம்பெல்லாம் கூசியது. நான் நினைப்பதை அவர்களிடம் பேச கூட முதலில் தயக்கமாக இருந்தது'' என்கிறார் மஞ்சுதேவி.
 ரயில் பயணிகளோ இந்தப் பெண்ணால் சுமையைத் தூக்க முடியுமா? என்று சந்தேகப்பட்டு, ஆண் போர்ட்டர்களிடம் சுமையைக் கொடுத்தனர். உண்மையில் ஒரு 30 கிலோ எடையைத் தூக்கும் உடல் வலிமை கூட மஞ்சுதேவிக்கு அப்போது இல்லை. வறுமையால் மஞ்சுதேவியின் குடும்பம் வாடிப் போனது.
 "வேலைக்குச் சேர்ந்த புதிதில் நான் வேலை செய்த நேரத்தைவிட அழுத நேரமே அதிகம்'' என்கிறார் மஞ்சுதேவி. தப்பாக முடிவெடுத்துவிட்டதாக குழம்பித் தவித்திருக்கிறார். மஞ்சுதேவியின் அம்மாதான் அந்த நேரத்தில் மஞ்சுதேவிக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி அவரை தைரியமிக்க பெண்ணாக மாற்றியிருக்கிறார். அதற்குப் பின்தான் மஞ்சு தேவி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். பிரச்னைகள், கஷ்டங்கள் இருக்கின்றன. முதலில் என்ன சூழ்நிலை இருக்கிறதோ, அதை ஒத்துக் கொள்வது, அதன் பிறகு அதிலிருந்து மீள படிப்படியாக முயற்சி செய்வது என்ற முடிவே அது.
 கிராமத்தில் மஞ்சுதேவியின் அம்மாவுடன் இருந்த குழந்தைகள் ஜெய்ப்பூருக்கு வந்தார்கள். 3 ஆயிரம் ரூபாய் வாடகையில் ஓர் அறையே உள்ள வீட்டில் வாழ்க்கை. குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தாயிற்று. "எனது கிராமத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அவர்கள் தினம்தோறும் ஒழுங்காகப் பள்ளிக்குச் செல்கிறார்களா? என்று கூட என்னால் கண்காணிக்க முடியாது. போர்ட்டர் வேலையில் கிடைக்கும் கூலியில் வாரத்துக்கு ஒருமுறை கிராமத்துக்குப் போய் அவர்களைப் பார்த்துவிட்டு வருவதும் கூட என்னால் முடியாமல் போய்விடும். அதனால் அவர்களை ஜெய்ப்பூருக்கு அழைத்து வந்துவிட்டேன்'' என்கிறார் மஞ்சுதேவி.
 ""போர்ட்டர் வேலைக்குச் சேர்ந்த தொடக்கத்தில் ஒரு சிறிய சூட்கேúஸ பெரிய மலை மாதிரி எனக்குத் தோன்றும்'' என்று கூறும் மஞ்சுதேவி, இப்போது 80 கிலோ பொருள்களைக் கூட அனாயசமாக தூக்கி, வண்டியில் வைத்து இழுத்துச் செல்கிறார்.
 "இந்த போர்ட்டர் வேலையில் உள்ள ரிஸ்க், பெருங்கூட்டம் உள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் சுமையையும் இழுத்துக் கொண்டு மிக வேகமாக உரிய ரயில்பெட்டியை நோக்கி விரைந்து செல்வதுதான்'' என்கிறார்.
 காலை 5.00 மணிக்கே ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்துவிடும் மஞ்சுதேவி, ரயில்வே ஸ்டேஷனின் நுழைவு வாயிலில் நின்று கொண்டு சுமை தூக்க வாய்ப்பளிக்கும் ரயில் பயணிகளுக்காகக் காத்திருக்கிறார். இவ்வளவுதான் இன்றைக்கு கூலி கிடைக்கும் என்று சொல்ல முடியாது. என்றாலும் மஞ்சுதேவி தனது குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
 "நம்மால் முடியும் என்று நாம் நினைக்க ஆரம்பித்தால், நம்மால் முடியாதது என்று எதுவுமில்லை'' என்கிறார் உறுதியாக மஞ்சுதேவி.
 - ந.ஜீவா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com